பொங்கல்
அறுவடைத் திருவிழா நம் பொங்கல்
அனைவரும் அதனையே ஏற்றிடுவோம்!
வறுமையை ஒழித்திட வரும் பொங்கல்
வாழ்த்தி வரவேற்றுப் போற்றிடுவோம்!
உழைப்பின் பயனை உணர்த்துகிற
உயர்தனித் தமிழ்விழா உணர்ந்திடுவோம்!
அழைப்புடன் வாழ்த்தினை அச்சடித்து
அருந்தமிழ்ப் பாவினை அனுப்பிடுவோம்!
இளங்கோ போற்றிய பொங்கல்பற்றி
இலக்கியம் புகழ்வதைப் படித்திடுவோம்!
நற்றிணை கலித்தொகை பரிபாடல்
நவில்வதை நம்மவர் படித்திடுவோம்!
தைந்நீராடி, புத்தாடை பூண்டு
தங்கக் கதிரோன் கண்டிடுவோம்!
தமிழர் சீருடை வேட்டி, சேலை
தமிழின ஓர்மையைச் செய்திடுமே!
தமிழ்மண்ணின் கரும்பையும் மஞ்சளையும்
தமிழர்கள் இல்லத்தில் நட்டிடுவோம்!
புதுப்பானை தனிலே புத்தரிசி
பால்,நெய், சர்க்கரை சேர்த்திடுவோம்!
‘பொங்கலோ பொங்கல்’ என்றிணைந்து
பொழிஞர் போலவே முழங்கிடுவோம்!
மங்காத் தமிழைப் பரப்பிடவே
மாலையில் பாடிஆடி விளையாடுவோம்!
வேளாண் துறையில் உதவிசெய்யும்
வேளாளர் மாட்டிற்குப் பொங்கல் வைப்போம்!
ஏறு தழுவியே எல்லோரும்
இனமானப் பொங்கலால் இணைந்திருப்போம்!
– தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சரலாதான்,
தெற்குச் சோழபுரம்