காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?
சிகரம்
அறிவியலின் வளர்ச்சி கட்டாயத் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவாகக் கேடுகள், அழிவுகள் நிகழ்வதையும் அலட்சியப்படுத்த முடியாது. அறிவியலை ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அது அழிவைத் தரும் அளவிற்கு கொண்டு செல்லக் கூடாது.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் அரிய கண்டுபிடிப்பு – செல்பேசி. அது பேசுவதற்கு மட்டுமல்ல. அதில் அனைத்துமே உள்ளடக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கையில் உலகம் என்னும் அளவுக்கு அது பயன்படுத்தப்படுகிறது.
பேச, உரு காட்டி உரையாட, பல்துறை நூல்களை, அறிவைத் தேடிப் படிக்க, கருத்துகளைப் பரப்ப, செய்திகளை அனுப்ப, வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய, பொருள்களை வாங்க, விற்க, பயணங்களை மேற்கொள்ள, செல்லும் வழியைக் காட்ட, கணக்கிட, காலம் அறிய, பிழை திருத்த என்று பலவற்-றுக்கும் அது பயன்படுகிறது.
அதேபோல் பொழுது போக்குக்கான பலவும் அதில் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் வீடியோ கேம் என்பது. இதன் செயலிகள் இளைஞர்களை ஈர்த்து தன்வயப்படுத்தக் கூடியவை.
இந்த வீடியோ கேம் சிறுவர்களின் அறிவுத் திறன் வளர்ச்சிக்குப் பயன்படும் என்று சிலர் கூறுகின்றனர். இல்லை இல்லை இது சிறுவர்களின் அறிவைப் பதட்ட நிலைக்குக் கொண்டு சென்று அவர்களை பாழாக்கி விடுகிறது என்று சிலர் கண்டிக்கின்றனர்.
எனவே, பிஞ்சுகள் இதில் தெளிவைப் பெற்று, தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். எனவே, இதுகுறித்து சில உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற வர்களை ஆராய்ந்தால் முதலில் அவர்கள் வாசனைப் பாக்கு போடுவார்கள். அடுத்து பீடா போடுவார்கள் பின் போதை கலந்து சரிதா பீடா போடுவார்கள். அடுத்து புகை பிடிப்பார்கள், பிறகு பீர் குடிப்பார்கள், அதன்பின் பிராந்தி குடிப்பார்கள். நாளடைவில் மதுவுக்கு அடிமையாகி வாழ்வை அழித்துக் கொள்வார்கள். தொடக்கம் சிறிதாக இருந்தாலும், முடிவு பெரும் பாதிப்பில் அமைவது அனுபவ உண்மை.
அப்படித்தான் இந்த செல்பேசி விளையாட்டுகள். இவற்றை விளையாடுவதன் மூலம் அறிவு, ஆற்றல், மூளைத் திறன், முடிவெடுக்கும் பக்குவம் போன்றவை வளர்கிறது என்பது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், இதில் ஈடுபடும் சிறுவர்கள் அந்த எல்லைக்குள் நிற்பதில்லை. அடுத்தடுத்த கட்டத்திற்கு ஆர்வத்துடன் செல்கிறார்கள். இறுதியில் நாள் முழுக்க அதிலேயே ஈடுபட்டு அதற்கு அடிமையாகிறார்கள். இது ஒரு வகையான போதையாக அவர்களுக்கு ஆகிவிடுகிறது.
இந்த செல்பேசி விளையாட்டுகள் இறுதியில் பப்ஜி (றிuதீ-நி) போன்ற விளையாட்டுகளில் கொண்டு விடுகிறது.
பப்ஜி கேம்
சிறிய தீவுகளை உள்ளடக்கிய பெரிய தீவுக்கூட்டத்தில், 100 பேரை ஆயுதங்களுடன் களத்தில் இறக்கி விடுவர். தங்களைக் காத்துக் கொள்ள மற்றவர்களை அவர்கள் கொல்ல வேண்டும். இறுதியில் யார் உயிரோடு இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.
அனைவரையும் இந்த விளையாட்டு ஈர்ப்பதற்கு முக்கியக் காரணமே, இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பம். இதை விளையாடுபர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய யோசனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபடியான ஆயுதங்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.
பப்ஜி போன்ற விளையாட்டுகளால்
ஏற்படும் விளைவுகள்
இது ஒரு சாதாரண விளையாட்டுதானே.. நம்மை என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோலத்தான் ப்ளூவேலும் ஒரு சாதாரண விளையாட்டாக தொடங்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இத்தகைய விளையாட்டு-களால் உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த விளையாட்டால் மற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தி, இயற்கையான உலகத்திலிருந்து நம்மை பிரித்து செயற்கையான உலகில் வாழவைக்கிறது. எப்போதும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பதட்டநிலையை ஏற்படுத்துகிறது. இரவு முழுக்க பப்ஜி விளையாடுவதால் அதிக சோர்வு ஏற்பட்டு இயல்பான வேலைகளைச் செய்யாமல் தவிர்க்கும் பழக்கம் ஏற்படும்.
எப்போதும் ஒருவித பதட்டத்தில் நம்மை இருக்க வைக்கும் அளவுக்கு உளவியல் பாதிப்பை இந்த விளையாட்டு ஏற்படுத்துகிறது. இதை விளையாடுவதால், நமது தனித்தன்மையான சிந்தனை மழுங்கடிக்கப்படும். மற்றவர்கள் மேல் உள்ள வன்மம் அதிகரிக்கும். இந்த விளையாட்டை மருத்துவர்கள் டிஜிட்டல் போதைப் பொருள் என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுடும் போட்டியில் ஆர்வத்துடன் இறங்கும் சிறுவர்கள் மெல்ல மெல்ல அதில் ஒரு வெறித்தனத்துடன் ஈடுபடுகின்றனர். இப்போட்டியில் பல இடங்களிலிருந்தும் பலர் பங்கு பெறுவதால் அந்த வெறித்தனம் உச்சமாகிறது.
இதுபோன்ற விளையாட்டுகள், பதட்டம், படபடப்பு, விரைவு, வேகம், வெறி, தூக்கமின்மை, கொடிய மனம் போன்றவற்றை வளர்க்கின்றன. பரபரப்பும், படபடப்பும், பதட்டமும் கொண்ட ஒரு மனநிலையை இறுதியில் இளைஞர்களுக்கு அது உருவாக்குகிறது.
இதன் உச்சகட்டமாக உளைச்சல், உள இறுக்கம், வெறுப்பு, விரக்தி முடிவு தற்கொலை. இது மிகைப்படுத்திக் கூறப்படுவதல்ல. இதுதான் இன்றைக்கு நடைமுறை உண்மை! எனவே, செல்பேசி / வீடியோ விளையாட்டை ஆடவே கூடாது! <