காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா?
அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என்று கூறுவர். இதை வைத்து நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூட ஒரு படத்தில் கேலி செய்வார்.
குறிப்பாக தாய் தந்தையரை இழந்தவர்கள் அவர்களது இறப்புக்குப் பின் ஆண்டுக்கு ஒரு முறை திதி (திவசம்) கொடுப்பர். ஒவ்வோர் அமாவாசைக்கும் அவர்களுக்குப் படைத்து காக்கைக்குச் சோறு வைப்பர். இறந்த தங்கள் பெற்றோர் காக்காயாக வந்து சாப்பிடுவதாக நம்புகின்றனர்.
இவையெல்லாம் உண்மையா என்றால் அறவே இல்லை. இவையெல்லாம் அப்பட்டமான மூடநம்பிக்கைகள். இறப்பவர்கள் மறுபிறவி எடுப்பதில்லை. இறந்தவர்கள் எல்லாம் காக்காயாகப் பிறப்பதும் இல்லை. மறுபிறவி என்பது அசல் முதல்தர மூட நம்பிக்கை.
இறப்பு என்பது உயிர்த் தன்மையை உடல் இழப்பது என்பதே. உயிர் என்பது ஓர் ஆற்றல். வெப்ப ஆற்றல், மின் ஆற்றல் போல உயிரும் ஓர் ஆற்றல்.
செப்புக் கம்பிக்கு நடுவே காந்தம் சுழற்றப்படும்போது செப்புக் கம்பியில் மின்சக்தி வரும். சுற்றுவதை நிறுத்தினால் கம்பியில் மின்சக்தி வராது.
அதேபோல் கல்லும் கல்லும் உரசினால் நெருப்பு வரும். அந்த நெருப்பு ஓர் ஆற்றல். அந்த நெருப்பை ஒரு விளக்கில் பிடித்தால் விளக்கு எரியும். அந்த நெருப்பால் இன்னொரு விளக்கைக் கொளுத்தலாம். முதல் விளக்கில் உள்ள நெருப்பே இந்த விளக்கிற்கு பிரிகிறது. புதிதாக இந்த விளக்கிற்கு நெருப்பு வருவதில்லை.
அதேபோல் உயிரும் பெற்றோர் உடலிலிருந்து பிள்ளைக்குப் பிரிகிறது. பிள்ளையின் உயிர் புதிதாய் வருவதல்ல.
எரியும் விளக்கை ஊதினால் நெருப்பு அணையும். அணைந்த அந்த நெருப்பு மீண்டும் வராது. ஆக, நெருப்பாக இருந்தாலும், மின் ஆற்றலாக இருந்தாலும் நீங்கினால் மீண்டும் வராது. அதேபோல் இறந்த உயிரும் மீண்டும் வராது; மீண்டும் பிறக்காது. எனவே, இறந்தவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் என்பது மூடநம்பிக்கை. அது உண்மைக்கு மாறான, அறிவியலுக்கு எதிரான நம்பிக்கை.
எனவே, இறந்தவர்க்குத் திதி கொடுப்பது, அமாவாசைக்குப் படைப்பது போன்றவை அறியாமையாகும்.
அதேபோல் இறந்தவர்கள் பேயாக அலைவார்கள், ஆவியாக வந்து பேசுவார்கள் என்று கூறுவது உண்மையல்ல. அவையெல்லாம் பொய்யான, மோசடியான கருத்துகள்.
விரதம் இருப்பதால் பலன் கிடைக்குமா?
அமாவாசை, சஷ்டி போன்ற நாள்களில் சாப்பிடாமல் விரதம் இருப்பர். அதனால் அருள் கிடைக்கும், நன்மை வரும் என்று நம்புகின்றனர். இதுவும் மூடநம்பிக்கையே.
உடலுக்கு உணவு தேவை. உண்ணாமல் விரதம் இருப்பது உடல் நலக்கேடு. வேண்டுமானால் மாதம் ஒரு முறை, ஒரு வேளை உண்ணாமல் இருப்பது நலம். அப்போதுகூட ப ழச்சாறு பருக வேண்டும். காலையில் எந்தக் காரணங்கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. இரவு முழுவதும் உண்ணாமல் உறங்கும் நாம், காலையில் கட்டாயம் உண்ண வேண்டும்.
உண்ணாமல் இருப்பதால் கடவுள் அருள் கிடைக்கும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையே. விரதம் இருந்தால், வேண்டுதல் செய்தால் படிப்பு வரும், மதிப்பெண் அதிகம் கிடைக்கும் என்பதும் மூடநம்பிக்கையே.
நாள்தோறும் படித்து, பயிற்சி ஏடுகள் எழுதினால்தான் மதிப்பெண் வரும். மற்றபடி வேண்டுதல், விரதம், முடிகயிறு, தாயத்துக் கட்டுதல், கடவுளுக்கு சூடம் ஏற்றுதல் போன்றவற்றால் மதிப்பெண் வராது.
எனவே, எதையும் அறிவோடு பகுத்துச் சிந்தித்து ஏற்க வேண்டும். கண்மூடித்தனமாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.