போருக்குப் பின்
இரண்டாம் உலகப்போர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிவுக்கு வந்தது. உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். பல நகரங்கள் பேரழிவுக்கு உள்ளாயின. குறிப்பாக, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் யூத இனத்தை அழிக்க முடிவு செய்தார். இலட்சக்கணக்கான யூதர்களை அடிமை முகாம்களில் படுகொலை செய்தார். இப்பேரழிவுகளால் மக்கள் மனதில் மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் நிகழக்கூடாது என்ற எண்ணம் ஆழப்பதிந்தது.
1945 இல் 50 நாடுகள் உலக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு அறிக்கையை வெளியிட்டன. இரஷ்ய அதிபர் ஸ்டாலின், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டனின் தலைவர் வின்ஸ்டண்ட் சர்ச்சில் ஆகிய மூவரும் யால்டா (yalta) மாநாட்டில் கூடி, போருக்குப்பின் செய்ய வேண்டியவற்றைப்பற்றித் திட்டமிட்டனர்.
உலக யுத்தத்திற்குப் பிறகு இரஷ்யாவும், அமெரிக்காவும் உலகத்தின் இருபெரும் வல்லரசுகளாயின. போருக்குப்பின் சோவியத் தலைவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியை அய்ரோப்பாவிலும், ஆசியாவிலும் பரப்ப முயற்சி மேற்கொண்டனர்.
இரஷ்யாவுக்கும், அமெரிக்க அய்க்கிய நாடுகளுக்கும் நிலவிய அதிகாரப் போட்டி சூழ்ச்சிப் போராக (cold war) மாறியது.
போருக்குப் பின் இந்தியா:
இந்தியா 1858 முதல் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதலிலிருந்து இந்திய மக்கள் விடுதலைக்குப் போரிட்டனர். அவ்விடுதலைப் போரை… 1920 – லிருந்து காந்தியார் தலைமை வகித்து நடத்தினார். அவர் நடத்திய வன்முறை இல்லாத போராட்டம் அகிம்சை முறைப் போராட்டம் என்று அழைக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது. முஸ்லீம்களுக்கு ஜின்னா தலைமை வகித்து அவர்களுக்கென தனியாக பாகிஸ்தான் என்ற நாட்டைப் பிரித்துக் கொடுக்கக் கேட்டார்.
நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் குடிபெயர்ந்தபோது வன்முறை வெடித்து ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். இறுதியில் 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் உருவாக்கப்பட்டு விடுதலை அளிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை
இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆப்பிரிக்காவில் இருந்த அய்ரோப்பிய காலனி ஆதிக்க நாடுகள் விடுதலைக்காக அமைதியான வழியில் போரிட்டன. தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் என ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து கருப்பர்களை ஆட்சி அதிகாரத்தினின்று ஒதுக்கி வைத்தனர். கருப்பர்கள் நெல்சன் மண்டேலா தலைமையில் போரிட்டு 1994 இல் தென்னாப்பிரிக்கா விடுதலை அடைந்தது.
நவீன உலகம்
1990 களின் தொடக்கத்தில் பொதுவுடைமைத் தத்துவம் வலுவிழந்தது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. எதிர்காலத்தில் எல்லா மக்களுக்கும் உணவு, மருத்துவம், கல்வி போன்றவைகள் கிடைப்பதில் மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள நாடுகளனைத்தும் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் வகுத்து, அயராது பாடுபட்டு வருவது போற்றத்தக்க, பாராட்டுக்குரிய மாறுதலன்றோ?