சின்னக்கதை
எத்தனை நாளைக்கு வாயடைப்பாய்?
அவசர அவசரமாய் தன்பேரனுடன் தெருக்கோடியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் பெரியசாமி. குளித்து பட்டையுடன் இடுப்பில் துண்டோடு கிளம்பியவர் பூசைக்குச் சிறிதளவு உதிரிப்பூக்களுடனும், கொழுக்கட்டையுடனும் பேரன் முத்துவுடன் கோயிலைச் சென்றடைந்த பெரியசாமி, உள்ளே சென்றதும் பிள்ளையாருக்கு உதிரிப்பூக்களைத் தூவிவிட்டு, முதலில் தன்தலையில் இருபுறமும் தன் கைகளால் குட்டிக்கொண்டார். பிறகு, தோப்புக்கரணம் போட ஆரம்பித்தவர் தொடர்ந்து சளைக்காமல் போட்டார். பிறகு, தன்பேரன் முத்துவை அதேபோல குட்டிக்கொள்ளச் செய்தார். பின்னர், தோப்புக் கரணமும் போடவைத்தார். பிறகு, சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
தாத்தா நாம் கோயிலில் விநாயகர் முன்பு நமது தலையில் குட்டிக்கொண்டோம், பிறகு தோப்புக்கரணம் போட்டோம், இவையெல்லாம் எதற்கு? என்று வீட்டில் தாத்தாவிடம் பேரன் முத்து கேட்டான். தாத்தா சொன்னார், இவையெல்லாம் ஆண்டவனிடம் வேண்டுவதற்கு! நம் பணிவு ஆண்டவனிடத்தில் இருக்க வேண்டாமா? அதற்குத்தான் என்றார். பேரன் முத்து சொன்னான் தாத்தா, நேற்றைக்கு நான் தலையில் மற்றவரால் குட்டப்பட்டேன். அதுமட்டுமில்லாமல் தோப்புக்கரணமும் போட்டேன். ஏன் தெரியுமா? வீட்டுப்பாடம் செய்யாமையாலும், மனப்பாடப்பகுதி ஒப்பிக்காமையாலும்! பள்ளியில் தவறுசெய்தால் குட்டுதலும், தோப்புக்கரணம் போட வைத்தலும் செய்கிறார்கள். ஆனால், இன்று நாம் எந்தத் தவறும் செய்யாமல் நம் தலையில் குட்டிக்கொண்டோம், தோப்புக்கரணமும் போட்டோமே? அதுதான் ஏன் என்று கேட்கிறேன் என்றான். பெரியவரோ திகைத்துப் போனார். அவருடைய அறிவுக்கு எட்டியது; இருப்பினும் சிறிய பையன் கேட்டுவிட்டானே! என்ன செய்வது என்றறியாமல் அடே நீ சிறிய பையன், சொன்னாலும் உனக்குப் புரியாது, பள்ளிவேறு! கோயில் வேறு!! இப்படியெல்லாம் நீ பேசக் கூடாது என வாயடைத்துவிட்டார்….
– அழகிரிதாசன்