கோமாளி மாமா-16 : எது நாகரிகம்?
ஓவியம், கதை: மு.கலைவாணன்
கோமாளி மாமாவின் கதையைக் கேட்க தோட்டத்திற்கு வந்தனர் மல்லிகாவும் செல்வமும். கோமாளி மாமாவும் வந்துவிட்டார். ஆனால், மாணிக்கம் மட்டும் இன்னும் வரவில்லை. சற்று நேரம் பொறுத்திருந்த கோமாளி, “எப்போதும் உன்னோடு வரும் மாணிக்கம் இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரமா காணோம்?” என்று செல்வத்திடம் கேட்டார்.
“நான் வீட்டிலிருந்து கிளம்பி மாணிக்கம் வீட்டுக்கு போயிட்டுதான் வந்தேன். வீடு பூட்டியிருந்துதுங்க மாமா.” என்று செல்வம் சொல்லி முடிப்பதற்குள் தோட்டத்து வாசலில் மாணிக்கம் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. “அதோ மாணிக்கம் வந்துட்டான்” என்றான் செல்வம்.
மரத்தடிக்கு வேகவேகமா வந்து சேர்ந்த மாணிக்கம், “எல்லாரும் எனக்காகக் காத்திருப்பீங்க… நேரமாயிடுச்சேன்னுதான் வீட்டுலேயிருந்து ஓடியே வந்தேன்…” என மூச்சிரைக்கப் பேசினான்.
“நான் தோட்டத்துக்கு வரும்போது வழக்கம்போல உங்க வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. சரின்னு வந்துட்டேன்” என்றான் செல்வம்.
“மன்னிச்சுக்க செல்வம்… அம்மா அப்பா ஊர்லே இல்லே. பாட்டிக்கு உடம்பு சரியில்லேன்னு காலையிலதான் கிளம்பிப் போனாங்க. நான் பக்கத்துத் தெருவுல இருக்கிற அத்தை வீட்டுக்கு சாப்பிடப் போனேன். அதான் நேரமாயிடுச்சு. இனிமே சரியான நேரத்துக்கு கதை கேக்க தோட்டத்துக்கு வந்துடுவேன். என்னாலே ஏற்பட்ட சிரமத்துக்கு என் வருத்தத்தை தெரிவிச்சுக்கிறேன்… என்றான் மாணிக்கம்.
இதுவரை மற்றவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மல்லிகா, “மாணிக்கம், நீ காலதாமதமா வந்ததுக்கு உன்னோட வருத்தத்தைத் தெரிவிச்சியே, இதுதான் நாகரிகம், பண்பாடு! இப்படி ஒவ்வொருத்தரும் நடந்துக்கிட்டா எல்லாருமே மகிழ்ச்சியா இருக்கலாம்’’ என்றாள் மல்லிகா.
“மல்லிகா சொன்னது போல ஒவ்வொருத்தரும் மற்றவர்களின் நேரத்தை, வேலையை, சூழலைப் புரிஞ்சு நடந்துக்க முயற்சி செய்யணும். அதிலே தவறிப் போகும்போது முறையா தங்களோட தவறை உணர்ந்து வருத்தத்தையும் தெரியப்படுத்தணும். அதுதான் சரியான நாகரிகம். இந்த ஒழுக்கத்தை, குழந்தைகளாகிய நீங்க, சின்ன வயசிலேயே தெரிஞ்சிக்கிட்டா பெரியவங்களாகும்போது அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்காத சிறந்த மனிதர்களா வாழ முடியும்’’ என்று தன்னோட கருத்தைச் சொன்னார் கோமாளி.
“மாமா! நீங்க கதையைச் சொல்லுங்க மாமா!’’ என கவனத்தைத் திசை திருப்பினாள் மல்லிகா.
சரி… கதைக்கு வருவோம்… பரபரப்பான பெரிய தொடர்வண்டி நிலையம். அதான் பெரிய ரயில்வே ஸ்டேஷன். மாலையும் இரவும் கலந்த அந்த நேரம்.
வெளியூர் செல்லும் தொடர் வண்டிகளுக்கான அறிவிப்புகள் ஒலி பெருக்கியில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.
ஒவ்வொருவரும் தாங்கள் போகவேண்டிய ஊருக்குப் புறப்படத் தயாராக உள்ள தொடர் வண்டியில், பதிவு செய்துள்ள இருக்கையை, படுக்கையைத் தேடியபடி ஓடிக் கொண்டிருந்தனர்.
இதற்கு இடையில்… உணவுப் பொருள், நொறுக்குத் தீனிகள், பழம், குடிநீர், தேநீர் விற்பனை செய்வோரின் விதவிதமான குரலோசை.
நாகரிகமான உடை என்பார்களே அப்படி கோட்சூட் போட்டு, கழுத்தில் டை கட்டிக்கொண்டு சக்கரம் பொருத்திய சிறிய பெட்டியை இழுத்தபடி வந்து கொண்டிருந்தார் ஒருவர். ஒரு கையில் கைபேசி, மறு கையில் ஆங்கில செய்தித்தாள், முதுகில் பெரிய மூட்டை போன்ற பை.
வந்தவர்… இருவர் அமரக்கூடிய இரும்பு நாற்காலியில் அமர்ந்தார். முதுகில் இருந்த பையை மடியில் வைத்துக் கொண்டார். கைபேசியைக் காதில் வைத்து தோள்பட்டையால் தாங்கிக் கொண்டார். ஆங்கில செய்தித்தாளைப் பிரித்து வைத்துக் கொண்டார். கண்களால் படித்துக்கொண்டு, காதுகளால் எங்கிருந்தோ, யாரோ பேசுவதைக் கேட்டு… அதற்கு இங்கிருந்தபடி ஓகே! எஸ்… எஸ்… நோ… நோ.. என நுனி நாக்கு ஆங்கிலத்தால் பதிலும் சொல்லிக் கொண்டிருந்தார்.
சில நொடிகளில் செய்தித்தாளில் பதித்திருந்த கண்ணை பக்கவாட்டில் திருப்பிப் பார்த்தார். அழகான உடை அணிந்து மடியில் ஒரு சிறிய பையை வைத்துக்கொண்டு அந்த நாகரிக மனிதரைப் பார்த்துச் சிரித்தபடி ஒரு குட்டிப் பையன் உட்கார்ந்திருந்தான்.
அவருடைய செயலைப் பார்த்து அவன் சிரிப்பதைப் போல நினைத்துக் கொண்டு, மீண்டும் செய்தித்தாளைப் படிக்கத் தொடங்கினார்.
சிறுவனின் சிரிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. நாமோ பெரிய கம்பெனியில் அதிகாரி. நம்மைப் பார்த்தாலே கம்பெனியில் வேலை செய்யும் அனைவரும் நடுங்கி ஒடுங்கி கும்பிடு போடுவார்கள். இந்தப் பொடிப் பையன் தம்மைப் பார்த்ததும் சிரிக்கிறானே என மனதில் நினைத்துக் கொண்டார். அவருக்கு அது அதிகப் பிரசங்கித்தனம் போல் தெரிந்தது.
செய்தித்தாளைப் படித்துக் கொண்டும், கைப்பேசியில் பேசிக் கொண்டும், தன் மடியில் இருக்கும் முதுகுப் பையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து வைத்துக் கொண்டு ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த சிறுவனும் அந்தப் பொட்டலத்திலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்துத் தின்னத் தொடங்கினான்.
அதிகாரி முகம் சுளித்தார். பார்த்தால் நாகரிகமான குடும்பத்தைச் சேர்ந்த பையனாகத் தெரிகிறான். ஆனால், பண்பாடில்லாமல் நடந்து கொள்கிறானே என்று நினைத்தார். கையிலெடுத்த பிஸ்கட்டைத் தின்று முடித்த அவர், அடுத்த பிஸ்கட்டை எடுத்தபோது, அந்தச் சிறுவனும் ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கொண்டான்.
அந்தச் செயலே அவருக்கு அருவருப்பாக இருந்தது என்றால்… அந்தக் குட்டிப் பையனின் சிரிப்பு… அதுவும் அவர் அவனைப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பது அவருக்கு எரிச்சலூட்டியது.
“சே! இப்படியா ஒரு பிள்ளையை நாகரிகமில்லாமல் வளர்ப்பார்கள்’’ என்று எண்ணும்போதே ஓங்கி அவன் கன்னத்தில் அறை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால், அப்படிச் செய்வது நாகரிகமில்லை என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டார். அவரும் சிறுவனும் மாறி மாறி எடுத்துச் சாப்பிட பிஸ்கட் பொட்டலம் காலியானது. ஒரே ஒரு பிஸ்கட் எஞ்சியிருந்தது.
என்ன செய்கிறான் பார்க்கலாம் என்று அந்த பிஸ்கட்டைத் தொடாமல் இருந்தார் அதிகாரி. சிறுவன் அந்த பிஸ்கட்டை எடுத்தான். இரண்டாக உடைத்தான். ஒன்றைத் தன் வாயில் போட்டுக் கொண்டு மற்றொரு துண்டை அவரிடம் நீட்டினான். அவர் எரிச்சலின் உச்சக் கட்டத்தை அடைந்தார். நீட்டிய சிறுவனின் கையைத் தட்டி விட்டு வேகமாக எழுந்தார்.
அவர் மடியிலிருந்து ஏதோ கீழே விழுந்தது. குனிந்து பார்த்தார். அது அவர் வாங்கி வைத்திருந்த குட் டே பிஸ்கட் பொட்டலம்.
அப்படியானால்… அவர் இத்தனை நேரமும் எடுத்துத் தின்றது _ அந்தச் சிறுவனின் பிஸ்கட்டையா? இப்போது நாகரிகமில்லாமல் நடந்துகொண்டது நானா… அச் சிறுவனா?
அவன் முகத்தைப் பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்தது. ஆனாலும், அவனைப் பார்க்கத் திரும்பினார்.
“மகிழன்! வா… வா… நம்ம ‘சீட்’ இந்தப் பெட்டியிலே இருக்கு’’ என்று அழைத்த அம்மாவின் குரல் கேட்ட திசையில் தன் முதுகுப் பையை மாட்டியபடி நடந்து கொண்டிருந்தான் குட்டிப் பையன்…
அவர் விட்டுச் சென்ற குட் டே பிஸ்கட்டின் உறையிலிருந்த பிஸ்கட் படம் அந்த கோட்சூட் மனிதரைப் பார்த்து நையாண்டியாய் சிரித்துக் கொண்டிருந்தது.
இது என் நண்பர் நீண்ட நாளைக்கு முன்னே எனக்குச் சொன்ன கதை. நான் உங்களுக்குச் சொல்லியிருக்கேன்’’ என்றார் கோமாளி.
“நாங்க இதை ஊருக்கே சொல்வோம்’’ என்றனர் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும்.
“எது நாகரிகம்னு நாம சொல்லாம யார் சொல்லுவாங்க… வாங்க போலாம்’’ என்றபடி எழுந்தார் கோமாளி.
– மீண்டும் வருவார் கோமாளி