உழைப்பா? அதிர்ஷ்டமா?
அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை அடிக்கடி பேசக் கேட்டிருப்பீர்கள். எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணுங்க என்று பேசுவார்கள். ஆனால், அதன் பொருளை அவர்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.அதிர்ஷ்டம் என்பதற்கு என்ன பொருள் தெரியுமா? குருட்டுத்தனம் என்று பொருள். அதாவது திர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள். அ திர்ஷ்டம் என்றால் பார்வையின்மை – குருட்டுத்தனம் என்று பொருள். அதிர்ஷ்டம் என்ற சொல்லின் பொருள் இப்படி இருக்க பலரும் அதனைப் பயன்படுத்தி மனிதர்களைச் சோம்பேறி ஆக்கி வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இந்தச் சம்பவத்தை உங்களுக்குத் தருகிறோம். இங்கிலாந்து நாட்டின் மன்னராக மூன்றாம் ஜார்ஜ் இருந்தபோது, நாட்டு மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என அறிய விரும்புவார். மாறுவேடத்தில் சென்று நாட்டின் நிலைமையைக் கண்டு வருவார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க ஆசைப்பட்டார் மன்னர். விருந்தோடு மக்கள் பார்த்து இன்புற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தார். முறைப்படி மக்களுக்கு அறிவித்தார். மன்னர் கொடுக்கும் விருந்துக்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். ஊரே காலியாக இருந்தது. மக்களே இல்லாத ஊரினைக் காண, மன்னர் குதிரையில் மாறுவேடத்தில் வந்தார்.
அப்போது, ஒரே ஒரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்பெண்ணைப் பார்த்த மன்னர், பெண்ணே, ஊரே காலியாக உள்ளது, எல்லோரும் எங்கே சென்றுள்ளார்கள் எனக் கேட்டார்.
வேலையில் தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த அப்பெண், தன் பார்வையினைத் திருப்பாமலேயே, மன்னர் திடீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு பரிசுப் பொருளினையும் வழங்க உள்ளாராம். எல்லோரும் அதிர்ஷ்டத்தை நம்பிச் சென்றுள்ளனர் என்று கூறினார்.
இதனைக் கேட்ட மன்னர், நீ போகவில்லையா? உனக்கும் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதே என்றார். வேலையைச் செய்து கொண்டே அப்பெண், அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேனே இந்த வேலைக்கான கூலி நிச்சயம் எனக்குக் கிடைக்கும். விருந்துக்குப் போனால் இன்றைய நாளினை என் வாழ்நாளில் இழந்ததாகக் கருதுகிறேன். இன்று வேலை செய்த கூலியையும் இழந்துவிடுவேன். என் குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பிலிருந்தும் தவறிவிடுவதாகக் கருதுகிறேன். எனவே, நான் விருந்துக்குச் செல்லவில்லை என்றாள் அந்தப் பெண்.
இதனைக் கேட்ட மன்னர் வியப்புற்று, பெண்ணே! அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து மன்னரைத் தேடிச் சென்றவர்களுக்கு அதிர்ஷ்டமில்லை. உன் உழைப்புதான் அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது என்று பாராட்டி பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
– செல்வா