அறிவியல் : ஒளியை விட வேகமாய்..
அபி
“குழலி, சாப்பிட வாம்மா’’, “இதோ வந்துட்டேன் அம்மா, என்றபடி பூங்குழலி குறிப்பேட்டையும் பேனாவையும், இருவிழித் தொலைநோக்கியையும் (Binocular) மொட்டை மாடியிலேயே வைத்துவிட்டுக் கீழே இறங்கினாள். ஹய்யா…. பூங்குழலி, கீழே சென்றுவிட்டாள். அவள் இல்லாத நேரத்தில்தான் அவளது குறிப்பேடு, பேனா மற்றும் இருவிழித் தொலைநோக்கியான பைனோவால் பேசிக்கொள்ள முடியும். அவை பேசத் தொடங்கின.
“ஹே, பைனோ, ரொம்ப நேரமா, நீயும் பூங்குழலியும் மேலேயே பாத்துட்டு இருந்தீங்களே, என்ன பாத்துட்டு இருந்தீங்க?’’ என்று பேச்சைத் தொடங்கியது மின்னி. நம்ம கதையில் வரும் குறிப்பேட்டின் பெயர் மின்னி, எழுதுகோலின் பெயர் லின்னி.
“அதுவா மின்னி, பன்னாட்டு விண்வெளி மய்யம் நகர்வதை பாத்துகிட்டு இருந்தோம்’’ என்ற பைனோ சொன்னதும், “ஆமாம், ஆமாம், பூங்குழலி கூட சொன்னாங்களே, அதுல இருந்து பூமியைப் பார்த்தா நல்லா இருக்கும்னு’’ என்று நினைவுபடுத்திச் சொன்னது லின்னி.
“பாதி தூக்கத்துல, நீ கவனிக்கல போல, சரி அது இருக்கட்டும். இப்போ விண்வெளி பற்றி என்ன புது செய்தி வச்சு இருக்குற பைனோ?’’ என்று வழக்கம்போல, கேள்விகளை ஆரம்பித்தது லின்னி.
“ம்ம்ம்… நியாபகம் வந்துடுச்சு’’ என்று குதித்தபடி ஆரம்பித்தது பைனோ. “குழலி அண்மையில் ஆராய்ச்சி ஒன்றைப் பத்திப் படிச்சுட்டு இருந்தாங்க, கொஞ்சம் பழசுதான், இருந்தாலும் சொல்றேன்; அந்த ஆராய்ச்சியின் பெயர், பிரேக் த்ரு ஸ்டார்ஷாட் (Break through starshot)’’ என்றபோது, குறுக்கில் பேசியது மின்னி. “அப்போ நாங்க எங்க போனோம்?’’
அதற்கு பைனோ, “நீங்க இல்லை. அதனால, வேறு ஒரு காகிதத்துல குறிப்புகள் எடுத்தாங்க. சரி, இந்த ஆராய்ச்சி மூலமா, 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்குற ப்ராக்ஸிமா சென்டியுரி (Prooxima Centauri) எனும் நட்சத்திரத்தில் இருக்கும் வாழத் தகுந்த இடமான ப்ராக்ஸிமா சென்டியுரி பியை (Proxima Centauri B) ஆய்வு செய்யுறதுதான் ஆராய்ச்சியாளர்களின் நோக்கம்’’ என்றது பைனோ.
“இங்க இருந்து 4.3 ஒளியாண்டுகள்னா, விண்கலம் அங்க போக 80,000 ஆண்டுகள் ஆகும். ஆனா, நம்ம விண்வெளியாளர்கள், வடிவமைக்கப் போற விண்கலம், அந்த நட்சத்திரத்தை வெறும் 20 ஆண்டுகளில் சென்றடையப் போகுது’’ என்று பைனோ சொன்னதும், வாயடைத்துப் போனது மின்னி. ஆனால் லின்னி, “அது எப்படி 20 ஆண்டுகளில் அவ்ளோ தூரத்தைக் கடக்க முடியும்?’’ என்றது.
“அட இரு, சொல்லுறேன். முதல்ல, அந்த விண்கலம் பத்தி சொல்றேன். 4M X 4M அளவில கிராஃபின் (Graphene) வச்சு செய்யப்பட்ட தகடு மாதிரியான அமைப்பு இருக்கும். அதற்கு நடுவுல, 1 கிராம் எடை இருக்குற Nano-technology வச்சு செய்யப்பட்ட (Nanochip) இருக்கும். அதுக்கு பெயர் ஸ்டார்சிப் (Starchip). இந்த ஸ்டார்சிப்பில, 5 புகைப்படக் கருவிகள், ஒரு மின்கலம் (Battery), 4 செயலாக்கிகள் (Processor), பாதுகாப்பு பூச்சு ஆகியவை இருக்கும். இதுதான் அந்த விண்கலத்தின் வடிவமைப்பு’’ என்றது பைனோ.
“ஒரு கிராம் Nanochipக் குள்ள இவ்ளோவா?’’ என்று வாயைப் பிளந்தன மின்னியும் லின்னியும். “இதுக்கே இவ்ளோ ஆச்சரியப்பட்டா எப்படி, இது வெறும் ட்ரெய்லர்தான், படம் இன்னும் வெளியாகவே இல்லை. இருங்க, இருங்க’’ என்றபடி சிரித்தது பைனோ. அதற்கு மின்னி, “ஒரு கிராம்ல விண்கலம். அது 4.3 ஒளி ஆண்டுகள் கடக்குமா? சஸ்பென்ஸ் தாங்கல, சொல்லு பைனோ’’ என்றது. மின்னியை ஆமோதிப்பதுபோல முகத்தை வைத்துக் கொண்டது லின்னி.
“சரி, சரி சொல்றேன்’’ என்று ஆரம்பித்தது பைனோ. “ஒரு பெரிய விண்கலத்துக்குள்ள, இந்த சிறு விண்கலங்கள் சுமார் 1000 வச்சு விண்ணில் ஏவப்படும். இந்த பெரிய விண்கலம், ஒரு சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும், ஒவ்வொரு விண்கலமா வெளியில விடப்படும். பூமியில இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு இருக்குற சீரொளியை (Laser bean) அந்த ஸ்டார்சிப்பை நோக்கிச் செலுத்தினா, அந்த தகடு மற்றும் ஸ்டார்சிப், நொடிக்கு சுமார் 55,000கி.மீ வேகத்தில் நகர ஆரம்பிக்கும். இது ஒளியின் வேகத்துல 18_19%. லின்னி, நீ அப்போ கேட்டியே, எப்படி 20 ஆண்டுகளில் போக முடியும்னு, ஒளியின் வேகத்துல 18_19% வேகத்துல இந்த விண்கலம் போகுறதாலதான், அவ்ளோ தூரத்தை 20 ஆண்டுகளில் கடக்க முடியுது. இது மாதிரியே ஒவ்வொரு விண்கலமா, சீரொளியால நகரும்’’ என்றது பைனோ.
“எல்லாம் சரி பைனோ, 1000 விண்கலமா செலுத்தப் போறாங்க?’’ என்று வினவியது மின்னி. “ஆமா மின்னி, 4.3 ஒளியாண்டுகளில் கடக்கணும். அதோட வேகம் அதிகம் என்பதால் விண்கலம் பழுதாக வாய்ப்பு அதிகம். அப்படி பழுதாகிய விண்கலங்களைத் தாண்டி சில விண்கலங்கள் நிச்சயமாக இலக்கை அடையும். அதனாலதான், 1000 விண்கலங்களை அனுப்புறாங்க’’ என்ற பைனோ, மேலும் தொடர்ந்தது-. “முதல்முதலில், இந்தத் திட்டத்தைப் பத்தி 12.4.2016இல் அறிவியலாளர்கள் சொன்னாங்க. அதோடு, 2036இல் இதை விண்ணில் ஏவத் திட்டமிட்டு இருக்காங்க’’ என்று முடித்தது.
“மனிதன் உருவாக்கப்போற பொருள், ஒளியின் வேகத்துல, 18_19% வேகத்துல வெற்றிகரமா போனா, அது எவ்ளோ பெரிய சாதனை! நினைக்கும்போதே புல்லரிக்குது’’ என்று மனித குலத்தை மெச்சியது லின்னி.
“அதுவும் சரிதான். ஆனா, உனக்குதான் கையில முடியே இல்லை. உனக்கு புல்லரிக்குதா?’’ என்று சிரித்தது மின்னி. “ஆரம்பிச்சிட்டாங்கய்யா…” என்பதுபோல் அமைதியானது பைனோ. மின்னியும் லின்னியும் ஏதோ பேசத் தொடங்க, பூங்குழலியின் காலடிச் சத்தம் கேட்டு அமைதியாகின.