கதைகேளு கணக்குப் போடு
கவிதா, எழிலரசி, இனிதா மூவரும் சகோதரிகள். கோடை விடுமுறையில் இனிமையாகப் பொழுதுபோக்க கிராமத்திலிருந்த தாத்தா வீட்டிற்குச் சென்றனர். தாத்தாவின் வீட்டில் 6 அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. முதல் அலமாரியில் 62 புத்தகங்களும், இரண்டாவதில் 33ஆம், மூன்றாவதில் 38ஆம், நான்காவதில் 36ஆம், அய்ந்தாவதில் 32 ஆம், ஆறாவதில் 30 புத்தகங்களும் இருந்தன.
புத்தகங்களைப் பார்த்த சகோதரிகள், தாத்தாவிடம் அனைத்துப் புத்தகங்களையும் தங்களிடம் பங்கிட்டுக் கொடுத்துவிடும்படி வேண்டினர். தாத்தாவும், சரி நீங்களே பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மூன்றாம் சகோதரி ஒரு அலமாரியிலிருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டார். இரண்டாம் சகோதரி 2 அலமாரிகளிலிருந்த புத்தகங்களை எடுத்தார். முதல் சகோதரி 3 அலமாரிகளிலி ருந்து புத்தகங்களை எடுத்தார். மூன்று பேரும் தமக்குக் கிடைத்த புத்தகங்களை எண்ணிப் பார்த்தார்கள். முதல் சகோதரியிடம் நிறையப் புத்தகங்கள் இருந்தன. இரண்டாம் சகோதரியிடம் இருந்த புத்தகங்கள் முதல் சகோதரியிடம் இருந்த புத்தகங்களில் பாதி அளவே ஆகும். மூன்றாம் சகோதரியிடம் இருந்த புத்தகங்கள் இரண்டாம் சகோதரியிடம் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கையில் பாதியாகும். யார் யார் எந்தெந்த அலமாரிகளிலிருந்து புத்தகங்களை எடுத்தனர்? சகோதரிகள் ஒவ்வொருவரிடமும் இருந்த புத்தகங்கள் எத்தனை?
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
கதை கேளு கணக்குப் போடு விடை
6 அலமாரிகள், 3 சகோதரிகள்
முதல் சகோதரி 1,3,5 ஆம் அலமாரிகளிலிருந்து புத்தகங்களை எடுத்தார். அவரிடமிருந்த மொத்தப் புத்தகங்கள் 132 (62+38+32)
இரண்டாம் சகோதரி 4,6 ஆம் அலமாரிகளிலிருந்து புத்தகங்களை எடுத்தார். அவரிடமிருந்த புத்தகங்கள் 66 (36+30). இது முதல் சகோதரியிடமிருந்த புத்தக எண்ணிக்கையில் பாதியாகும்.
மூன்றாம் சகோதரி 2 ஆம் அலமாரியிலிருந்து புத்தகத்தை எடுத்தார். அவரிடமிருந்த புத்தகங்கள் மொத்தம் 33. இது இரண்டாம் சகோதரியிடமிருந்த புத்தக எண்ணிக்கையில் பாதியாகும்.