சுனாமி சொல்கிறது கடவுள் இல்லை
கடவுள் உண்டா? இல்லையா? இது தீராத சிக்கல் என்றும், அதற்கு யாரும் தீர்வு காணமுடியாது என்றும், உலகம் உள்ள அளவும் இது தீராத சிக்கல் என்றும் ஒரு தவறான எண்ணத்தை மக்கள் மனதில் பதியச் செய்கின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் உள்ளத்தில் உண்மைக்கு மாறான கடவுள் நம்பிக்கையைப் பதியச் செய்துவிடுகின்றனர். எனவே, பிஞ்சுப்பிள்ளைகள் இதில் தெளிவுடன் இருந்தால்தான், வாழ்வின் எல்லா நிலைகளிலும், செயல்களிலும், முடிவுகளிலும் சிக்கல் இல்லாமல் வாழமுடியும். குழப்பமில்லா, துணிவான, மானமுள்ள வாழ்வை, ஏமாறாத வாழ்வைப் பெற முடியும்.
எனவே, கடவுள் உண்டா? என்ற கேள்வியை எழுப்பி, கீழ்க்கண்டவற்றைச் சீர்தூக்கினால், சிந்தித்தால், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் தெளிவு பெறலாம்.
- கடவுள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வாறு படைக்கப்பட்டது? இதைச் சொல்லியே கடவுளை நம்பச் செய்கின்றனர்.
இவ்வுலகைப் படைத்தது கடவுள் என்றால், அக்கடவுளைப் படைத்தது யார்? இதற்கு அவர்கள் பதில் சொல்வார்களா? சொல்ல முடியுமா? முடியவே முடியாது.
எனவே, இல்லாத கடவுள் இவ்வுலகைப் படைத்தது என்னாமல், இருக்கின்ற உலகம் எப்போதும் உள்ளது என்பதுதானே சரியாகும்? எதையும் படைக்க ஒருவர் வேண்டும் என்றால் கடவுளைப் படைக்கவும் ஒருவர் வேண்டும் அல்லவா? இவ்வுலகில் எதையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. மாற்றங்களை மட்டுமே உருவாக்கலாம். இதுவே அறிவியல் உண்மை. ஆக்கவும் அழிக்கவும் முடியாதது படைக்கப்படாததும் ஆகும்.
ஆக, இவ்வுலகம், இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்பதால் அவற்றைப் படைக்க கடவுளும் இல்லை என்பது உறுதியாகிறது
-
படைக்கப்பட்டது எதுவானாலும் அழிந்தால், மீண்டும் படைக்கப்படும். இயற்கையில் உள்ளவை எல்லாம் படைக்கப்படாதவை ஆகையால், அவை அழிந்தால் மீண்டும் வராது.
அக்காலத்தில் இருந்த டைனோஸர் தற்காலத்தில் இல்லை. உயிரினங்களைப் படைத்தது கடவுள் என்றால், அழிந்த டைனோஸரை மீண்டும் அவற்றைக் கடவுள் படைத்திருக்கலாமே? ஏன் படைக்கவில்லை? இன்று உலகிலுள்ள அரிய உயிரினங்களை அறவே அழித்துவிட்டால், அவை மீண்டும் வராது (உருவாகாது). காரணம், அவை இயற்கையில் தோன்றியவை. கடவுள் படைப்பாக இருந்தால் மீண்டும் படைக்கப்படலாமே!
எனவே, உயிரினங்களை, உலகைப் படைத்தது கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது.
இவ்வுலகம் கடவுள் படைப்பாக இருந்தால், ஒரு நிலம் வளமாகவும், மறுநிலம் வளமற்றதாகவும், களராகவும் ஏன் படைக்கப்பட வேண்டும்? பசுவைப் பாலுக்காகப் படைத்தது என்றால் கொசுவை ஏன் படைக்க வேண்டும்?
கருப்பாக ஒருவனும் சிவப்பாக ஒருவனும், கட்டையாக ஒருவனும், நெட்டையாக ஒருவனும், ஊனமாக ஒருவனும், ஒழுங்காக ஒருவனும் ஏன் படைக்கப்பட வேண்டும்? கடவுள் படைத்தால் இப்படிப் படைக்குமா? இயற்கையில் தோன்றினால் மட்டுமே இந்த வேறுபாடுகள் இருக்கும். கடவுள் படைப்பாக இருந்தால் இப்படியிருக்காது. எனவே, கடவுள் இல்லையென்பது உறுதியாகிறது.
உயிருள்ள ஆட்டின் உடலிலிருந்து ஒரு செல்லை எடுத்து செயற்கையாய் (குளோனிங்) ஓர் ஆடு உருவாக்கப்பட்ட அன்றே கடவுள் இல்லை என்பது உறுதியானது. கடவுளின் இறுதி ஊர்வலமும் முடிந்தது.
என்றாலும், அறியாமையால், இன்னும் பலர் உள்ளத்தில், கடவுள் இருக்குமோ என்ற எண்ணம் (அய்யம்) இருக்கவே செய்கிறது. எனவே அவர்கள், சுனாமி அழிவைச் சிந்தித்துப் பார்த்தால், கடவுள் இல்லவே இல்லை என்பது அணுவளவும் அய்யமின்றித் தெளிவாகும்.
இவ்வுலகில் நடக்கும் எல்லாம் கடவுள் செயல், அதுவன்றி ஓர் அணுவும் அசையாது என்றால், திடீரென்று வந்து அழிக்கும் சுனாமியும் நில நடுக்கமும் கடவுள் செயலா? ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை, அவர்களது உடைமைகளை ஒழித்துச் சிதைக்கும் இச்செயலை கருணையே உருவான கடவுள் செய்யுமா? கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் இருந்தால் இந்த நிகழ்வுகள் நிகழுமா?
இயற்கையாய் நிகழ்ந்தால் மட்டுமே இவையெல்லாம் நடக்கும். கடவுள் இருந்து இவ்வுலகை நடத்தினால் இவையெல்லாம் நிகழவே நிகழாது!
எனவே, சுனாமியும், நிலநடுக்கமும் சொல்கின்றன கடவுள் இல்லை என்று! இன்னும் யாருக்கேனும் கடவுள் நம்பிக்கையிருப்பின் சுனாமிக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பாருங்கள். நீங்களும் சொல்வீர்கள் கடவுள் இல்லையென்று.
ஆகவே, பிஞ்சுகளும் பெரியவர்களும், கடவுள் நம்பிக்கையை விட்டொழித்து, தன்னம்பிக்கையுடனும், தன்மரியாதையுடனும் தெளிவாகவும், துணிவாகவும், உயிர்நேயத்துடனும் வாழ வேண்டும்.