வைக்கம் வீரர் பெரியார் – ஏன்?
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல் வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்த்திருத்தத்திற்காகவும் மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காவும் போராடிய மிகப் பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய இயக்கமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார்.
பெண் விடுதலைக்காகவும், ஜாதி ஒழிப்பு, பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்-காகவும் திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.
பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்பு சாதனங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு “குடிஅரசு’’ (1925), ‘ரிவோல்ட்’ (1928), ‘புரட்சி’ (1933) பகுத்தறிவு (1934), ‘விடுதலை’ (1935) போன்ற பல செய்தித்தாள்-களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் “குடிஅரசு’’ ஆகும்.
ஜாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிலும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்துப் போராடிய உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்தப் போராட்ட இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். எனினும் தொடர்ந்து அப் போராட்டத்தை வழிநடத்தி வெற்றிபெற்ற காரணத்தால் மக்கள் அவரை “வைக்கம் வீரர்’’ என பாராட்டினர்.
எம். மஞ்சுளாதேவி
அரசு மேல்நிலைப் பள்ளி,
பாலாமடை.