உலக புத்தக தினம் ஏப்ரல் : 23
சேக்சுபியர் |
லண்டனில் உள்ள ஸ்டராட் போர்டு என்னும் ஊரில் 1564 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் பிறந்தார் சேக்சுபியர். ஏழை விவசாயத் தொழிலாளியின் மகன். ஆடு, மாடு மேய்த்தார். தாய் மூலமாக அறிவை வளர்த்துக் கொண்டார்.
படிப்பில் ஆர்வம் இருந்தும், வறுமையின் காரணமாக பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். எனினும், அறிவாற்றலை வளர்த்து, நாடகம், கவிதை எழுதியும், நாடகத்தில் நடித்தும் புகழ் பெற்றார்.
ஒருமுறை, இவரது நாடகத்தைப் பார்க்க ராணி எலிசபெத் வந்தார். வேண்டுமென்றே தனது கையுறையை மேடையில் நழுவவிட்டார். சேக்சுபியர் நடிப்பை நிறுத்திவிட்டு எடுத்துத் தருவார் என எதிர்பார்த்தார் ராணி.
சேக்சுபியரோ சிறுதுகூடச் சலனமடைய வில்லை. கையுறையைக் குனிந்து எடுப்பதற்கு ஏற்றாற்போல், பேசிக் கொண்டிருந்த வசனத்தில் புதிய வரி சேர்த்துப் பேசி நடித்தார். அதுவும் நாடக வசனம் என்று பார்ப்போர் எண்ணும்படி நடித்து, கையுறையினை எடுத்து ராணியிடம் நீட்டியபடியே வசனம் பேசித் தொடர்ந்து நடித்தார். அது, திட்டமிட்டுத் தயாரித்த நடிப்பு போலவே இருந்ததாம்.
தாம் வாழ்ந்த 52 வருடத்தில் 38 நாடகங்களையும், 154 வசன கவிதைகளையும் உலக இலக்கியத்திற்குக் கொடுத்துள்ளார். மனித மன உள்ளுணர்வுகளைப் பற்றி இவரைப் போல் எழுதியவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். முறையான கல்வி கற்காமலேயே ஆங்கில மொழியினை இவர் கையாண்டுள்ள விதம் மொழிக்கே தனிப் பெருமையினையும் அந்தஸ்தினையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஆங்கில இலக்கியம் உள்ள வரை இவரது படைப்புகளின் புகழ் நிலைத்து நிற்கும். 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர் மறைந்த நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.