சிறுவர் கதை : எலிகள் சேமித்த மழைநீர்
பச்சைவயல், அப்படினு ஒரு ஊர் இருந்துச்சு, அந்த ஊர் எப்பவுமே பசுமையாக காட்சியளிப்பதால் அந்த ஊருக்குப் பச்சைவயல்னு பெயர் வந்துச்சு
அந்த ஊர்ல எப்பவுமே சரியான நேரத்திற்கு மழை பெய்யறதுனால விவசாயிகள் எல்லாம் முப்போகமும் நெல் அறுவடை செய்வாங்க. விவசாயத்திற்கு மழைதானே ஆதாரம், மழை நிறையா பெஞ்சாத்தானே தண்ணீர்ப் பிரச்சனை இல்லாமல் அவர்களால் விவசாயம் செய்ய முடியும்.
பச்சைவயல் ஊர்ல நிறைய நெல் உற்பத்தி ஆகறதாலே அங்கிருந்த மக்களுக்கு உணவுப் பஞ்சமே இல்லை. மக்களைப் போலவே எலிகளும் மகிழ்ச்சியாக இருந்தன. ஏன்னா, எலிகளுக்கும் முக்கிய உணவு வயல்களில் தானே கிடைக்குது. எலிகள் தின்னது போக மீதமுள்ள நெல்தான் நமக்கு.
எப்பவுமே பச்சையாக இருந்த ஊர் இப்போது மெல்ல மெல்ல வறண்டுபோய் காட்சியளிக்காத் தொடங்கியது. இந்த வறட்சி யாருமே எதிர்பார்க்காத ஒன்று. கொஞ்ச நாளாகவே மழை பொய்த்து விட்டது. இருந்த நீராதாரங்களும் வற்றத் தொடங்கிவிட்டன. அடைமழை காலமும் கடந்து விட்டது. இனி வருவது வெயில் காலம். மழை பெய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
மக்களெல்லாம் என்ன செய்யறதுன்னு தெரியாம ரொம்ப கவலையில் இருந்தாங்க. இப்படியே போனா இனி உணவுக்கு பெரும் பஞ்சம் வந்துவிடும் என நினைத்துப் பயந்தார்கள்.
மறுபுறம் மனிதர்களை விட எலிகள் பெரும் அச்சத்திலும் கவலையிலும் இருந்தன. ஏன்னா, எலிகள் எல்லாம் அந்தப் பச்சை வயலை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தன. சரியான உணவில்லாமல் குட்டிகளின் எதிர்காலம் என்னவாகுமோ எனப் பயப்பட்டன.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் எலிகளின் வீடுகளில் இப்போது பெரும் நிசப்தமும், சோகமும் நிலவியது.
குட்டி எலி சாராவுக்கு நிறைய விசயங்கள் புரியவே இல்லை. எல்லோரும் சோகமாக இருப்பதைப் பார்த்தே உற்சாகமில்லாமல் சாராவும் சோகமாக இருந்துச்சு. என்னதான் பிரச்சனை என்று அம்மாவிடம் கேட்க எண்ணி அம்மா எலியிடம் சென்றது. அம்மாகிட்ட என்ன கேட்கறதுன்னே தெரியாம யோசிச்சு, யோசிச்சு….
“ஏமா எல்லாரும் சோகமாக இருக்கீங்க, ஏதாவது பெரிய பிரச்சனையா?’’.
சாரா இப்படிக் கேட்டதும் அம்மாவுக்கு ரொம்ப பாவமா போயிடுச்சு.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லே, இங்க வாடா செல்லம்’’ என தன் அருகில் அமர வைத்தது அம்மா எலி.
“இந்த உலகில் தண்ணீர் இல்லாததால மக்கள் யாரும் விவசாயம் பண்ணவே இல்ல, இப்படியே போச்சுன்னா நமக்கு இனி உணவே கிடைக்காது. நிலமெல்லாம் வறண்டு கிடக்குது, பின்பு எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?’’ என்றது அம்மா எலி.
“ஏமா தண்ணி இல்ல? எல்லா தண்ணியும் எங்கபோச்சு?’’ என சாரா சோகமாகக் கேட்டது.
“மழை பெய்தால்தானே தண்ணீர் இருக்கும். மழையும் இல்ல; அதனால தண்ணீரும் இல்ல’’
“ஓ, அப்படியா… அப்ப இதுக்கு முன்னாடி மழை நிறையா பெய்த போது இருந்த தண்ணி எல்லாம் எங்கம்மா போச்சு?’’.
“அதுவா அப்பெல்லாம் மக்கள் மழைநீரை யாருமே சேமிக்கவே இல்ல. அதனால அந்தத் தண்ணீர் எல்லாம் தேவையே இல்லாம கடல்ல போய்க் கலந்துருச்சு’’.
“சேமிக்கிறதுன்னா என்னம்மா’’ என்றது சாரா.
“அது ஒன்னுமில்லடா கண்ணு, நாம எப்படி எதிர்காலத் தேவைக்காக உணவு தானியங்களைச் சேமித்து வைக்கிறமோ அதுபோல மழை நீரையும் நாம பூமிக்கடியில் சேமித்து வைக்க வேண்டும். அப்படிச் சேமித்தால் இது போன்ற வறட்சி காலங்களில் பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்தலாம்’’.
“அப்படி செஞ்சிரிந்தா இந்தத் தண்ணிப் பஞ்சமே வந்திருக்கதி£தல்ல. நாமலும் ஜாலியா இருந்திருக்கலாம்’’.
“தண்ணீர் மட்டுமில்ல சாரா; எல்லாவற்றையும் நாம சேமித்து வைக்கப் பழகினால் ஆபத்துக் காலத்துல பயன்படுத்தலாம்’’ என்றது அம்மா எலி.
“ஏமா… உணவு தானியங்களை நாம வீட்டுக்குள்ள சேமிக்கிறோம்’’ மழைநீரை எப்படிம்மா சேமிக்கிறது’’.
“தேவையில்லாத இடங்கள், மழைநீர் அதிகமாகப் போகக்கூடிய இடங்களில் எல்லாம் பெரிய பெரிய குழி தோண்டி வெச்சா மழைக் காலங்களில் தண்ணீர் எல்லாம் அப்படியே நிலத்துக்கடியில் போயிடும்’’ என்றது அம்மா எலி.
“இவ்வளவு தான, இதை ஏன் இந்த மக்கள் பண்ணாமாக விட்டாங்க? சரி, நடந்ததை விடுங்க நாம ஏன் மழைநீரைச் சேமிக்கக் கூடாது’’ என்றது சாரா.
“நாம எப்படி கண்ணு சேமிக்க முடியும்? அது மனிதர்களால மட்டும் தான் முடியும்’’
“நாம வாழ்வதே குழிக்குள்ளதாம். நாமலே ஆழமாகக் குழி தோண்டி மழை நீரைச் சேமிக்கலாம்மா’’ என்றது சாரா நம்பிக்கை குரலில்.
“நல்ல யோசனையாத்தான் இருக்குத் இருந்தாலும்’’…. என இழுத்தது அம்மா எலி.
“இதுல யோசிக்கறக்கு ஒன்றுமே இல்லமா, இதை உடனே நம்ம நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லி எல்லோரும் ஆழமாக பெரிய குழிகளைக் தோண்டலாம்’’ என்றது சாரா.
மறுநாள் காலையில் எல்லா எலிகளும் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் குழிகளைத் தோண்ட ஆரம்பித்தன. செய்தி பக்கத்து ஊர்களுக்கெல்லாம் பரவ அங்கும் இது போன்று குழிகள் தோண்டப்பட்டன.
எலிகளின் இந்த முயற்சியைக் கேள்விப்பட்ட எறும்புகளும், கரையான்களும் தங்கள் பங்கிற்கு குழிதோண்ட ஆரம்பித்தன.
சில நாள்களில் பெய்த பெரு மழை அந்தக் குழிகளின் வழியாக மண்ணில் கலந்தது. சாராவும் நண்பர்களும் எதிர்காலத்தைப் பாதுகாத்தோம் என்கிற பெருமிதத்தில் மகிழ்ச்சியாக இருந்தன.
என்ன, குழந்தைகளே! நாமும் சேமிக்கத் தொடங்குவோமா _ மழைநீரையும் எல்லாவற்றையும்?