ராஜகுமாரனை மட்டும் தூக்கி எறியாதா
குழந்தைகளாக இருக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை இருக்கும். இவருக்கு யானைச் சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. தன் விருப்பத்தை – ஆசையைத் தன் தந்தையிடம் தெரியப்படுத்தினார்.
குழந்தையின் ஆசையைக் கேட்ட தந்தை, யானை உன்னைத் தூக்கித் தூர எறிந்துவிடும் என்றார். ராஜகுமாரனை மட்டும் தூக்கி எறியாதா என மழலையில் கேட்டார்.
அவன் ஆண்பிள்ளை, நீ பெண்தானே, யானையை அடக்க முடியுமா என்று வினா எழுப்பினார் தந்தை. ஏன் முடியாது? அங்குசத்தைக் கழுத்தில் வைத்து அழுத்தினால் யானை அடங்கிவிடுகிறது, அவ்வளவுதானே என்றார் சிறுமி.
மகளின் புத்திக்கூர்மையைக் கண்டு வியந்தார் தந்தை. வில்வித்தை, கத்திச் சண்டை யானையேற்றம், குதிரையேற்றம் போன்ற அனைத்துப் போர்க் கலைகளையும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அரசு குடும்பத்தினரே வியக்கும்வண்ணம் கற்றுத் தேர்ந்தார். இச்சிறுமி, பின்னாளில் தன் நாட்டின்மீது ஆங்கிலேயர் படையெடுத்தபோது பலமுறை அவர்களை வீரமுடன் எதிர்த்துப் போரிட்டுப் புறமுதுகிட்டு ஓடச் செய்த வீராங்கனை ஜான்சி ராணி.