கோமாளி மாமா-11 : உன்னை நம்பு
ஓவியம், கதை: மு.கலைவாணன்
விடுமுறை நாள். தோட்டத்து மரத்தடியில் கதை கேட்பதற்காகவே மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர்.
ஆனால், கதை சொல்லும் கோமாளி மாமாதான் இன்னும் வரவில்லை. அவருக்காகக் காத்திருக்கும் அந்த நேரத்தில்…
பறை இசை கற்றுக் கொடுக்கும் வேலு ஆசானிடம், தான் பறை இசைப் பயிற்சி பெற்றதைப் பற்றியும், பயிற்சி பெற்ற அனைவரும் அடுத்த வாரம் ஊரில் நடக்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பறை இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் மல்லிகா கூறினாள்.
மாணிக்கமும், செல்வமும் மிகவும் மகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்தனர்.
“மல்லிகா! விழாவுக்கு நாங்களும் வரலாமா?” என ஆவலாய்க் கேட்டான் செல்வம்.
“நீங்க வராமலா?… பறை வாசிக்க நல்லா கத்துக்கிட்டாலும்… பல பேர் முன்னாடி வாசிக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு… கூட்டத்தைப் பா£த்ததும் எனக்கு கை, கால் நடுங்குமோன்னு கவலையா இருக்குடா…” என்றாள் மல்லிகா.
“கவலையே படாதே! நானு, செல்வம், கோமாளி மாமா எல்லோரும் விழா நடக்குற இடத்துக்கு சீக்கிரமாவே வந்து முன்னாடி சீட்டுல உக்காந்துக்கிறோம். நீ பறை வாசிக்கத் தொடங்குனதும்… கை தட்டி விசில அடிச்சி… பாராட்டி அமர்க்களப்படுத்திடுறோம்” என்றான் மாணிக்கம்.
“ஆமா… ஆமா… மேடையில பறை அடிச்சி ஆடும்போது நீ எங்களை மட்டும் பாத்து ஆடு. அப்ப பயமும் வராது, நடுக்கமும் வராது. ஏன்னா நாங்க உனக்குப் பழக்கமானவங்க. புதுசா உள்ளவங்களைப் பாத்தாதான் பயமா இருக்கும்” என்றான் செல்வம்.
“என்ன? பெருசா ஏதோ திட்டம் போடுறீங்க போலிருக்கு..” எனக் கேட்டபடி வந்தார் கோமாளி மாமா.
“ஆமா… மாமா! அடுத்த வாரம் நம்ம ஊருல நடக்க இருக்குற புத்தக வெளியீட்டு விழாவுலெ மல்லிகாவும் அவங்ககூட பயிற்சி பெற்ற நண்பர்களும் சேர்ந்து நடத்துற பறை இசை நிகழ்ச்சி நடக்குதாம். அதுலெ பறை அடிச்சு ஆடப்போற மல்லிகாவை இப்ப பயம் புடிச்சு ஆட்டுது” என்றான் செல்வம்.
“அதுக்காக கவலைப்படாதே! நானு, செல்வம், கோமாளி மாமா எல்லாரும் சீக்கிரமாகவே அங்கே வந்து முன் வரிசையில உக்காந்து நீங்க ஆடும்போது கை தட்டி, விசில் அடிச்சி உற்சாகப்படுத்தி பயத்தைப் போக்கிடுறோம்னு நான் யோசனை சொன்னேன் மாமா” என்றான் மாணிக்கம்.
“அடடா… நல்ல யோசனைதான். நீ முறையா பயிற்சி எடுத்துக்கிட்டுத்தானே ஆடுறே! அதுவும் அலங்காநல்லூர் வேலு ஆசான் கிட்டதானே பயிற்சி எடுத்திருக்கே? அப்பறம் ஏன் பயப்படுறே…? மகிழ்ச்சியா ஆட வேண்டியதுதானே” என்றார் கோமாளி மாமா.
“பயமில்லிங்க மாமா… கொஞ்சம் தைரியம் போதாது அவ்வளவுதான்” என கேலியாகச் சொன்னான் செல்வம்.
“எதுவானாலும் சரி… மேடையில பறை இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைக்கிறதே அரிது. அதிலேயும் பெண் குழந்தைகள் பறை வாசிக்கிறது எவ்வளவு பெரிய வாய்ப்பு! அந்த நிகழ்ச்சிக்காகப் பயப்படக் கூடாது. பெருமையா கம்பீரமா நிமிர்ந்து நின்னு வாசிக்க வேணாமா?’’ என உணர்ச்சியோடு சொன்னார் கோமாளி மாமா.
“ஆமா மாமா! உலகத்தில் உள்ள தோல் கருவி இசைகள் எல்லாத்துக்கும் தாயான பறையை நம்ம நாட்டுல ஜாதியின் பெயரால தாழ்த்தி, ஒடுக்கி அடிமைப்படுத்தி, அசிங்கப்படுத்தி வச்சிருந்ததை.. இன்னைக்கு விழா மேடைகள்லயும், திருமண நிகழ்வுகளிலேயும் இசைக்கிற சிறப்பான இசைக் கருவியா உயர்த்திப் பெருமை சேர்க்க எவ்வளவு பேரு பாடுபட்டிருப்பாங்க? அதுலெயும் இந்தப் பறையை பெண்கள் தொட்டுத் தோளிலே மாட்டி வாசிக்க வந்திருக்கிறது எவ்வளவு சிறப்பு! இதை தாழ்வா, ஏளனமா நினைக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இன்னைக்கு இந்தப் பறை எல்லாரும் இசைக்கிற இசைக் கருவியா மாறி இருக்கிறதை நான் உணர்ந்திருக்கேன். இதை வாசிக்கிறதை நான் ரொம்பப் பெருமையா நினைக்கிறேன் மாமா. ஆனா, பெரிய கூட்டத்துல எப்படின்னு கொஞ்சம் கலக்கமா இருந்தது… அதான்!!’’ என்று இழுத்தான் மல்லிகா.
“கவலையே படாதே மல்லிகா! உன்னால முடியும். உன்னை நம்பு. நாங்க வந்து முன்னாடி உக்காந்து கை தட்டிப் பாராட்டணும்னு எதிர்பார்க்காதே! நிகழ்ச்சி நல்லா இருந்தா பாக்க வர்ற எல்லாருமே கை தட்டிப் பாராட்டுவாங்க…” என்றார் கோமாளி மாமா.
“சரி… சரி… கவலையை விடு… கதையைக் கேப்போம்” என்றான் மாணிக்கம்.
“மாமா… நீங்க கதையைச் சொல்லுங்க மாமா!” என ஆர்வமாகக் கேட்டான் செல்வம்.
உம்… வரலாற்று உண்மையான ஒரு கதையைச் சொல்றேன்.
“ஜெர்மன் நாட்டுலே 1811ஆம் ஆண்டு பிறந்து 1866 வரை வாழ்ந்த பியானோ இசைக் கலைஞர் பிரான்ஸ் லிஸ்ட் பத்திய ஒரு தகவலைத்தான் நான் சொல்லப் போறேன்.
பிரான்ஸ் லிஸ்ட் பியானோ இசைக் கருவியை நல்லா வாசிப்பாரு. அதுக்காக சிறந்த பியானோ இசைக் கலைஞர்கிட்டே பல நாள் பயிற்சியும் எடுத்துக்கிட்டாரு. ஆனாலும், நீ வாசிக்கிறது சரியில்லைன்னு அவர் அவரைக் கேலி செய்தார். அதனாலே இசை நிகழ்ச்சி நடத்த ரொம்ப கூச்சப்பட்டாரு. இந்த மன உளைச்சல்ல இருந்து எப்படி விடுபடுறதுன்னு சிந்திச்சு ஒரு முடிவு எடுத்தாரு.
எளிதிலே உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு பெண்மணியைத் தேடிக் கண்டுபிடிச்சாரு. அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் பணமும் கொடுத்து, ரகசியமா ஒரு சேதியையும் சொல்லி அவரோட நிகழ்ச்சிக்கு வரச் சொல்லிட்டாரு.
அந்தப் பெண்மணியும் பிரான்ஸ் லிஸ்ட் நடத்துற பியானோ இசை நிகழ்ச்சிக்கு வந்து முன்னாடி உக்காந்துக்கிட்டாங்க.
இசை நிகழ்ச்சி தொடங்கி நடந்தது. கொஞ்ச நேரத்தில ஒரு சோகமான இசையை பிரான்ஸ் லிஸ்ட் வாசிச்சாரு. அப்ப அந்தப் பெண்மணி அதைக் கேட்டு மனமுருகி, கண்ணீர் சிந்தி, மயங்கி விழுந்துட்டாங்க. (இதுதான் பிரான்ஸ் லிஸ்ட் சொன்ன ரகசியம்).
இசை நிகழ்ச்சிக்கு வந்த மத்தவங்க எல்லாம் அசந்து போயிட்டாங்க. இதைப் பார்த்த பிரான்ஸ் லிஸ்ட்டுக்கு தெம்பு வந்தது. தாழ்வு மனப்பான்மை போயிடுச்சு. அந்த நிகழ்ச்சி சிறப்பா அமைஞ்சுது.
இப்படி ஒவ்வொரு இசை நிகழ்ச்சிக்கும் ஒரு பெண்ணை, தேடிக் கண்டுபுடிச்சு மயங்கி விழணும்ங்கிற ரகசியத்தைச் சொல்லி ஏற்பாடு செய்தாரு. அப்படி சில நிகழ்ச்சிகள் நடந்துச்சு.
ஜெர்மனியில பிரான்ஸ் லிஸ்ட்டுனுடைய பியானோ இசை நிகழ்ச்சி நடந்தாலே சோக இசைக்கு ஒரு பெண்மணி மயங்கி விழுவாங்கன்னு வழக்கமாயிடுச்சு. ஊரெல்லாம் இதே பேச்சு.
ஒரு இசை நிகழ்ச்சிக்கு இதே போல ஒரு பெண்ணை ஏற்பாடு செய்துட்டாரு பிரான்ஸ் லிஸ்ட். நிகழ்ச்சி அரங்கத்தில பார்வையாளர்கள் மத்தியில அந்தப் பெண்ணும் வந்து உக்காந்துட்டாங்க. வழக்கம்போல சோக இசையை ரொம்ப நுணுக்கமா பியானோவுல வாசிக்க ஆரம்பிச்சாரு. அப்படியே தான் ஏற்பாடு செய்த பெண் மயங்கி விழுதான்னு கவனிச்சாரு. அந்தப் பெண் மயங்கி விழுந்தாத்தானே இவருக்கு தன்னம்பிக்கை வரும், உற்சாகமாக வாசிப்பாரு? ஆனா, இந்த முறை வந்த பெண் இவரு வாசிக்கிறதையே கவனிக்கலே. தான் வாங்கிக்கிட்டு வந்த பாப்கானை ருசிச்சுத் தின்னுக்கிட்டிருந்தா.
அதைப் பாத்தாரு பிரான்ஸ் லிஸ்ட். அவ்வளவுதான் அடுத்த நொடியில் அதிர்ச்சியிலே அவரு மயங்கி விழுந்துட்டாரு.
தாழ்வு மனப்பான்மையைப் போக்க, அடுத்தவங்களை நம்புனதாலே வந்த ஆபத்து இது.
அவரு… தன்னை நம்புன பிறகு பல சாதனைகள் செய்திருக்காரு. பிற்காலத்திலே ‘ஹங்கேரி நாட்டுப்புற இசையில் கற்பனை’ என்ற இசைக்கோவையையும், ‘அதி உற்சாகம் தரும் கட்டுக்கடங்காத ஆக்கம்’ அல்லது ‘உணர்ச்சியைத் தூண்டும் இசைத் துணுக்கு’ எனும் இசைக் கோவையையும் வெளியிட்டுள்ளார். இவையெல்லாம் பியானோ இசைச் சிறப்பின் காரணமாக இன்றும் உலகம் முழுதும் உன்னதப் படைப்புகளாக உலா வந்து புகழப்படுகின்றன.
அதனாலே ஒவ்வொருத்தரும் தன் மேலே வைக்கிற நம்பிக்கைதான் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தலை நிமிர்ந்து நிக்கிற ஊக்கத்தைத் தரும்.
அடுத்தவங்களை நம்பினா சில நேரம் காலை வாரிடும்…’’ எனக் கதையைச் சொல்லி முடித்தார் கோமாளி மாமா.
மல்லிகாவின் பக்கம் திரும்பி, “என்ன மல்லிகா.. இப்ப சொல்லு, நீ என்ன செய்யப் போறே…? என்றார். “என்னை நம்பி எடுத்த செயலை வெற்றிகரமா முடிப்பேன். நெஞ்சை நிமிர்த்தி பறையை முழக்குவேன்’’ என நடந்தாள் மல்லிகா.
– மீண்டும் வருவார் கோமாளி