உலகு சூழ் ஆழி
ஆழி என்றால் கடல் என்று பொருள்.சுனாமி என்ற இயற்கைப் பேரழிவு தமிழகத்தில்,தமிழ் ஈழத்தில் நிகழ்ந்த போது அதனைத் தமிழில் ஆழிப் பேரலை என்று குறிப்பிட்டதைப் படித்திருப்பீர்கள்.அந்த ஆழி என்ற கடல்களால் சூழ்ந்ததுதான் நாம் வாழும் இந்த பூமி.அதனைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?
1. பெருங்கடல்களும் (Oceans), கடல்களும் (Seas)
வான்வெளியிலிருந்து நோக்கும் போது நாம் வாழும் பூமி நீலநிறமாகத் தெரிவதேன்? ஏனெனில் பூமியில் பசுபிக், அட்லாண்டிக், இந்தியன், அண்டார்டிகா, ஆர்ட்டிக் எனும் 5 பெருங்கடல்களும், மத்திய தரைக்கடல் , பால்டிக்கடல், செங்கடல் போன்ற சிறிய நீர்ப் பரப்புகளும் உள்ளன.
பூமி 360 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பு கடல்களால் சூழப்பட்டது. அதாவது, 71% பூமியின் பரப்பு கடல்களே. கடல் நீர் உப்பு நிறைந்தது. அய்ரோப்பா முழுவதையும் அய்ந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் உப்பால் நிரப்ப முடியும். பூமியின் உயிரினங்களில் 20% கடல்வாழ் உயிரினங்களே!
- பசுபிக் பெருங்கடல்: பூமியின் 3 இல் 1 பகுதியில் பரந்துள்ளது.
- அட்லாண்டிக் பெருங்கடல்:
அய்ரோப்பாவும், வடஅமெரிக்காவும் ஒன்றை ஒன்று விலகிச் செல்வதால் பெரிதாகிக் கொண்டு வருகிறது. - இந்தியப் பெருங்கடல்: வெதுவெதுப்பான நீரைக் கொண்டது. அதில் பெருமளவில் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
- ஆர்ட்டிக் பெருங்கடல்:
ஆண்டின் பெரும்பாலான நேரங்களில் திண்மையான பனிப் படலத்தால் மூடப்பட்டுள்ளது. - அண்டார்டிகா பெருங்கடல்:
பூமியின் தெற்கே உள்ள அண்டார்டிகா என்னும் பெரும் நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளது.
பெருங்கடலின் ஆழங்கள்
பெருங்கடலில் உள்ள பள்ளங்கள் எவரெஸ்ட் சிகரத்தையும் வி-ழுங்கக் கூடியவை. பசுபிக் பெருங்கடலில் உள்ள மரியானா (Mariana) என்ற ஒடுக்கமான பள்ளமே உலகின் ஆழமான இடம். அதன் ஆழம் 11,022 மீ (36,161 அடி). அங்கு நீரின் அழுத்தம் 1 சதுர செ.மீ.க்கு 10,000 கி.கி. ஆகும்.
கடல்நீர்
கடல் நீரில் 96.5 விழுக்காடுதான் தண்ணீர். பிற பகுதி பல்வேறு உப்புகளால் ஆனது. ஆழமற்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள கடல்நீர் மிகவும் கரிப்புத் தன்மை கொண்டது. ஆனால், வட, தென் துருவங்களில் உள்ள கடல் நீர் சிறிதே கரிப்புத் தன்மை கொண்டது.
முதல் உயிர்
முதன்முதலில் உயிரினங்கள் நிலத்தில் தோன்றவில்லை. கடலில்தான் தோன்றியது. ஏனெனில், பூமியின் மேற்பரப்பில் வேண்டிய அளவு ஆக்சிஜன் இல்லை. உயிர்கள் 3,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அறியப்படுகிறது.
– மு.நீ.சிவராசன்