கலங்கரை விளக்கங்களை கண்டுகொள்வோமா?
என்ன பிஞ்சுகளே! தேர்வுகள் முடிந்து விடுமுறையைக் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறீர்கள்தானே! அதனால் நிறைய படிக்காமல் படங்களோடு ஒரு பயணம் போய்விட்டு வருவோமா? கடலில் பயணம் செய்யாமல் இப்போது நாம் கடற்கரையில் பயணம் மேற்கொள்ளப் போகிறோம். ஆம்! கடற்கரைகளில் போட்டிக்கு கட்டிடங்களே இல்லாமல் வானளாவ உயர்ந்து நிற்கும் கலங்கரை விளக்கங்களைச் சுற்றி வரப் போகிறோம். எதற்காக இந்தக் கலங்கரை விளக்கங்கள்? கடலில் செல்லும் கப்பல்களுக்கு, கரை எங்கேயிருக்கிறது? பாதுகாப்பான துறைமுகம் எங்கே இருக்கிறது? ஆபத்தான இடங்கள் எவை? பவழப்பாறைகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் தெரியப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இவை.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் கலங்கரை விளக்கம் இது தான். எகிப்தின் புகழ்பெற்ற இந்த அலெக்சாண்டிரியா கலங்கரை விளக்கம் பாரோஸ் தீவில் உருவாக்கப்பட்டது. 400 அடிக்கும் அதிகமான உயரத்துடன் கி.மு.280-இல் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. இது பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்றாக வரலாற்றாளர்களால் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபு கலங்கரை விளக்கம் 1531 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்றும் செயல்பாட்டில் இருக்கும் இது ஹியுமா தீவில் கட்டப்பட்டது. கடலை ஒட்டிய மணல் பகுதிகளில் கப்பல்கள் வந்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்று எச்சரிப்பதற்காகக் கட்டப்பட்டதே கோபு கலங்கரை விளக்கம்.
இங்கே மிதக்கிறதே இதுவும் கலங்கரை விளக்கம் தான். 1871- ஆம் ஆண்டு கட்டப்பட்ட பீன்ராக் கலங்கரை விளக்கம் நியூசிலாந்திலுள்ள ஹௌராக்கி வளைகுடாவில் அமைந்துள்ளது. இது மரத்தாலானது. 1990-ஆம் ஆண்டில் இதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கு, சூரிய ஆற்றல் கருவிகள் பொருத்தப்பட்டன.
கற்களால் உருவாக்கப்பட்ட பண்டைய கலங்கரை விளக்கங்களின் மாதிரிவடிவம். பின்னணியில் பாண்டியன்தீவு, கோடியக்கரை தீவுகளில் உள்ள கலங்கரை விளக்கங்களின் படங்கள்
அண்மையில் சென்னை கலங்கரை விளக்க அரங்கில் கலங்கரை விளக்கம் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதிலிருந்து சில ஒளிப்படங்கள் இங்கே…