நெல்லிக்கனி
மாயாண்டி, பள்ளியை நோக்கி வேகமாக நடையைக் கட்டினான். யார் மாயாண்டி? எந்தப் பள்ளி? உண்மையில் அவன் வேகமாக நடந்தானா? கொஞ்சம் கொசுவத்தியைச் சுற்றி இதற்கு முன்னர் நடந்ததைத் தெரிந்துகொள்ளலாம்.*
மாயாண்டிக்கு நான்கு அய்ந்து வயது இருக்கும்போது கடுமையான காய்ச்சல் தாக்கி காலில் கோளாறு ஏற்பட்டது. நடப்பதில் அப்போதிருந்தே சிரமம். அவனை அநேகம்பேர் மாயாண்டி என்று அழைத்ததை விட்டு நொண்டி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த ஒரே காரணத்திற்காக அவன் பள்ளியில் படிப்பதை நிறுத்திவிட்டான். பள்ளியில் படிக்க அவனுக்கும் ஆசை தான். பின்னர் வேலைக்குச் சென்றான். வேலைக்குச் சென்ற இடங்களில் எல்லாம் இந்தப் பெயர் வைத்து அழைத்தால் அங்கிருந்து விலகிவிடுவான். அவன் தன் ஊரைவிட்டு நெடுந்தொலைவிற்கு நகர்ந்துவிட்டான். கையில் ஒரே ஒரு துணிப்பையுடன் நடையைக் கட்டினான். அப்படித்தான் இந்த ஊரை அடைந்தான். சரி, எதற்கு இப்போது பள்ளியை நோக்கி வேகமாக நடக்கின்றான்?
இந்த ஊரின் எல்லையில் நடக்கமுடியாமல் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான். ஒரு வயதான பாட்டி தலையில் கூடையுடன் பக்கத்தில் அமர்ந்தார். கூடையில் இருந்தது நெல்லி. பாட்டியும் இவனும் பேச ஆரம்பித்தார்கள். முடிவில் பாட்டியின் கூடையில் இருக்கும் நெல்லிக்கனிகளை விற்றுவருவதாக பாட்டியிடம் கூடையை வாங்கினான். பள்ளி எங்கே என விசாரித்து வேகமாக நடையைக் கட்டினான்.
பள்ளியை நெருங்கவும் பள்ளி விடவும் சரியாக இருந்தது. அவன் நல்ல இடம் தேர்வு செய்து அமர்வதற்குள் குழந்தைகள் வேகமாக அவனுக்கு எதிர்த்திசையில் ஓடி வந்தார்கள். வந்த வேகத்தில் ஒரு சிலர் மாயாண்டியை இடித்துவிட்டார்கள். நிலைகுலைந்தான். தலையில் இருந்த கூடை கீழே விழுந்து உருண்டது. உள்ளிருந்த நெல்லிக்கனிகள் எல்லாம் சிதறின. விழுந்த வேகத்தில் ஒவ்வொரு திசையாக உருண்டு ஓடின. மாயாண்டி ஒரு பக்கம், கூடை ஒரு பக்கம், நெல்லிக்கனிகள் எல்லாப் பக்கமும். எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டது. தரையில் நெல்லியைப் பார்த்த சிறுவர்கள் ‘லபக் லபக்’ என்று ஒவ்வொன்றாக எடுத்து முன்னேறினார்கள். ஒருவன், “இதென்ன பழம்டா” என்றான். அவன் நண்பன், “நெல்லிக்கா, தெரியாது? கடிச்சிட்டு உஸ்ஸ்ஸ்ன்னு காத்தை உள்ள இழு. செமயா இருக்கும்.”
“ஆமாண்டா!”
மாயாண்டி எழவும் முயற்சி செய்யவில்லை. குழந்தைகள் குதூகலத்துடன் நெல்லியை ருசிப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். தொடச்சிட்டு சாப்பிடுங்க என்று சொல்ல வாயெடுத்தான்.
நெல்லிகள் எல்லாம் சிறுவர்கள் கைகளுக்குச் சென்றுவிட்டன. ஒரே ஒரு நெல்லி மட்டும் தரையில் இருந்தது. குட்டிச் சிறுமி ஒருத்தி வந்தாள். நெல்லியை எடுத்தாள். கூடையை நிமிர்த்தினாள்.
தான் எடுத்த நெல்லியை உள்ளே போட்டாள். “யேய்” என்று சிறுவர்களைப் பார்த்து ஒரு சத்தமிட்டாள். எல்லோரும் திரும்பினார்கள். “காசு கொடுக்காம எடுக்கலாமா? தப்பில்ல” என்றாள். சிறுவர்கள் திகைத்தார்கள். ஒவ்வொருவராக கூடையை நோக்கி நகர்ந்தார்கள். சின்னச் சின்ன கைகளில் இருந்த நெல்லிகள் ஒவ்வொன்றாக கூடைக்குள் சென்றன. கூடை நிரம்பியது. கடித்துவிட்ட நெல்லியை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் செய்வதறியாது நின்றனர். சிறுமி மாயாண்டிக்குக் கை கொடுத்து எழுப்ப முயற்சி செய்தாள். கைத்தாங்கலாக மாயாண்டியும் எழுந்தான்.
“இல்ல பசங்களா நீங்க சாப்பிடுங்க. உங்களுக்குத் தான் கொண்டாந்தேன்” என்றான்.
கூடையில் இருந்து முதல் நெல்லியை எடுத்து அந்தச் சிறுமிக்குக் கொடுத்தான். “நன்றி மாமா” என்று சொல்லிவிட்டு அவன் கைகளுக்கு முத்தமிட்டு நகர்ந்தாள். இப்படியாக எல்லோரும் அவன் கையில் முத்தமிட்டார்கள். மாயாண்டிக்கு என்னவோ போல் இருந்தது. வாழ்வில் அவன் இத்தனை மகிழ்வாக இருந்தது இல்லை. பறப்பதைப் போல உணர்ந்தான். முதல் முறையாக வாழப் பிடித்தது. மனம் நிறைந்தது என்றாலும், கூடை காலியானது.
பக்கத்தில் இருந்த கடைவாசலை அடைந்தான். சோர்வாக அமர்ந்தான். ஒரு தண்ணீர் செம்பு அவன் முன்னால் நீட்டப்பட்டது. “முதல்ல தண்ணி குடி தம்பி. நடந்ததெல்லாம் பார்த்துகிட்டுத்தான் இருந்தேன். பசங்கன்னா அம்புட்டு புடிக்குமா” என்றார் அந்தக் கடைக்கார அம்மா அவன் தலையை கோதியபடியே. அவனது வரலாற்றைக் கேட்டார். “இனி நீ இங்கயே இருந்துக்கோ இந்தக் கடையிலயே வேலை செய்” என்றார். நெல்லிக்கூடை கொடுத்த பாட்டிக்கு காசையும் கொடுத்து அனுப்பினார் அந்த அம்மா.
அதன்பின்னர் மாயாண்டி அந்த ஊரிலேயே தங்கிவிட்டான். அந்தக் குட்டிச்சிறுமி அவனைக் கடக்கும்போது எல்லாம் சிரிப்பாள். அவன் அதன்பின்னர் நெல்லி விற்கவில்லை என்றாலும், அவன் நெல்லிமாமா என்றே அழைக்கப்பட்டான்.<