சிறுவர் கதை : வள்ளியின் கனவுப் பள்ளிக்காடம்
கொ.மா.கோ.இளங்கோ
மாவட்ட ஆட்சியரிடம், தானும் ஒரு மனு தரவேண்டும் என்கிற வள்ளியின் நீண்ட நாளைய ஆசை நிறைவேறியது.
ஆட்சியர் அலுவலகம் மிகவும் பெரிதாக இருந்தது. வாசலில் இரண்டு பெரிய இரும்புக் கதவுகள். அதன் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு காவலர், “சின்னப் பெண்ணைத் தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்கு அனுப்பாம, மனுக்கொடுக்க எதுக்கும்மா கூட்டிட்டு வர்றீங்க?’’ என்று சலித்துக்கொண்டார். அவர்களை முழுவதுமாகத் தவிர்த்தார்.
“அய்யா! பச்சைப் புள்ளைகிட்ட என்னன்னுதான் கேளுங்களேன்.’’ வாசலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் வேண்டுகோள் வைத்தார்.
அதன் பிறகு, மனுவை வாங்கிப் படித்த ஒரு காவலர், “நோட்டுல எழுதிட்டு உள்ளே போங்கம்மா. வலது பக்கம் போயி ‘டோக்கன்’ வாங்கிக்கொங்க.’’ என்று சொல்லி அனுமதித்தார்.
வள்ளியையும் அவளது அம்மாவையும் ஓர் அரசுப் பேருந்து, வள்ளல்நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றிருந்தது. மகளை, ‘லொக் லொக்’கென்று நீண்ட தூரம் நடத்தியே கூட்டிச்சென்றார், அம்மா.
ஒன்பது மணி வெயில் சுள்ளென்று உரைத்தது. மணிமாமா கூரைக்கடை வடைச்சட்டியில் கொதிக்கும் எண்ணெய் போல சூடேறிய தார்ச்சாலை. வள்ளியின் கால்கள் பொசுங்கிப் போயின. பாதத்தில் சிறுசிறு கொப்பளங்கள் முகம் காட்டின.
ஆனையாறு பாலத்தைக் கடந்தால் ஆட்சியர் அலுவலகம் அடைந்து விட்டதாக அர்த்தம். காலையில் மணிமாமா சுடச்சுட செய்தித்தாளில் சுருட்டித்தந்த உளுந்துவடை நமத்துப்போய் இருந்தது. பேருந்தில் சீட்டுப் பிடிக்கும் அவசரத்தில், பரபரக்க ஏறி வள்ளல் நகர் வந்து சேர மணி ஒன்பது ஆகிவிட்டது. பசி மறந்துபோனது.
‘மக்கள் குறைதீர்க்கும் நாள்’ என்கிற அறிவிப்புப் பலகை இருந்த நான்காவது கட்டடத்தில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்தது. வெளியே சிலர் வரிசையாக நின்று இருந்தார்கள். ஒவ்வொருவரும் கையில் ஓர் அட்டையைப் பிடித்திருந்தார்கள்.
அதில் ‘தேனூர் கிராமத்தில் வறண்டுபோன ஏரியை சுத்தப்படுத்தித் தரவேண்டும். _-இப்படிக்கு கிராமப் பொதுமக்கள்’ என்றிருந்தது
வள்ளி, ஆட்சியர் அலுவலகத்துக்கு அம்மாவோடு வருவது இது முதல்தடவை இல்லை. இதற்குமுன் ஏழெட்டு தடவை வந்திருந்தாலும் ஒரு தடவையேனும் கலெக்டரைப் பார்த்ததில்லை. தூரத்திலிருந்து அவர் வந்திறங்கும் காரை மட்டும் பார்த்திருக்கிறாள்.
அடிக்கடி அவர்கள், அங்கு வந்துசெல்வதற்கான காரணம் ஒன்று இருந்தது.
“புயல் நிவாரண உதவிகேட்டு பிச்சையெடுக்க வற்றதுக்குப் பதிலா.. வீசுன காத்தோட கலந்து போயிருக்கலாம்.’’ என்றார், அம்மா. வரிசையில் இருந்த ஒவ்வொருவரிடமும் இப்படி ஏதாவது ஒரு புகார் இருந்தது.
சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக கொடுத்த மனு. அம்மா, காசு வரும் என்கிற நம்பிக்கையில் இருந்தார். அப்பா இருந்திருந்தால் ஒருவேளை வீட்டில் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது. யாரையாவது பார்த்துப்பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருப்பார். அப்பா இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
அம்மா அடிக்கடி வள்ளியிடம், “ஒங்கப்பன் நம்மள தெருவுல நிக்க வச்சுட்டு பொறுப்பில்லாமல் போயிட்டாரு.’’ என்றார். அப்பாவைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் வள்ளிக்கு அழுகை வந்துவிடும். அப்பா கண் முன்னால் வந்து விடுவார். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. வீட்டில் இருந்த பழைய ஓலைச்சுவடி ஒன்றை சாமியென்று கும்பிடுவார். ஆனால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
அதனாலோ என்னவோ அப்பாவை நினைக்கிற போதெல்லாம் வள்ளி புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொள்வாள். அம்மா, வெங்கலச்சட்டியில் பாதுகாத்து வைத்திருந்த நகைகளை அடகு வைத்து, கடன் வாங்கி இருந்தார். இது நாள் வரை, அதை வைத்து குடும்பச் செலவுகளைச் சமாளித்தார்.
கலெக்டர் அலுவலகம் வரும் யார் முகத்திலும் சந்தோஷம் இருந்ததில்லை. பலர், கண்ணீர் சிந்தி அழுகிறார்கள். ஊர்த்தகராறு, ஜாதிச்சண்டை, சொத்துப் பிரச்சனை என அங்கு வரும் எல்லோரையும் பார்த்து வள்ளி அனுதாபப் பட்டாள்.
அதுசரி! வள்ளி கொண்டுவந்திருந்த மனுவில் அப்படி என்னதான் எழுதி இருந்தாள்? தான் படிக்கும் பள்ளிக்கூடக் கட்டடத்தை சீர்செய்துதர வேண்டும் என்பது அவளின் வேண்டுகோள். புத்தூர் கிராமப்பள்ளி வகுப்பறைகள் அனைத்தும், பல ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன. கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்து விடும் என்ற பயத்தில், ஆசிரியர்கள் வகுப்புக்குச் செல்லப் பயப்படுகிறார்கள். மாணவர்களை மரத்தடியில் உட்காரவைத்துப் பாடம் நடத்துகிறார்கள். அதையெல்லாம் மனுவில் விரிவாக எழுதி இருந்தாள், வள்ளி.
***
அந்தச் சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழிந்து விட்டன. இப்போது அதே ஆட்சியர் அலுவலகத்தில் பல மாற்றங்களைக் காண முடிகிறது. கட்டடத்திற்கு வெளியே ‘கையருகில் கலெக்டர்’ என ஓர் அறிவிப்புப் பலகை இருக்கிறது. அரசு அலுவலர்கள் மிகவும் அன்பாகவும் கனிவாகவும் பேசுகிறார்கள். வயதானவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்கிறார்கள்.
அதோ! அங்கே என்ன கூட்டம்? அதிகாரிகள் சிலர் பரபரப்போடு இயங்கினார்கள். சில பொறியாளர்கள் பழைய கோப்புகளைத் துழாவி எடுத்து எதையோ தேடினார்கள். புத்தூர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் அங்கு வந்திருந்தார். ஆட்சியரைச் சந்தித்து பலமணி நேரம் பேசிவிட்டுத் திரும்பினார்.
வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம், கையிலிருந்த காகிதத்தைக் காண்பித்த தலைமை ஆசிரியர், மகிழ்ச்சியோடு பேட்டி தந்தார்.
“இனி எங்கள் பள்ளியில் படித்து முடித்து வெளியேறும் ஒவ்வொரு மாணவனும் தலைமைப் பண்போடு மிளிருவான். சக மனிதனுக்கு உதவிக்கரம் நீட்டும் நல்ல பிள்ளையாக உருவெடுப்பான். இன்று புதிதாகப் பதவி ஏற்றுள்ள ஆட்சியர் அதற்குச் சான்று.’’ என்றவர், பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க ஆட்சியர் பிறப்பித்த அரசாணையைக் காண்பித்தார்.
பச்சை நிறத்தில் பளிச்சிட்ட ஆட்சியர் கையொப்பத்தில் ‘வள்ளி’ என்று இருந்தது.