அதிசயம்! ஆனால் உண்மையா? – 2 : பார்வை ஒன்றே போதுமா?
பிஞ்சண்ணா
அவர் மிகவும் நல்லவர். மக்கள் நன்மைக்காக, உண்மைக்காக, நேர்மைக்காக… இன்னும் பல மைகளுக்காகப் போராடுபவர். சண்டை என்றால் அவரை மிஞ்ச எவரும் கிடையாது. ஒரு காலை சுவற்றில் வைத்து, மறுகாலைச் சுழற்றிச் சுழற்றி அடிப்பதில் அவரை விஞ்ச ஆள் கிடையாது. ஒற்றைக் காலைத் தரையிலிருந்து தூக்கி, சுற்றிச் சுற்றி வட்டம் போட்டால், அப்படியே ஒரு சூறாவளி கிளம்பி, எதிரில் இருப்போரை கிடாசிவிடும். ஆயுதங்களோடு யார் வந்தாலும் சரி, அவர் மீசையைச் சுண்டினாலே தூரப் போய் விழுவார்கள்.
அவரை வீழ்த்துவதற்காக ஒரு முறை, 10 பேர் சேர்ந்து இழுத்துப் பிடித்துக் கொண்ட போது, கெட்டவன் ஒருவன் துப்பாக்கியால் சுடுவதற்குத் தயாராக நின்றான். விசையை இழுத்துப் பிடித்து, அவரைக் குறிபார்த்துச் சுட்டான். ஸ்லோ மோசனில் விரைந்து (!?) வந்தது அந்தத் தோட்டா. அந்தத் தோட்டாவை முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார் அந்த நல்லவர். அவர் கண்களில் கனல் தெறித்தது. அப்பப்பா… கத்தியை விடக் கூர்மையான பார்வை.
விரைந்து வந்த அந்தத் தோட்டா, அந்த நல்லவரை நெருங்கியதும் சற்றே வேகம் குறைந்து நின்று, பொத்தென்று கீழே விழுந்தது. அவரது கண்ணின் சக்தி அது.
இப்படிக் காட்சிகளை அநேகமாக பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அதுவும் குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களில்.
பார்வைக்கு அவ்வளவு ஆற்றல் உண்டா? விரைந்து வரும் ஒரு துப்பாக்கித் தோட்டாவை தொப்பென்று கீழே விழ வைக்க முடியுமா?
இதெல்லாம் சினிமாப்பா…. என்று படம் பார்த்து முடிந்ததும் சீட்டைத் தட்டிவிட்டுவிட்டுக் கிளம்பிவிடுவோம். ஆனால், உண்மையில் அப்படியொருவர் சொல்கிறார்… மிஸீ திணீநீt பலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், ஒருவர் இதன் மூலம் உலகப் புகழ் பெற்றார்… இன்னும் இருக்கிறார்.
அவர் யூரி கெல்லர். இஸ்ரேலில் பிறந்து பிரிட்டனில் வசித்துவரும் ஒரு … மாயாஜாலக் காரர். சரியான தமிழில் சொல்ல வேண்டுமானால் கண்கட்டுவித்தைக்காரர். ஆனால், தன்னைத் தானே “உள்ளத்தைப் படிப்பவன்’’ என்று சொல்லிக் கொண்டார்.
பார்வையால் பார்த்தும், கொஞ்சம் தடவிக் கொடுத்தும் என்னால் ஸ்பூனை வளைக்க முடியும் என்றார். மேடைகளில் செய்து காட்டினார். பிரபலமானார். தொலைக்காட்சிகள் உலகெங்கும் வரத் தொடங்கிய காலம் 1970. அந்தக் காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினார். மேலும் பிரபலமானார்.
அவர் பார்க்கப் பார்க்க ஸ்பூன்கள் வளைந்தன. சாவிகளை ஈர்க்க முடியும், வளைக்க முடியும் என்றார். செய்தும் காட்டினார். எதிரில் இருப்போரின் மனங்களைப் படிப்பேன் என்றார். மறைந்திருக்கும் ஓவியத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் சொல்வேன் என்றார். பார்க்கிங்கில் நீங்கள் விட்டுவிட்டு வந்திருக்கும் வண்டியின் எண்ணை, இங்கிருந்தே சொல்வேன் என்றார்.. சொல்லவும் செய்தார்.
“யோவ்… என்னப்பா… நீ பாட்டுக்கு அளந்துவிடுற?’’ என்று கேட்டவர்களுக்கு, தன் பிரபலத்தால் பதில் சொன்னார். போதாக்குறைக்கு, யூரி கெல்லரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வீடுகளிலெல்லாம் ஸ்பூன்கள் வளைந்தன; சாவிகள் வளைந்தன என்று ஆளாளுக்கு பீலாக்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர்.
மேஜிக் என்றால், சரி என்று எல்லோரும் விட்டிருப்பார்கள். மேடை நிகழ்ச்சியில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தத் தான் இப்படிச் செய்கிறேன் என்று சொல்லியிருந்தால், சரி தான் என்று கைதட்டிவிட்டுச் சென்றிருப்பார்கள். ஆனால் யூரி கெல்லாரோ, தன் மன வலிமையால் ஸ்பூனை வளைத்துக் காட்டுகிறேன் என்றார் அவர். தான் பயன்-படுத்துவது சைக்கோகினசிஸ், டெலிபதி என்றார்.
ஸ்பூனை வளைத்துக் காட்டி ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியுமா? யூரி கெல்லர் ஆனார்.
ஸ்பூன் வளைப்பது என் தொழில் என்று ஒருவர் சொல்ல முடியுமா? கூச்சப்படாமல் சொன்னார்.
என்ன இந்த ஆளு…? என்று பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க ஊடகக்காரர்கள் கெல்லரை அங்கே அழைத்தனர்.
1973-இல் அமெரிக்காவின் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக அந்தக் காலத்திலிருந்த ஜானி கர்சனின் “Tonight Show’’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார் யூரி கெல்லர். கூடவே, அவர் செய்வது உண்மையா? அதன் பின்னணி என்ன என்று ஆராய நமது அமேசிங் ரேண்டி தாத்தாவை அழைத்தனர் நிகழ்ச்சியாளர்கள்.
நிகழ்ச்சியில் அமெரிக்கர்களை அசத்த ஆர்ப்பாட்டமாகத் தயாராகி வந்தார் யூரி கெல்லர்.
ஆனால், நிகழ்ச்சியில் அவரால் ஸ்பூனை வளைக்க முடியவில்லை… இன்னும் சொல்லப் போனால், அவர் வளைக்கவே முயலவில்லை!
தனது சக்திகள் எடுபடுவதற்குச் சில சூழல்கள் சரியாக அமையவேண்டும். அது இங்கு இல்லை. என்னால், என் சக்திகளை இங்கே காட்ட முடியாது என்றார். “இதைச் செய்வதற்கு எனக்கு அதீத சக்திகள் வேணும்.. ஆனால் இப்போ நான் ரொம்ப வீக்கா இருக்கேன்.. இன்னொரு நாள் பார்ப்போமா?’’ என்று எஸ்கேப் ஆனார் யூரி கெல்லர்.
அப்படி என்னாச்சு யூரிக்கு? ஒரு வேளை அட்லாண்டிக் கடலைத் தாண்டியதும் அவரது சக்திகள் சுருங்கிவிட்டனவா? அய்ரோப்பாவில் எடுப்பட்டது… அமெரிக்காவில் எடுபடாமல் போய்விட்டதா?
பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. நிகழ்ச்சியில் வளைத்துக்காட்டுவதற்காக யூரி கெல்லர் ‘தயாரித்து’ வைத்திருந்த ஸ்பூன்களையெல்லாம் தூக்கிவிட்டு, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் உதவியோடு, சாதாரண வேறு ஸ்பூன்களை மேசையில் வைத்துவிட்டார் ஜேம்ஸ் ராண்டி. அவ்வளவுதான், தான் வளைத்துக் காட்டுவதற்காகத் தயாரித்து வைத்திருந்த ஸ்பூன் இல்லை என்றதும் ‘ஜகா’ வாங்கிவிட்டார் யூரி கெல்லர்.
யூரி கெல்லரின் டெக்னிக்குகள் மிக எளிமையானவை. பார்வையாளர்களின் கண்ணில் படாத நேரத்தில் தன் வித்தையைக் காட்டுவது. ஒரு ஸ்பூனைக் காட்டிவிட்டு, அதே போன்ற வேறொரு ஸ்பூனை வளைத்துக் காட்டி, தன் விழிபல பராக்கிரமத்தைப் பறைசாற்றுவது.
இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளாகப் போகிறது. அப்புறமும் அடங்கவில்லை யூரிகெல்லர். இன்னும் அவர் பிழைப்பை ஸ்பூனை வளைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். இன்னும் சில ஊடகங்கள், மேடை நிகழ்ச்சிகள் அவரைப் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அவரை நம்புபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
“ஒரு ஸ்பூனை வளைக்கிறதுக்கு அதீத சக்தியைப் பயன்படுத்துறதெல்லாம் வீண் வேலை. கொஞ்சம் தெம்பாக இருந்தால் கையாலேயே வளைச்சுட்டு போலாம். சரி, பார்வையாலேயே ஸ்பூனை வளைச்சு யாருக்கு என்ன பயன்?’’ என்று மிகச் சாதாரணமாக பகுத்தறிவாளர்கள் கேட்ட கேள்விக்கு இன்றுவரை யூரி கெல்லர் பதில் சொல்லவில்லை.
இயற்கையைத் தாண்டி எனக்கு சக்தி இருக்கிறது என்று சொல்லும் யாருக்கும், பகுத்தறிவாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும் சக்தி தான் இல்லை… ஏன்னா… அதுக்கு கொஞ்சம் அறிவு வேணும்.
அடுத்த இதழில்…