பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருவிழாவையெல்லாம் முன்புபோல் இவ்வாண்டு கொரோனா தொற்று (கோவிட்-_19) காரணமாக மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை. உழவர் திருநாளாகவும், அறுவடைத் திருவிழாவாகவும் உழவர் பெருமக்களாகிய நமது வேளாண் குடும்பங்களில் கொண்டாடப்பட்ட விழா குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மற்றும் பல தென்மாவட்டங்கள், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகமான மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த கதிர்களை அறுத்து, நெல்லை விற்றுப் பயனடைய முடியாத துயரம் _ கடனில் மீண்டும் நம் வேளாண் பெருமக்கள் மூழ்குகிறோமோ என்று, கண்ணீரில் மூழ்கிட்ட வேதனை _ துயரம் எல்லாம் சேர்ந்தன!
கொடுந்தொற்று ஒருபுறம்; இயற்கையின் கொடுமையாக தேவைக்கு மேற்பட்ட மழை _ வெள்ளம் மறுபுறம். இவ்வளவுக்கும் மத்தியில் எப்படியோ பொங்கல் விழா என்றாலும் குழந்தைகள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்களும், தாத்தா _ பாட்டி உறவுகளும், எல்லா குடும்பத்தினரும் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளார்கள்.
இந்த வயதில் உங்களுக்குக் கவலை தெரியக் கூடாதல்லவா? பெற்றோர்கள் சுமையைத் தாங்கி, உங்களை மகிழ்ச்சியோடு வைத்திருப்பதில் சற்றும் பின்வாங்கமாட்டார்கள். நீங்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.
சென்ற ஆண்டு (2020) அமெரிக்கப் பயணம் பற்றி உங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன், நினைவு இருக்கிறதா? மார்ட்டின் லூதர்கிங் (ஜூனியர்) என்ற பாதிரியார் கறுப்பின மக்கள் உரிமைக்காக அறவழியில் போராடினார். பேருந்துகளில் அவர்கள் அமெரிக்க வெள்ளை நிறத்தவர்களுடன் சமமாக அமரக் கூட அனுமதிக்கப்படாத நிலை _ ஆப்ரகாம் லிங்கன் அடிமை முறையை ஒழித்து பல ஆண்டுகள் கழித்தும் இந்த ஆதிக்க மனப்பான்மை, மனித உரிமை பறிப்பு இருந்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார் மார்டின் லூதர் கிங். அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
நம்ம காந்தி தாத்தா மதவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல, அங்கே நிறவெறியனால் மார்டின் லூதர் கிங் சுடப்பட்டு உயிர்த்தியாகம் செய்தார்!
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக பலதரப்பட்டவர்களும் _ இங்கே பெரியார் தாத்தாவும் நம்ம இயக்கமும் ஜாதி _ தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருவதுபோல போராடித்தான் வருகிறார்கள்!
உழைக்கும் மக்களுக்குள் எதற்கு நிற பேதம்? எதற்கு ஜாதி பேதம்? கூடாதல்லவா! அங்கே, அவ்வளவு படித்த நாட்டில்கூட இதை உணராமல், இன்றும் கறுப்பின மக்களை வேற்றுமைப்படுத்தி நடத்திடும் மனப்பான்மை மாறாமல் பல வெள்ளை நிறத்தவரிடமும் இருக்கவே செய்கிறது! இதனால் பல வெள்ளை போலீஸ் அதிகாரிகள், கறுப்பின மக்களை ஏதோ பிறவிக் குற்றவாளிகளைப் போல நடத்தும் கொடுமை ஆங்காங்கே நடத்தப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் சென்ற நான்கு ஆண்டுகளுக்கு முன் அதிபராக வெற்றி பெற்று பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்ப் என்பவர், ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாகவும், மதபேத அரசியலை _ நம் ஊரில் காவிக் கட்சியினர் செய்வது போல _ ஒருதலைப்பட்சமாக நடத்தி, அந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைகுலையச் செய்தார்! குடியேறிகளின் நாடுதான் அமெரிக்கா என்றாலும், மற்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறி, வேலை செய்வோருக்கு அனுமதி மறுப்பு என்று சொல்லி பலரின் _ நம் மக்களின் வேலை இழப்புக்குக் காரணமானார்.
இதையெல்லாம் எதிர்த்து, மக்களாட்சியைக் காக்க —_ மக்களாட்சி நிலைக்க அந்நாட்டு மக்கள்,
ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோபைடன் என்பவரை வேட்பாளராக நிறுத்தினர். இவர், முன்பு ஒபாமா குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் துணைத் தலைவராக இருந்து சிறப்பாக ஆட்சி புரிந்தவர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார்; ஜனநாயகக் கட்சி சார்பில் வெற்றி பெற்று ஜோபைடன் அதிபராக ஆட்சி அமைத்தார். வரலாற்றில் முதல்முறையாக நம் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட (மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமம்) திருமதி கமலா ஹாரிஸ் என்னும் பெண்மணியை குடியரசுத் துணைத் தலைவராக நிறுத்தினர்.
இவ்வளவு முன்னேறிய அமெரிக்காவில் பெண்கள் இதுவரை அதிபராகவோ (President), குடியரசுத் துணைத் தலைவராகவோ (Vice-President) வந்ததே இல்லை!
200 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக நம் தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர்தான் இப்போது குடியரசுத் துணைத் தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றுப் பதவி ஏற்றுள்ளார்.
மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? இந்த அம்மையார் பெரிய சட்ட நிபுணர். இவரை இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தியது இவரின் தாய் சியாமளா. சியாமளா அமெரிக்காவில் நிறைய படித்தவர் – பேராசிரியர்.
சியாமளா அவர்கள் நம்மூரில் உயர்ஜாதி என்று கருதப்படும் சமூகத்தவராய் இருந்தும், அங்கே ஜாதி, மதத்தை துறந்து அமெரிக்க நாட்டவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். பிறகு கமலாவுக்கு 5 வயதாக இருந்தபோது அவரின் தந்தையும் தாயும் மணவிலக்கு பெற்ற நிலையில், தாய் சியாமளா தான் இவரை வளர்த்து ஆளாக்கினார். கறுப்பின மக்கள் உரிமைகளுக்குப் போராடும் பெரும் பேராசிரியராகவும், நல்ல சட்ட நிபுணராக ஆவதற்கும், ஊக்கப்படுத்தி வளர்த்தார். கமலாவிற்கு ஒரு தங்கையும் உண்டு.
கமலாவுடைய தாத்தா டெல்லியில் வேலையிலிருந்தபோது தன் பெண்களை படிப்பதற்காக சிறுவயதிலேயே தனியாக அமெரிக்காவுக்கு அனுப்பினார்; அவர் அப்படி படிக்கவைத்ததால் அக்குடும்பம் இப்படி ஒரு முற்போக்குக் குடும்பமாகிவிட்டது.
ஜோபைடன், கமலா ஹாரிஸ் இருவரின் ‘டீமும்’ ஏழை, எளிய மக்களின் நலனில் மிகவும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டது.
இதற்கு முன் இருந்த டிரம்ப் கட்சி ஆட்சி _ நம்ம ஊர் காவி மதவெறியர்கள் ஆட்சியைப் போன்று அங்கு செய்த பல கேடுகள் _ ஆணைகளை மாற்றி அவற்றைச் சரி செய்யும் பணியில் இவர்கள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக பதவி ஏற்றுள்ள இந்த அதிபர் ஜோபைடனும், வாழ்க்கையில் பல துயரங்களைச் சந்தித்தவர்தான். அதுபற்றி அடுத்த கடிதத்தில் எழுதுவேன்.
ஜோபைடன் பதவி ஏற்கும்போது ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங் பற்றிக் கூறி, அவர்கள் வழியில், எந்த பேதமும் யார்மீதும் காட்டாமல் நடப்போம் என்றும் கூறியதோடு, நம் மக்களில் பலரும் (இந்தியர்களும், ஆசியர்களும்) இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியில் பெரிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணைத் தடுத்த பேதமை ஒழிந்தது! பாலின வேற்றுமை அழிந்தது! அனைவரும் சமம் என்ற ஆட்சி அமைந்தது _ இது ஒரு நல்ல காட்சிதானே!
இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ளுகிறீர்கள்? என்று எனக்குத் தெரிவிக்க பெரியார் பிஞ்சு இதழுக்குக் கடிதம் மூலம் எழுதுங்கள் _ செய்வீர்களா?
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி