கோமாளி மாமா-17 : சொல்லும் செயலும்
விடுமுறை நாள். கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க தோட்டத்திற்கு முதல் ஆளாக மல்லிகா வந்து சேர்ந்தாள். அடுத்து வந்த செல்வம் “இந்தா மல்லிகா, நீ சொன்ன மாதிரியே அழகான வீடு படம் வரைஞ்சிட்டேன்’ என்று கையில் வைத்திருந்த படத்தை நீட்டினான்.
சுருட்டி இருந்த படத்தைப் பிரித்துப் பார்த்தாள் மல்லிகா. “செல்வம்… நான் கேட்டது சாதாரண குடும்பம் வசிக்கிற மாதிரி எளிமையான வீட்டோட படம். நீ வரைஞ்சிருக்கிறது ரொம்ப வசதியான வீடா இருக்கு. ஊகூம்… இதை எங்க டீச்சர் ஏத்துக்கவே மாட்டாங்க.’’
“மல்லிகா… நீ என்கிட்டே ஒரு வீடு வரைஞ்சு குடுன்னுதான் சொன்னே. அது சாதாரண வீடா… வசதியான வீடான்னு சொல்லலே. இப்ப டீச்சர் ஏத்துக்கலேன்னா நான் என்ன செய்ய முடியும்? மறுபடியும் என்னாலே கஷ்டப்பட்டு வரைய முடியாதுப்பா…” என்று செல்வம் பதில் சொல்லும்போதே மாணிக்கமும் கோமாளி மாமாவும் தோட்டத்திற்குள் வந்துவிட்டார்கள்.
“என்னடா, மல்லிகா கேட்ட வீடு படம் வரைஞ்சு கொண்டு வந்துட்டியா?’’ என்றான் மாணிக்கம்.
“செல்வம்… வீடு வரைஞ்சுட்டான்… ஆனா, அந்த வீடு எனக்குத்தான் பயன்படாமப் போச்சு’’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள் மல்லிகா.
“ஏன்? என்ன ஆச்சு? வீடு நல்லாயில்லியா?’’ என்றார் கோமாளி.
“நான் கேட்டது சாதாரண வீடு.. செல்வம் வரைஞ்சிருக்கிறது ரொம்ப வசதியான வீடு. எங்க டீச்சர் இதைப் பாத்தா, “நான் என்ன சொன்னேன்… நீ என்ன செய்திருக்கே’’ன்னு சத்தம் போடுவாங்க… அதான் பயமா இருக்கு’’ என்றாள் மல்லிகா.
“மல்லிகா என்கிட்ட சொல்லும்போதே தெளிவா விளக்கமா சொல்லியிருந்தா சாதாரண வீடு வரைஞ்சிருப்பேன். எனக்கொரு வீடு படம் வரைஞ்சு குடு செல்வம்னு கேட்டா… சரி… வசதியான வீடா இருக்கட்டுமேன்னு அழகான வீட்டைக் கஷ்டப்பட்டு வரைஞ்சுக்கிட்டு வந்தேன்’’ என்றான் செல்வம்.
“செல்வம்… கஷ்டப்படாம சாதாரண வீடு ஒன்னு மல்லிகாவுக்கு சீக்கிரம் வரைஞ்சு குடுத்துடு’’ என்று சமாதானப்படுத்திப் பேசினார் கோமாளி மாமா.
“சரி… நாளைக்கு காலையில வரைஞ்சு கொண்டு வந்து தர்றேன்… இனிமே ஏதாவது சொன்னா தெளிவா முன்னாடியே சொல்லு… இல்லேன்னா… பின்னாடி எவ்வளவு கஷ்டம் பாரு’’ என்று சலித்துக் கொண்டான் செல்வம்.
“மாமா… படம் வரையிறதை செல்வம் பாத்துக்குவான்… நீங்க கதையைச் சொல்லுங்க’’ என்று மரத்தடியில் உட்கார்ந்தான் மாணிக்கம். மற்றவர்களும் உட்கார்ந்தனர்.
“இன்னைக்கு கதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன விளையாட்டு’’ என்றபடி தன் சட்டைப் பையில் கைவிட்டு மூன்று துண்டுக் காகிதங்களை எடுத்தார். “இது கிழிந்து போன ஒரு படம். இந்த மூன்று துண்டுகளையும் சரியாக இணைத்தால் முழுப் படம் வரும். அப்போதுதான் அது என்ன படம் என்று தெரியும். இந்தாங்க, இதை சேர்த்து முழுப் படமாக்குங்க பார்ப்போம்’’ என ஆளுக்கு ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தார்.
மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூன்று பேரும் ஆளுக்கொரு கிழிந்த காகிதத்தை வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் திருப்பித் திருப்பி சேர்த்துப் பார்த்தனர். சிறிது நேரத்திற்குப் பின் துண்டுக் காகிதங்கள் மூன்றும் சேர்ந்து முழு வடிவமானது.
அந்தப் படம் கோட்டு ஓவியத்தில் வரையப்பட்ட காண்டாமிருகத்தின் படம்.
“கோமாளி மாமா, இது யாரோ வரைஞ்ச காண்டாமிருகத்தோட படம். இதை வச்சுதான் இன்னைக்கு கதை சொல்லப் போறீங்க… சரியா?’’ என்றாள் மல்லிகா.
“இல்லை. காண்டாமிருகத்தோட கதையில்லே. இதை வரைஞ்ச ஓவியரோட கதை.’’
“1515ஆம் ஆண்டுல வரையப்பட்ட படம் இது’’ என்று கோமாளி மாமா சொல்லி முடிக்கும்போதே, “அடேங்கப்பா! கிட்டத்தட்ட 600 ஆண்டுக்கு முன்னாடி வரைஞ்சதா!… என ஆச்சரியப்பட்டான் மாணிக்கம்.
“சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னே முதலாம் போர்ச்சுக்கல் அரசர், தன் வாழ்நாளில் காண்டாமிருகத்தையே பார்க்காத பத்தாம் போப் லியோவுக்கு இந்திய காண்டாமிருகம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.
15_16ஆம் நூற்றாண்டுல அரிய விலங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் அய்ரோப்பாவில பிரபலம் அடைந்த காலம்.
போப் லியோவோட அப்பா ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சி சாலையை பிளோரேன்சுங்கிற இடத்திலே வெச்சிருந்தாரு. அங்கே இருந்து இந்தியக் காண்டாமிருகத்தை கப்பல்ல ஏத்தி அனுப்பி வைச்சாரு…
அவர் அனுப்புன அந்தப் பரிசு ரோம் நகரத்தை வந்து சேரவே இல்லை.
லிஸ்பன்லயிருந்து காண்டாமிருகம் ஏத்துன கப்பல் மத்திய கடல் பகுதியில வரும்போது பலத்த சூறைக்காற்று மழையில சிக்கி சின்னா பின்னமாகி கடல்ல மூழ்கிடுச்சு. பரிசா அனுப்புன அந்தக் காண்டாமிருகமும் கடல்ல மூழ்கி இறந்து போச்சு. அந்தக் கப்பல்ல பயணம் செஞ்ச சில பேர் உயிர் பொழைச்சு நீண்ட நாள் கழிச்சு ரோம் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தாங்க.
தனக்கு அனுப்பப்பட்ட பரிசுப் பொருளான காண்டாமிருகம் எப்படி இருக்கும்னுகூட தெரியாத பத்தாம் போப் லியோ மனவேதனை அடைஞ்சாரு.
அந்த நேரத்தில அங்க இருந்த சிறந்த மரச் சிற்பியும், ஓவியருமான ஜெர்மன் நாட்டுக்காரரான ஆல்பர்ட் டுயூரர் இந்தியக் காண்டாமிருகத்தோடு கப்பல்ல பயணம் செய்து உயிர்பிழைச்சு வந்தவங்க தாங்கள் பார்த்த காண்டாமிருகத்தைப் பற்றி சொல்லச்சொல்லக் கேட்டு இந்தப் படத்தை வரைஞ்சாரு. ஆல்பர்ட் டுயூரரும் இதுக்கு முன்னே காண்டாமிருகத்தைப் பார்த்ததே இல்லை.
சிலபேர் தாங்கள் பார்த்ததை சொல்லக் கேட்டு ஓர் ஓவியர் வரைந்த படம்தான் இது. இந்தப் படம் வரையப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரோம் நகரத்து மக்கள் காண்டாமிருகத்தையே பார்த்தாங்களாம்!’’
“அடேங்கப்பா… தான் பார்க்காத மிருகத்தைப் பார்த்தவங்க சொல்லக் கேட்டு வரைஞ்சதே இவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும்… கொஞ்சம்கூட மாறாம சிறப்பா இருக்கே’’ என்றாள் மல்லிகா.
“நீ சொல்லி ஏற்கெனவே பார்த்த ஒரு வீட்டை வரைய செல்வத்துக்கு வரலேன்னு சொல்லிக் கிண்டல் செய்யிறியா’’ என்றான் மாணிக்கம்.
“பார்த்ததோ, பார்க்காததோ சொல்றவங்க தெளிவா சொன்னாதான் யாராலேயும் வரைய முடியும்…’’ என்றான் செல்வம்.
“சொல்லும் செயலும் ஒழுங்கா இருந்தாத்தான் ஓவியம் மட்டுமில்லே, நம்ம வாழ்க்கையும் நல்லா இருக்கும்.
சொல்றது ஒண்ணு… செய்யறது ஒன்னுன்னு இருந்தா எதையுமே சிறப்பா செய்ய முடியாது. சிறப்பா சொல்லவும் தெரியணும்; சொல்றதைக் கேட்டு சிறப்பா செய்யவும் தெரியணும்’’ என்றார் கோமாளி மாமா.
“ஆல்பர்ட் டூயூரர் புகழ் பெற்ற ஓவியரு. நான் ஒரு சாதாரண ஆளு… மல்லிகா தெளிவாச் சொல்லாததாலே தப்பா வரைஞ்சுட்டேன்’’ என்றான் செல்வம்.
“ஒரு செயலைச் செய்ய புகழ் பெற்ற ஒருத்தரா இருக்கணும்ங்கிற அவசியமில்ல. நாம செய்யற செயலே நமக்குப் புகழை உண்டாக்கும்’’ என்றார் கோமாளி.
“மாமா… நான் என் தேவையத் தெளிவா செல்வத்துக்கிட்ட சொல்லாதது என் தப்புதான்’’ என வருத்தத்துடன் சொன்னாள் மல்லிகா.
“சரி… சரி… இனிமே எதையுமே சரியா, தெளிவா, தெரிஞ்சு சொல்வோம்! சரியா தெளிவா புரிஞ்சு செய்வோம்…’’ என பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தான் மாணிக்கம்.
– மீண்டும் வருவார் கோமாளி