எப்படித் தீர்ப்பது?
THE EINSTEIN RIDDLE 2021 VERSION
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு மறைந்திருக்கும் தகவலைக் கண்டுபிடிப்பது தான் புதிர்.
இந்த Einstein riddle எனப்படும் புகழ்பெற்ற புதிரும் அப்படியானது தான். நாம் தந்திருப்பது 2021 ஆம் ஆண்டு செய்திகளை உள்ளடக்கியது. இந்தப் புதிருக்கு பல வடிவங்கள் உண்டு.
1962-ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று புகழ்பெற்ற ‘லைஃப்’ இதழில் வெளிவந்த இத்தகையதொரு புதிருக்கு, உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக் கணக்கானோர் பதில் எழுதியிருக்கின்றனர்.
1963-ஆம் ஆண்டு மார்ச் அன்று இதற்கான விடையை வெளியிட்டது ‘லைஃப்’. இதற்கு வரிக்குதிரை புதிர் என்றும் ஒரு பெயர் உள்ளது.
புகழ்பெற்ற அறிவியலர் அய்ன்ஸ்டீன் சிறுவனாக இருந்த போது போட்ட புதிர் இது என்றும், இல்லையில்லை… ஆலீஸ் இன் வொண்டர்லேண்ட் என்னும் புகழ்பெற்ற கதையை எழுதிய லூயிஸ் கரோல் போட்ட புதிர் என்றும் இருவேறு செய்திகள் உலவுகின்றன. இருந்தாலும் அய்ன்ஸ்டீன் கொஞ்சம் பேர் வாங்கிவிட்டார் – அய்ன்ஸ்டீன் புதிர் என்ற பெயர் நின்றுவிட்டது.
சரி, இந்தப் புதிருக்கான விடை என்ன என்பதைப் பார்ப்போமா? பெரியார் பிஞ்சு வாசகர் திருவண்ணாமலை ர.கார்த்தி முயன்று பார்த்திருக்கிறார். விடை சரியானது இல்லை என்றாலும், சரியான முறைப்படி முயற்சி செய்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுகள்.
விடையைப் பார்க்கும் முன், இப் புதிரை எளிமையாக எப்படி விடுவிக்கலாம் என்று பார்ப்போம்.
தொடக்கத்தில் தரப்பட்டுள்ளவை மூன்று குறிப்புகள்.
1. அய்ந்து வண்ணங்களில் அடுத்தடுத்து வீடுகள்
2. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாட்டவர்
3. அய்வருக்கும் குடிக்கும் பானம், படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் செல்பேசி எல்லாம் வேறுவேறு.
அய்ந்து வீடுகள், அய்ந்து வகை செய்திகள். எனவே கீழ்க்காணுமாறு கட்டம் போட்டுக் கொள்ளலாம். அது நாம் செய்திகளைப் பிரித்துப் புரிந்துகொள்ள உதவும். (படம்- 1)
அடுத்தடுத்த குறிப்புகளை நாம் பார்த்து, ஒவ்வொரு குறிப்பும், மற்றொரு குறிப்புக்கு எப்படி இணைப்பு கொடுக்கிறது. மற்றொன்றைப் புரிந்துகொள்ள எப்படி உதவுகிறது என்று பார்க்க வேண்டும். இணைக்க முடிந்தவற்றை இணைத்துக் குறித்துக் கொள்ள வேண்டும். சரியான விவரங்களாக இணைக்கப்பட்ட பின்பு அவற்றைக் கட்டத்தில் நிரப்பலாம்.
ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவது எளிது என்பதால், வீட்டுக் கணக்கில் தொடங்கலாம்.
9-ஆம் குறிப்பின்படி கென்யர் முதல் வீட்டில் வசிக்கிறார்.
14-ஆம் குறிப்பின் படி கென்யர் நீல வண்ண வீட்டுக்கு அருகில் வசிக்கிறார். கென்யர் தான் முதல் வீட்டுக்காரர் என்பதால் இரண்டாம் வீட்டின் வண்ணம் தான் நீலம்.
8-ஆம் குறிப்பின்படி நடுவீட்டில் (மூன்றாம் வீட்டில்) இருப்பவர் தண்ணீரை விரும்பிக் குடிக்கிறார்.
இப்போ கவனிங்க,
முதல் குறிப்பின்படி ஜப்பானியர் பச்சை வீட்டில் குடியிருக்கிறார். முதல் வீட்டில் கென்யர் இருக்கிறார், இரண்டாம் வீடு நீல வண்ணம். எனவே, முதலிரண்டு வீடுகள் கிடையாது. மிச்சம் இருக்கும் வண்ணங்கள் வாய்ப்பு – 3, 4, 5 ஆம் வீடுகள்.
4-ஆம் குறிப்பின்படி மஞ்சள் வண்ண வீடு, வெள்ளை நிற வீட்டுக்கு இடப்புறத்தில் இருக்கிறது. அதாவது அடுத்தடுத்த வீடுகள்.
இரண்டாம் வீட்டின் வண்ணம் நீலம் என்பதால், நிச்சயம் மஞ்சளோ, வெள்ளையோ, நீலமோ முதல் வீட்டின் வண்ணம் அல்ல. ஜப்பானியர் பச்சை வீட்டில் இருக்கிறார். எனவே கென்யர் வசிக்கும் முதல் வீட்டின் வண்ணம் மேற்சொன்ன நான்கும் அல்லாத சிவப்பு நிறம் தான். இப்போது இதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
இப்போது சிவப்பு நிற வீட்டைப் பற்றிய குறிப்பு 7-இன் படி, அவ் வீட்டில் வசிக்கும் கென்யர் தான் அறிவியல்புனைவுகளை (Sci-fi books) விரும்பிப் படிப்பவர் என்பது உறுதியாகிவிட்டது.
அறிவியல் புனைவுகளைப் படிப்பவர் பற்றி குறிப்பு 11 சொல்கிறது. அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சாம்சங் எஸ்20 செல்பேசி வைத்திருக்கிறார். முதல் வீட்டுக்குப் பக்கத்துவீடு என்றால் இரண்டாம் வீடு மட்டும் தான். அந்த வீட்டுக்காரர் தான் சாம்சங் பயன்படுத்துகிறார்.
இப்படியே எழுதிக் கொண்டு போனால், உங்களுக்குப் புரியாமல் போய்விடக் கூடும். படங்களோடு போட்டால் பக்கமும் அதிகமாகக் கூடும் என்பதால் ஒரு காணொளியாக்கி வெளியிட்டிருக்கிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் (https://qrgo.page.link/b2FMo). அடுத்தடுத்த படிகள் என்ன என்பதை படங்களுடன் எழுத்துவடிவில் பெரியார் பிஞ்சு இணையதளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.