பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும்.
“வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா?
2020 என்ற இந்த கொடுமையான, பல லட்சம் உயிர்களை உலகமெங்கும் பலிவாங்கிய கோர முகங் கொண்ட கொரோனா (கோவிட் – 19) நோய் புகுந்து ஒரு கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், அதற்கெதிராக அறிவியல், மருத்துவத் துறையில் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, எஞ்சி வாழும் மக்களைக் காப்பாற்ற முழுவீச்சாக பயன்படக்கூடிய தடுப்பூசி, இங்கே எல்லோருக்கும் கிடைக்கும் ஆண்டாக 2021 ஆம் புத்தாண்டு அமையும் என்ற நல்ல நம்பிக்கையில் தான், புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் என்று கூறுவதற்காகத்தான் “வாழ்த்து’’ என்று சுருக்கமாகக் கூறினேன் _ புரிகிறதா?
மற்றவர்களின் துன்பம், துயரம், சோகம் எல்லாவற்றையும் விட, நம் பேத்தி பேரன்கள் பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வகுப்பறையில் கூடிக் குலவி, நட்புறவை வளர்த்து மகிழவேண்டிய _ கிடைத்தற்கரிய மாணவப் பருவத்தில் ஏறத்தாழ ஒரு பகுதியையும். மாணவர்கள் கல்வி பயிலச் செல்லும் வாய்ப்பையும் தேர்வெழுதி அறிவினைப் பரிசோதித்து, உழைப்பிற்கு மரியாதை கொடுப்பதையும் அந்த பாழும் கொள்ளைத் தொற்று தடுத்துவிட்டது கொடுமையிலும் கொடுமையல்லவா?
அதுமட்டுமா மாணவச் செல்வங்களே, உங்களது அருமைப் பெற்றோர்களுக்குப் பலவகையில், பலமுனைகளில் செல்வ இழப்பு, சுகாதார இழப்பு, வேலை இழப்பு முதலிய பல இழப்புகளை ஏற்படுத்திய ஆண்டாக அல்லவா கொரோனா சூழ் 2020 ஆம் ஆண்டு இருந்தது!
கிராமப்புறப் பேத்தி, பேரன்களில் சிலருக்கு கைத்தொலைப்பேசி இல்லை. எப்படி ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியும் என்ற கவலையில், இயலாமையால் அவசரப்பட்டு தங்கள் வாழ்வை முடித்துக் கொண்ட தவறான தற்கொலை முடிவினையும் கண்ட ஒரு காலகட்டமாக அமைந்து விட்ட மிகப்பெரிய சோகப் படலம் அல்லவா?
இதெல்லாவற்றையும் விரட்டியடிக்க, புது உற்சாகம், தெம்புடன், கொரோனாவுக்கான தடுப்பூசி தொற்றைக் குறைக்கும் என்ற மாற்றத்தை வரவழைக்கும் மகத்தான ஆண்டாக 2021 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும் என்ற நன்னம்பிக்கையை நாம் கொள்கிறோம். (இப்போது வடிவம் மாறிய புதிய கோவிட் பற்றிய செய்திகள் வந்தாலும் அவற்றையும் மனிதகுலம் வெற்றிகொள்ளும்)
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம்மில் பலர் அல்லது சிலர் புதுப்புது உறுதிகளை மனதில் ஏற்றுச் செயல்படுத்த முடிவு செய்து, சில காலம் கடைப்பிடித்து அப்புறம் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள். உங்களில் சிலருக்காவது இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா?
அதை நினைவுபடுத்திக் கொண்டு புதிய உற்சாகத்துடன் புதிய செயலுறுதிகளை மேற்கொள்ள திட்டமிடுங்கள்!
சின்னச்சின்ன செயல்கள்தான்! ஆனால், அவற்றைச் செய்து முடிப்பதற்கு இடையில் சோம்பல் குறுக்கிடக் கூடாது. உறுதியான பழக்கத்தைக் கடைப்பிடித்து பழகிவிட்டால் அது பிற்காலத்தில் பல நல்ல முடிவுகளுக்கும், செயல் ஆக்கங்களுக்கும், வெற்றிகளுக்கும் உங்களை அழைத்து செல்லும் என்பது உறுதி பேத்தி பேரன்களே!
1. இரவில் பல் துலக்குவோம்!
பல்துலக்குவது காலையில் எழுந்தவுடன் நாம் கடைபிடிக்கும் கட்டுப்பாடான பழக்கம் தான்!
இரவு படுக்கப்போகு முன் பல் துலக்கிவிட்டு – சில நிமிடங்கள் தான் (2 அல்லது 3 மணித்துளிகள் _ நிமிடங்கள் தானே) படுக்கப்போவதை அன்றாடம் தவறாத பழக்கம் ஆக்கிக்கொண்டால் அது உங்கள் உடல் நலத்தை பேணிக்காத்துக் கொள்ளப் பெரிதும் பயன்படும்.
இரண்டு மூன்று நாள்கள் செய்துவிட்டு பிறகு ஒருவகை சோம்பலால் நிறுத்திவிடும் நிலைக்கு நீங்கள் ஆளாகிவிடக்கூடாது. இரவு சாப்பாட்டிற்கு பின் படுக்கைக்குப் போகுமுன் பல்துலக்குவது, காலையில் பல்துலக்குவதை விட மிக முக்கியம் என்பது மருத்துவரின் அறிவுரை!
காரணம் தெரிந்தது தானே!
இரவு மட்டுமல்ல அதற்கு முன் சாப்பிட்ட சிறு தீனிகள், இடைத் தீனிகள் முதலிய பலவற்றால் பற்களின் இண்டு இடுக்குகளின் உள்ளே சேர்ந்திருக்கும் துணுக்குகள், இரவு பல்துலக்குவதாலும் வாய்க்கொப்பளிப்பதாலும் வெளியேற்றப்பட்டு, பற்கள் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்க உதவி செய்கிறது என்பதால்தான்.
எனவே வருகிற ஜனவரி 1 முதல் உங்களில் எத்தனை பேர் இதை துவக்குவீர்கள் என்று எனக்கு மின்னஞ்சல், அஞ்சல் மூலம் எழுதிச் சொல்வீர்களா?
2. சாப்பிடும்போது தொலைக்காட்சி வேண்டாம்
சாப்பிடும்போது தொலைக்காட்சி முன் வைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதனை இனிமேல் கடைப்பிடிக்க மாட்டோம். தனியே சாப்பாட்டு மேசையிலோ அல்லது தனி உணவுக் கூடத்திலோ, சாப்பிடும் சாப்பாட்டு ருசியைத்தவிர வேறு சிந்தனைக்கு இடம் தராமல், மனதை அதில் செலுத்தி, குடும்பத்தாருடன் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து, குறிப்பாக, உணவை ரசித்து சுவைத்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
“தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு சாப்பிடமாட்டேன்; ஒரு வேலை ஒரு நேரத்தில் (One at a time – That too with mindfulness)’’
என்றே கடைப்பிடிப்பேன்” உறுதி ஏற்றுச் செயலாற்ற முன்வரவேண்டும்.
3. குறுக்கிட்டுப் பேசும் பழக்கத்தைத் தவிர்ப்போம்!
இது சற்றுக் கடினம். ஆனால் பழகிவிட்டால், ‘பலித்துவிட்டால்’ பெரும் பயனை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பேரக் குழந்தைகளே!
மற்றவர்கள் பேசும்போது குறுக்கிட்டுப் பேசும் பழக்கம் _ உங்களிடம் என்ன, நம்மில் பலருக்கும் வழக்கமாகி உள்ள ஒரு விரும்பத்தகாத பழக்கம். அதைக் கைவிட்டு, முழுமையாக மற்றவர்கள் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் காத்திருந்து, பிறகு உங்கள் பதிலையோ கருத்துகளையோ கூறலாம்! (More listening than abrupt reply) குறுக்கிடாமல் கவனமாகக் கேட்டுப் பழகுதல் என்பது ஒரு உயர்ந்த உன்னதப் பண்பாகும்.
இந்தப் பண்பையும் பழக்கத்தையும் இந்தக் குழந்தைப் பருவத்திலேயே நீங்கள் வளர்த்துக் கொண்டால், அது வாழ்வின் வெற்றிக்குச் சரியான அடித்தளமிட்டு, உங்களை உயர்த்தும் என்பது நிச்சயம். எனவே இப்பயிற்சியை இப்போதே ஆரம்பியுங்கள்.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்’’ என்பதால் இப்பொழுது துவக்கினால் பலமடங்கு வெற்றி அறுவடை உங்களுக்குக் கிட்டும்! நம் அனைவரையுமே மகிழ்ச்சி அடையச் செய்யும்!
4. காலந்தவறாமை (Punctuality):
எதையும் காலந்தவறாது செய்ய வேண்டும். 10 மணி பள்ளி என்றால் 9.55க்கே அங்கே இருப்பேன். 10 மணி என்றால் எனக்கு 10 மணி தான். 11 மணி அல்ல என்ற பழக்கத்தை இதற்குமுன் எப்படி நீங்கள் இருந்திருந்தாலும் இந்தப் புத்தாண்டு முதல், குறித்த பணியை, குறித்த காலத்தில் செய்யப் பழகுவேன் என்று உறுதி கொள்ளுங்கள். சாக்குப் போக்கு சமாதான விளக்கங்கள் கால தாமதத்திற்குத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் அதன் மூலம் பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது!
புரட்சிக்கவிஞர் சொல்லும் ஒரு வரி உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் மறக்கக்கூடாத முக்கியமான விதி-.
“கடிகாரம் ஓடு முன் ஓடு”
மறவாதீர்!
5. நன்றி கூறுவோம்!
நன்றி (Thanks) என்ற சொல் எப்போதும் நமக்குத் தேவையான மூச்சுக் காற்றாக வாழ்க்கையில் அமைய வேண்டும்.
யார் என்ன உதவி செய்தாலும் உடனே தானியங்கி (Automatic) போல் நன்றி எனச் சொல்லும் வழக்கத்தையும் செயலுறுதியாக ஆக்கிடுங்கள்.
அய்ந்து விரல்களை விரிப்பது போல இந்த அய்ம்பெரும் கருத்துகளை மனதில் பதித்து, செயலில் விரித்துக்காட்டி வாழ்க்கையில் முன்னேற உறுதி கொள்ளுங்கள்!
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி