இயற்கை : வளரும் எவரெஸ்ட்
“எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’ன்னு உங்க மூளை கேள்வி கேக்குதா? என் மூளையும் இதே கேள்வியைத்தான் கேட்டது. ஆனா, நிஜமாகவே எவரெஸ்ட் வளர்ந்துடுச்சு.
நம்ம வீட்டில் இருக்கும் தரைஓடுகள்(Tiles) மாதிரி, இந்தப் பூமியில் கண்டத்தட்டுகள்(Tectonic Plates) இருக்கு. ஒரு தட்டில் இட்லியும், மினி இட்லியும் இருக்கு. எப்படி தனித்தனியா இருந்தாலும், இட்லி எல்லாத்தையும் சேர்த்து வைத்தால் எப்படி ஒரு வட்டமாக மாறுமோ, அதே மாதிரிதான் நம்ம பூமியும். எப்படி இட்லியும் மினி இட்லியும் தனித்தனியாக இருக்குதோ அதேபோல நிலமும் தனித்தனித் துண்டுகளாக இருக்கும். இந்த தனித்தனித் துண்டு நிலங்களைத் தான் கண்டத்தட்டுகள் என்கின்றோம்.
இருங்க, இருங்க…. கண்டத்தட்டுகள் தரைஓடுகள் மாதிரி என்றுதானே சொன்னேன். சரி அதுக்கு வரேன். தரைஓடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்ட வைக்கப்படுவதால், அழகிய வடிவம் தரையில் கிடைக்குது. அதுபோல கண்டத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டும், பிரிந்துகொண்டும் இருப்பதால்தான் உலக வரைபடம் இப்படி இருக்குது. தரைஓடுகளுக்கும் கண்டத்தட்டுகளுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. தரைஓடுகள் நகராது. ஆனால், கண்டத்தட்டுகள் நகரும். எவ்ளோ தூரம் நகரும்? ஓர் ஆண்டுகளுக்கு 5.08 செ.மீ நகரும். சிறிதும் பெரிதுமாக, பூமியில் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி 159 கண்டத்தட்டுகள் இருக்கின்றன. ஒரு கண்டத்தட்டு சுமார் 100 கி.மீ இருந்து 200 கி.மீ வரைக்கும் தடிமன் இருக்கும்! அதெல்லாம் சரி, மலைகளுக்கும் கண்டத்தட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கே! மலைகள் உருவாக கண்டத்தட்டுகளும் பூமிக்கடியில் இருக்கும் நெருப்புக்குழம்பும், மண்ணரிப்பும்தான் காரணம். இமய மலைத்தொடர் கண்டத்தட்டுகள் மோதியதால் உருவான மலைத்தொடர். பூமிக்குள்ள சில விசைகள் இருக்கின்றன. அந்த விசைகள்தான் மலைகள் வளரவும் உயரம் குறையவும் காரணம். Compressional stress தான் மலை வளரக் காரணம். ஓர் ஆண்டுகளுக்கு சுமார் 5 செ.மீ வரைக்கும் எவரெஸ்ட் வளரும். ஆனா, Tensional stress நிலநடுக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி எதாச்சும் நிலநடுக்கம் வரும்போது நிலம் இரண்டா உடையும். அப்போ மலை கொஞ்சமா பூமிக்குள்ள போக வாய்ப்பு அதிகம். அதனால தான், நிலநடுக்கம் வந்தா, மலையோட உயரம் குறையுது. 1934-ஆம் ஆண்டில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போ, சுமார் 2 அடி வரை எவரெஸ்டின் உயரம் குறைந்து இருக்கிறது. 2015-ஆம் ஆண்டில் நேபாளமும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்டின் உயரம் குறைந்து இருக்கலாம் என்ற கேள்வி வந்ததால, நேபாளமும் சீனாவும் தனித்தனியாக எவரெஸ்டின் உயரத்தைக் கணக்கிட்டாங்க. அப்போ நேபாள், பனியையும் சேர்த்துக்கணக்கிட்டு, 4.மீ அதிகமா அதாவது 8,848மீ. என்று சொல்லுச்சு. ஆனா, சீனா வெறும் பாறைவரை அளந்து, 8,844.43மீ. என்று சொல்லுச்சு. இதனால, மறுபடியும் 2019-இல் எவரெஸ்டின் உயரத்தை ஒன்னாச் சேர்ந்து கணக்கிடலாம்னு இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க. 2 நாடுகளும் சேர்ந்து 8.12.2020 அன்று எவரெஸ்டோட உயரம் 8,848.86 மீ. என்று ஒரு முடிவுக்கு வந்து சொன்னாங்க. 0.86மீ. அளவுக்கு எவரெஸ்ட் வளர்ந்து இருக்கு.
முதன்முதலில் எவரெஸ்டோட உயரத்தை முக்கோணவியல் மூலமா கணக்கிட்டாங்க. அப்புறம், Theodolite என்னும் கருவி மூலமா அளந்தாங்க. இப்பெல்லாம், செயற்கைக்கோள், தடங்காட்டி (GPS) மூலமா அளக்குறாங்க. இந்தத் தடவை, குழப்பம் கூடாதுன்னு நேபாள், செயற்கைக்கோள், லேசரைப் பயன்படுத்தும் Theodolite இன் நவீன பதிப்பு (Version) மூலமாகவும் அளந்து இருக்காங்க. அதோட இல்லாம, பாறைவரைக்கும் சரியா அளக்க Ground Penetrating Radar கருவியையும் பயன்படுத்தி இருக்காங்க. இதையெல்லாம் நேபாள் முதலில் தனியா அளந்துச்சு, பின்னர் சீனா தனியாக அளந்துச்சு. இப்படி தனித்தனியாக அளந்து அப்புறமா தான் இரு நாடுகளும் உலகின் உச்சி 8,848.86மீட்டர் என்று உலகத்துக்குச் சொல்லி இருக்காங்க.
இவ்ளோ விசயம் நடந்து இருக்குற எவரெஸ்டை நாம ஒருமுறை போய்ப் பார்க்கவேணாமா? நிச்சயம் வாழ்வில் ஒருமுறையேனும் போய்ப் பார்த்துவிடுங்கள். சரி, இப்போ, அவ்ளோ தூரம் வேணாம், பக்கத்துல இருக்குற மலைக்காச்சும் முகக்கவசம், சானிடைசர் எல்லாம் எடுத்துக்கிட்டு சமூக இடைவெளியோட போங்க. போயிட்டு வந்து மலையேறிய கதையைக் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்க.