குதிரையை அடக்கிய சிறுவன்
மெசபடோமியா மன்னர் பிலிப் குதிரைச் சவாரி செய்வதில் பேரார்வம் கொண்டவர். தெஸ்ஸாலி நாட்டிலிருந்து குதிரைகள் வாங்குவார். எனவே, தெஸ்ஸாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர், பியூசி பேலஸ் என்ற பெயர் கொண்ட குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தினார்.
மன்னர் பிலிப் தன் மகனுடன் வந்து குதிரையைப் பார்த்தார். உடன் வந்த அரண்மனையிலுள்ள உயர் அலுவலர்களும் குதிரையைப் பார்த்தனர். கம்பீரமான தோற்றத்தில் காணப்பட்ட பியூசி பேலசைப் பார்த்து அனைவரும் பிரமித்தனர். மன்னரின் மகன், வைத்த கண் எடுக்காமல் குதிரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பியூசி பேலஸ் முரண்டு பிடித்ததோடு, கொண்டு வந்தவர்களின் பிடியிலிருந்தும் தப்பிச் செல்ல முயன்றது. அங்கு நின்று கொண்டிருந்த குதிரை வீரர்களிடம், பியூசி பேலசை அடக்கும்படி மன்னர் உத்தரவிட்டார். ஒவ்வொருவராக முயன்றனர். யாராலும் அடக்கமுடியவில்லை.
மன்னரின் முகத்தில் தோன்றிய கவலையைப் பார்த்த சிறுவன், இந்த முரட்டுக் குதிரையை நான் அடக்கட்டுமா அப்பா என்றான். 12 வயதுடைய தனது மகனைப் பார்த்த மன்னன், குதிரையேற்றத்தில் அனுபவம் உள்ளவர்களா லேயே அடக்க முடியவில்லையே! குழந்தைத்தனமாகப் பேசுகிறானே என நினைத்துச் சிரித்தார்.
நான் இந்தக் குதிரையை அடக்கத்தான் போகிறேன், விளையாட்டிற்காகக் கூறவில்லை என்றதும், கலங்கிய மன்னர் தெளிவுற்று, வெற்றி நிச்சயம் கிடைக்கும், இந்தக் குதிரையை அடக்கி, நீயே எடுத்துக்கொள் என்றார். துள்ளிக் குதித்து மகிழ்ச்சியில் ஓடிய சிறுவன் பிற வீரர்கள் குதிரையை அடக்க முடியாததற்கான காரணத்தை யோசித்தான். சூரியனின் எதிர்த்திசையைப் பார்த்து குதிரை நிறுத்தப்பட்டுள்ளதால் அதன் நிழல் முன்னால் வந்து விழுகிறது. அது தன் நிழலைப் பார்த்தே மிரண்டு போயுள்ளது என்பதை உணர்ந்தான். சூரியனைப் பார்த்து குதிரையை நிறுத்தினான். குதிரை மிரளாமல் அமைதியாக நின்றது. தாவிக் குதித்து குதிரையின்மீது ஏறி அமர்ந்தான். மிரட்சியின்றி விரைவாக ஓடியது குதிரை. சிறிதுதூரம் சவாரி செய்துவிட்டு அனைவரும் வியக்கும் வகையில் வந்து குதிரையிலிருந்து இறங்கினான்.
ஆனந்தக் கண்ணீருடன் மகனைத் தழுவினார் மன்னர். சிறுவன் குதிரையை அடக்கிய செய்தி நகர் முழுவதும் பரவியது. மகிழ்ச்சியடைந்த மக்கள் தங்களின் அரச குமாரனை வாழ்த்துவதற்குத் திரண்டு வந்தனர்.
அங்கிருந்த மேடையொன்றில் அனைவரும் பார்க்கும்வகையில் ஏறி நின்று மகிழ்ச்சியுடன் வணங்கி நின்று வாழ்த்துகளைப் பெற்ற அந்தச் சிறுவன், பின்னாளில் உலகம் வியக்கும் உன்னத வீரராகத் திகழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர்.