இணையா ரயில் தண்டவாளங்கள்
விழியன்
தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவேண்டும். ஓவியப் போட்டிக்குத் தேவையான பொருள்களை அத்தைதான் வாங்கித்தர வேண்டும். அத்தை நிச்சயம் வாங்கிக் கொடுப்பார். மகேந்திரனின் அப்பா வெளிநாட்டில் வசிக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா வருவார். அவன், அவனுடைய அத்தை கல்பனா மற்றும் அம்மா மூவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
அத்தையின் ‘புல்லட்’ சத்தம் கேட்டது. ஆம் அத்தை புல்லட்டில் தான் அலுவலகம் சென்று வருவார். எவ்வளவு தூரம் என்றாலும் புல்லட்டில் தான் செல்வார். ‘டுப்பு டுப்பு’ சத்தம் தெரு முனையில் வண்டி வரும்போதே கேட்க ஆரம்பித்துவிடும். அந்த ஊரில் சட்டை பேண்ட் போடும் பெண்மணிகளில் அத்தையும் ஒருவர். ஊரில் என்ன பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுத்துவிடுவார் அத்தை. இந்த தெரு மட்டுமல்ல எந்தத் தெருவில் குழி போட வந்தாலும் “டேய் கலக்கல் கல்பனா ஏரியா, ஒழுங்கா ரோட்டை மூடி சரியா வைங்க’’ என்று பயப்படுவார்கள் கான்ட்ராக்டர்கள். ஆனால் உண்மையில் மிகவும் பாசமானவர் அத்தை. மகேந்திரனுக்கு அவ்வளவு பிடிக்கும். வெளியே எங்கே செல்வது என்றாலும் அத்தையின் புல்லட்டில் தான் அழைத்துச்செல்வார். ஞாயிற்றுக் கிழமைகளில் தன் நண்பர்களோடு மரம் நட ஊர் ஊராகச் செல்வார். மகேந்திரனையும் உடன் அழைத்துச் செல்வார்.
“அத்தை, நாளைக்கு எனக்கு டிராயிங் போட்டி’’ என கல்பனா நுழையும் போதே சொல்ல ஆரம்பித்தான் மகி.
“இருடா, உள்ள வரும்போதேவா’’ என அம்மா அடக்கினார்.
“வாவ்! மகி, நீ கலந்துக்கறியா?’’ என்றபடியே முகம் கைகால் கழுவ ஆரம்பித்தார். முழுக்கால்சட்டையை முட்டி வரை மடித்துக்கொண்டு வெளியே வந்தார். அம்மாவுக்கு அப்படி அத்தை வந்தால் பிடிக்கவே பிடிக்காது. சிரித்தபடியே சரி செய்தார். பின்னர் மகியிடம், “என்ன தலைப்பு’’ என விசாரித்தார்.
“ரயில் தண்டவாளங்கள் அத்தை’’
“அட, நல்ல தலைப்பு. அதுல என்ன வரையப்போற?
“ரொம்ப சுலபம். ரெண்டு தண்டவாளம் ஒன்னுக்கு ஒன்னு தொடாம அப்படியே போகுது. கடைசியில ஒரு சூரியன்’’
“எனக்கு ஓவியம் வரைய சில பொருள்கள் வேண்டும். வாங்க அத்தை, கடைக்குப் போகலாம்’’ என்றான். கிளம்பினார்கள்.
மணி 4:30. அத்தை வண்டியை அந்த ஸ்டேஷனரி கடையில் நிறுத்தவில்லை. “அத்தை எங்க போறோம்? கடை போயிடுச்சு’’ என்றான். அம்மா வீட்டில் இருந்து கிளம்பும்போதே சலித்துக்கொண்டார். “அவன் ப்ராஜக்ட் ஒர்க் செய்யச்சொல்லி எவ்வளவு கேட்டிருப்பான். ஆனா ஒன்னாச்சும் செய்து கொடுத்தியா, இப்ப ரெண்டு கலர் பென்சில் வாங்க கிளம்பிட்டீங்க’’ என்றார். வண்டி அந்த பொறியியல் கல்லூரியின் முன்னர் திரும்பியது. மண் சாலை வழியே ஒரு ரயில்வே கிராசிங்கை அடைந்தார்கள். கேட் போடப்பட்டு இருந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தினார். சின்னதாக அங்கே மஞ்சள் நிறத்தில் ஓர் அறை இருந்தது. அத்தை நடக்க ஆரம்பித்தார், எதுவும் பேசாமல் மகி பின் தொடர்ந்தான்.
மொத்தம் நான்கு ஜோடி தண்டவாளங்கள் இருந்தன. இரண்டு பக்கமும் ரயில் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. முள்வேலிகளுக்கு நடுவே செல்லும் ஒற்றையடிப் பாதையில் இருவரும் நடந்து சென்றனர்.
“மகி, நீ ரயிலில் போயிருக்கியா?’’
“ஆமா அத்தை, அப்பா வந்தப்போ புனேக்கு ஒருதடவை போனோம். ஏசி கோச்சில் போனோம். செம சூப்பரா இருந்துச்சு’’
“அப்ப ரயில் தண்டவாளத்தை ஏற்கனவே பார்த்து இருக்கியா?’’
“ஆமா ஆமா, ஜன்னல் பக்க சீட்ல உட்கார்ந்து நிறையவே பார்த்து இருக்கேன்’’
“ரயில்ல இருந்து பார்க்கிறதுக்கும் இங்கிருந்து பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நல்லா பாரு’’
சுத்தி முத்தி பார்த்துகிட்டே வந்தான் மகி. கற்கள் நிறைய இருந்தன. அதில் கருப்பு நிறத்தில் பெயிண்ட் ஊற்றினாற் போல இருந்தது. சில இடங்களில் கெட்ட வாடை. மகி ஒன்றைக் குறிப்பாகக் கவனித்தான். வழி நெடுகவே குப்பை குப்பை குப்பை. ரயிலில் பயணம் செல்லும் போது கதவினைத் திறந்து குப்பைகளை மக்கள் தூக்கிப்போட்டது நினைவுக்கு வந்தது.
ஒரு மைல் கல் போன்ற கல்லில் அத்தை அமர்ந்துகொண்டார். அத்தையின் மடியில் அவனும் அமர்ந்தான். “ரயில் வரப்போகுது. அங்க பாரு க்ரீன் சிக்னல்’’ என்று காட்டினார். ஆமாம், தூரத்தில் ‘கூ..கூ….’ என ரயில் ஊர்ந்து வந்துகொண்டு இருந்தது. அருகே வர வர வேகமெடுத்தது. வேகம்னா, படு வேகம். எத்தனை பெட்டிகள் இருக்குன்னு எண்ண நினைத்தான். ஆனால் அதற்குள் வேகவேகமாகக் கடந்துவிட்டது. அந்தக் காற்று மகிக்கு பிடித்து இருந்தது. ஆனால், முன்பை விட அந்த இடம் இன்னும் மோசமாகிவிட்டது. கீழே இருந்த காகிதங்களும், ப்ளாஸ்டிக் பொருள்களும், ப்ளேட்டுகளும் பறந்தன. இரண்டு பக்கமும் சிவப்பு சிக்னல் பார்த்ததும் தண்டவாளத்தை இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் கடந்தனர். நடு தண்டவாளத்தில் நின்று “ரெண்டு பக்கமும் பார்த்துக்க மகி’’ என்றார் அத்தை. அவன் கற்பனை செய்து வைத்திருந்த ஓவியம் மெல்ல மாறியது.
சிறுது தூரத்தில் முள்வேலிக்கு அருகே சலசலப்பு. இரண்டு சிறுமிகளின் தலைகள் மட்டும் தெரிந்தன. மகி என்னவென்று எட்டிப்பார்த்தான். “மகி அந்தப் பக்கம் பார்க்காதே!’’ என அவன் பார்வையின் திசை மாற்றினார். பின்னர் அந்த இரண்டு சிறுமிகளிடமும் கையசைத்தார் கல்பனா. “என்னாச்சு அத்தை’’ என்றான், சில நிமிடம் கழித்து. “அவங்க வீட்ல டாய்லெட் இல்லை அதனால் இங்க வந்து போறாங்க. உன்னைப் பார்த்ததும் கொஞ்சம் கூச்சப்பட்டாங்கன்னு நெனக்கிறேன்.’’
வண்டியை நோக்கி நடக்கும்போது மிகவும் மெதுவாக ஒரு கூட்ஸ் வண்டி அவர்களைக் கடந்தது. இல்லை கடக்கவில்லை கிட்டத்தட்ட நின்றேவிட்டது. இப்போது எத்தனை கோச் இருக்கின்றது என வசதியாக எண்ணி-விட்டான்.
“அத்தை மொத்தம் 55 கோச்.’’
பெருவிரல் காட்டிப் பாராட்டினார் அத்தை. வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். வழியில் அவன் கேட்ட பொருள்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். இரவு தூங்கும்போது அவன் தண்டவாளம் அருகே பார்த்ததை எல்லாம் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தான். பல கேள்விகளைக் கேட்கவும் செய்தான்.
மறுநாள் மாலை அத்தையின் புல்லட் சத்தத்தைத் தொடர்ந்து, அத்தை வரும்போதே “அத்தை, சூப்பரா வரைஞ்சிட்டேன்’’ என ஓவியத்தை நீட்டினான். அத்தைக்கு ஆச்சரியம். அவன் ஓவியத்துக்கு இப்படி தலைப்பு வைத்திருந்தான் “இணையாத ரயில் தண்டவாளங்கள்’’ அதில் தண்டவாளத்தின் வலது புறம் மாட மாளிகைகளையும் இடது புறத்தில் குடிசையையும் வரைந்து இருந்தான். வலப் புறத்திற்கும் இடப்புறத்திற்கும் அவ்வளவு வித்தியாசம் காட்டி இருந்தான். தண்டவாளத்திலும் அவ்வளவு செய்திகள் இருந்தன. கற்கள், பசைகள், குப்பை, காகிதம், சாப்பிட்ட தட்டுகள் என ஏராளம். முந்தைய தினம் நேரில் பார்த்ததில் இருந்து ஒரு படி மேலே சென்றிருந்தான்.
“ப்ரைஸ் எதுவும் கிடைக்கவில்லை அத்தை! ஆனால், கிட்டத்தட்ட எல்லாப் பசங்களும் என்கிட்ட வந்து இதைப் பார்த்துட்டு, பேசினாங்க. நிறைய கேள்வி கேட்டாங்க, இதை ஏன் இப்படி வரைஞ்சேன்னு கேட்டாங்க, தண்டவாளத்தில் இதெல்லாம் இருக்குமான்னு கேட்டாங்க. மற்ற தண்டவாளங்களில் உயிரே இல்லைன்னு சொன்னாங்க. சையின்ஸ் டீச்சர் மட்டும் என் கையைப் பிடிச்சு, “பரிசு வாங்கலைன்னு கவலைப்படாத மகி, உன்னோடது ரொம்ப நல்லா இருக்கு’’ன்னு சொன்னாங்க.
“நான் பரிசு வாங்கலேன்னு வருத்தப்படல. அவ்ளோ புது நண்பர்கள் கிடைச்சாங்க; அவ்ளோ பேசினாங்க’’
அனுபவத்தைவிட பெரிய பரிசு இல்லைன்னு அத்தை சொல்ல நினைத்தார்கள். உள்ளேயிருந்து அம்மா அத்தனை மகிழ்ச்சியோட வெளியே வந்தாங்க. “இரவுக்கு மகிக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு!’’ என்றவுடன் மூவரும் மகிழ்ச்சியாய் கத்திக் கொண்டே, துள்ளிக்குதித்து சாப்பிடச் சென்றனர்.