அறிந்துகொள்வோம் – எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா?
சரவணா இராஜேந்திரன்
நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல் பணக்காரர் என்பதை விட செவ்வாயில் மனிதர்கள் குடியேற்றத்தை இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடத்திக் காட்டுவேன் என்று இவர் கூறியதுதான் முதலில் நினைவிற்குவரும். இதுவெறும் வெற்று வார்த்தை அல்ல, அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கி, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஹைப்பர்லூப், ஓபன்ஏஐ, நியூரலிங்க், தி போரிங் கம்பெனி, ஜிப் 2, பேபால் ஆகிய எட்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார் எலான் மஸ்க் (Elon Musk).
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிருவாக அதிகாரி எலான் மஸ்க் 2021 ஜனவரி முதல் வாரத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.
உலகப் பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் மனிதனைப் பற்றிய சில சுவையான தகவல்கள், அவரது தொடக்கங்கள் எவ்வளவு எளிமையானவையாக இருந்துள்ளன என்பதையும், கல்லூரி நாள்களில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதையும் காட்டுகின்றன. பல தடைகளைத் தாண்டி அவர் இன்று இருக்கும் மிகப் பெரிய நிலையை அடைந்துள்ளார். எலான் மஸ்க், உலகின் 500 பணக்காரர்களின் தரவரிசையான பிளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஜெப் பெசோஸைக் கடந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்.
மஸ்கின் நிகர மதிப்பு இந்த ஆண்டு 150 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது. டெஸ்லாவின் பங்குகளின் விலை கடந்த ஆண்டு 743 சதவிகிதம் உயர்ந்தன. டெஸ்லாவின் பங்கு விலைகள் 4.8 சதவிகிதம் உயர்ந்தன. இதன் மூலம், மஸ்கின் மொத்த மதிப்பு 188.5 பில்லியன் டாலர் ஆனது. அவரது மதிப்பு பெசோஸை விட 1.5 பில்லியன் அதிகமானது. அக்டோபர் 2017 முதல் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் 1971இல் பிறந்த எலான் மஸ்க் தனது 17 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். மஸ்கிற்கு தென்னாப்பிரிக்க, கனேடிய மற்றும் அமெரிக்க குடியுரிமை உள்ளது.
குழந்தைப் பருவத்திலிருந்தே, மஸ்க் ஒரு தொழில்நுட்ப ஆர்வலரின் பண்புகளைக் காட்டியிருந்தார். மஸ்க் 9 வயதாக இருந்தபோது பிரிட்டானிக்கா முழு என்சைக்ளோபீடியாவையும் படித்ததாகக் கூறப்படுகிறது. அவர் கணினிக் குறியீடுகளை தாமாகவே கற்றுக்கொண்டார். அவருக்கு வெறும் 12 வயதாக இருந்தபோது, பிளாஸ்டார் (Blastar) என்ற “வீடியோ கேம்’’ ஒன்றை உருவாக்கினார். பின்னர் அவர் அதை 500 அமெரிக்க டாலருக்கு பிசி மற்றும் ஆபிஸ் டெக்னாலஜி பத்திரிகைக்கு விற்றார்.
15 வயதில், மஸ்க் தற்காப்புக் கலை மற்றும் மல்யுத்தத்தைக் கற்றுக்கொண்டார். குழந்தைப் பருவத்தில் மஸ்க் சக நண்பர்களால் பெரிதும் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும், ஒரு முறை தனது பள்ளித் தோழர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டபோது அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகிறது.
மார்வெல் புகழ் டோனி ஸ்டார்க் கதாபாத்திரம் மஸ்கின் கற்பனைக் கதாபாத்திரம் கொண்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. அயர்ன் மேன் 2இல் மஸ்க் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார். தி சிம்ப்சன்ஸ், பிக் பேங் தியரி மற்றும் சவுத் பார்க் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், மஸ்க் நடித்துள்ளார்.
மஸ்க் உபென்னில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எனர்ஜி இயற்பியலில் பி.எச்.டி. படிப்பில் சேர்ந்தார். இருப்பினும், இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் இதிலிருந்து வெளியேறி ஜிப் 2 கார்ப்பரேஷனைத் தொடங்கினார்.
எலான் மஸ்கின் கல்லூரி நாள்களைப் பற்றி ஒரு சுவையான கதை உள்ளது. அவர் ஒரு நாளைக்கு 1 அமெரிக்க டாலரை மட்டுமே கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்ததாம். தனது பேட்டி ஒன்றின்போது, மஸ்க் இதைப்பற்றிக் கூறினார். “நான் ஹாட் டாக்ஸ் மற்றும் ஆரஞ்சுகளை மட்டும் சூப்பர் மார்கெட்டிலிருந்து வாங்கிக் கொண்டேன். ஆனால், அவற்றை மட்டுமே சாப்பிடுவது கடினமாக இருந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.
எலான் மஸ்கிற்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அவருக்கும் அவரது முதல் மனைவிக்கும் 5 குழந்தைகள் உள்ளனர். 2020ஆம் ஆண்டில், மஸ்க் மற்றும் அவரது கனடிய காதலி பாடகர் கிளாரி எலிசிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இன்றும் தனது டெஸ்லா நிறுவனத் தயாரிப்புப் பிரிவுக்கு வந்தால் மெக்கானிக் உடை அணிந்து காரின் பாகங்களைப் பொருத்துவதற்கு வந்துவிடுவார் என்று அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.