கண்ணாமூச்சி ரே ரே..
விழியன்
அது ஓர் அழகிய பூங்கா. அந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மனோ அந்தப் பூங்காவை வெறித்துப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தான். அவன் தன்னுடைய பாட்டு வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தான். பூங்காவில் தன்னுடைய நண்பர்கள் அனைவரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவனுடைய மனம் எல்லாம் விளையாட்டில்தான் இருந்தது. குடியிருப்பின் நடுவில் அந்தப் பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவில் ஏராளமான இருக்கைகளும் மரங்களும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்களும் இருந்தன. பூங்காவுக்குள் நடைபழக ஏதுவாக பாதை அமைத்து இருந்தார்கள். மாலையில் பெரியவர்கள் அந்தப் பூங்காவில் நடை பழகினார்கள். பெற்றோர்களும் சிலர் குழுமி இருந்தனர். குழந்தைகளின் சத்தம் என்றும் கேட்டுக்கொண்டே இருக்கும்படியான பூங்கா அது. அங்குதான் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சார்லஸ் அந்தப் பூங்காவிற்கு வந்து சில வாரங்கள் ஆகின்றன. ஆனால், சார்லஸை எந்த விளையாட்டிலும் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், சார்லஸுக்கு முழுமையாகப் பேச வராது. அவன் ஒரு வகையில் மாற்றுத்திறனாளி. மற்ற வேலைகளைச் சரியாகச் செய்வான். ஆனால், அவன் நினைப்பதை தெளிவாக அவனால் சொல்ல முடியாது, விளையாட்டிலும்.
அவனுக்கு கண்ணாமூச்சி ஆடுவதில் அவ்வளவு விருப்பம் இருந்தது. அவன் எப்படி 100 வரையில் எண்ணுவான் என்று அவனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. சார்லஸுக்கு நூறு அல்ல, லட்சம் வரை கூட தெரியும். இரண்டு நாள்கள் கவனித்ததில் அந்தப் பூங்காவில் மொத்தம் 42 மறைவிடங்கள் இருக்கின்றன என்று சார்லஸ் கணக்கிட்டு இருந்தான். இருக்கைகளின் பின்னால், மரங்களின் பின்னால், விளையாட்டுப் பொருள்களின் பின்னால் என்று ஏராளமான இடங்களை அவன் தேர்வு செய்து வைத்திருந்தான். உண்மையில் குழந்தைகள் அங்கேதான் மறைந்து கொண்டார்கள். ஆனால், அவன் எவ்வளவு கெஞ்சியும் அவனை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் அவனுக்காகப் பரிந்துரை செய்தது. அவளும், எங்கே அழுத்திப் பரிந்துரைத்தால் தன்னை விலக்கிவிடுவார்கள் என அஞ்சினாள்.
மஞ்சள் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்த இருக்கையில் அவன் அமர்ந்து கொள்வான். மரத்தின் நிழலில் அந்த இருக்கை இருந்தது. அங்கிருந்து அவன் விளையாட்டைக் கவனிப்பான். அன்றைய தினம் மொத்தம் 21 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதுவும் வெவ்வேறு வயதினர், வெவ்வேறு வகுப்பில் படிக்கும் குழந்தைகள். அவனுடைய இருக்கைக்குக் கீழே எப்போதும் மற்றொரு ஜீவன் அமர்ந்திருக்கும். அதற்கு அவனே ஒரு பெயரும் வைத்திருந்தான். டைகர். அது ஒரு தெரு நாய். பழுப்பு நிறத்தில் இருந்தது. அதற்கு வேறு என்னென்ன பெயர்கள் இருக்கின்றன என்று அவனுக்கு நிச்சயம் தெரியாது. சார்லஸ், பூங்காவுக்குள் நுழைந்ததும் அவன் பின்னால் வந்து விடும். வாலை ஆட்டிக் கொண்டே அவன் எங்கு செல்கின்றானோ அங்கே செல்லும். அந்தப் பூங்காவுக்குள் அவனைச் சுற்றிச் சுற்றி வரும். அவன் எந்த இருக்கையில் அமர்கிறானோ, அதற்குப் பக்கத்தில் கீழே அமர்ந்து கொள்ளும். அவன் விளையாட்டை ரசிப்பதை ரசிக்கும். மாலை மங்கியதும் சார்லஸ் கிளம்பிய பிறகு டைகர் எங்கே போகிறது என்று யாருக்குமே தெரியாது. இப்படியே நாள்தோறும் நடந்து கொண்டிருந்தது.
சார்லஸுக்குத் தன்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை என்கிற வருத்தம்தான். ஆனால், அவன் யாரிடமும் சென்று எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, யார்மீதும் குற்றம் சுமத்தவுமில்லை. ஒரு நாள் மாலை வேளையில் பூங்காவிற்குள் நுழைந்தபோது பூங்காவில் யாருமே இல்லை. தன் பின்னால் டைகர் வருவதை மட்டும் கவனித்தான். டைகர் அன்று அவன் காலைப் பிடித்து ஏனோ இழுத்தது. அவன் அதன் பின்னால் சென்றான். வழக்கமாகக் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாட்டில் கண்ணை மூடி எண்களை எண்ணும் மரத்திற்குக் கீழ் நின்று கண்களை மூடிக்கொண்டது. சார்லஸுக்கு விஷயம் புரிந்தது. தன்னை ஒளிந்துகொள்ள டைகர் சொல்கின்றது எனப் புரிந்துகொண்டான். உடனே ஓடிச்சென்று ஓர் இடத்தில் ஒளிந்துகொண்டான். டைகர் அவனைத் தேடியது. ஒவ்வொரு இடமாக தேடிச்சென்றது. நாற்பத்து இரண்டாவது இடத்தில் அவன் இருந்தான். அவனைப் பார்த்ததும் வாலை ஆட்டியது. அடுத்ததாக சார்லஸ் கண்களை மூடிக்கொண்டு எண்ணினான். டைகர் மறைந்து கொண்டது. நான்காவது முயற்சியிலேயே கண்டுபிடித்தான். மீண்டும் டைகர் கண்களை மூடி எண்ணியது. இப்படியாக பத்து முறை தொடர்ந்தது. வேண்டும் என்றே டைகர் வெகு நேரம் எடுத்து சார்லஸைக் கண்டுபிடித்தது. சார்லஸ் அவ்வளவு மகிழ்வாக இருந்தான்.
இரண்டாம் முறை விளையாட்டைத் துவங்கியபோதே மற்ற குழந்தைகள் வந்துவிட்டனர். ஆனால், இவர்களின் ஆட்டத்தை ஆர்வமாக வெளியில் இருந்தே பார்த்தனர். டைகரோ சார்லஸோ இவர்கள் வந்ததைக் கவனிக்கவே யில்லை. சார்லஸ் களைத்துப் போனதால் அதே மஞ்சள் இருக்கையில் அமர்ந்தபோது எல்லோரும் ஓடிச்சென்று சார்லஸையும் டைகரையும் கட்டிக்கொண்டனர்.
“மன்னிச்சிடு சார்லஸ்” என்றனர் எல்லோரும்…