காரணமின்றி ஏற்காதீர்கள் : புத்தர் கடவுளின் அவதாரமா?
சிகரம்
“அவதாரம்’’ என்பதற்கு மேலிருந்து இறங்கி வருதல் என்று பொருள். கடவுள் வானத்தில் இருக்கிறார் என்று நம்பும் மக்கள், தேவையானபோது அக்கடவுள் பூமிக்கு இறங்கிவந்து மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புகிறார்கள். அந்தவகையில்தான் கடவுள் எனப்படும் மகாவிஷ்ணு இராமனாக வந்து பிறந்தார் என்கின்றனர்.
பொதுவாக மக்களால் மிகவும் விரும்பப்-படுகின்றவர்களை கடவுளின் அவதாரமாகக் கற்பிப்பது தொடர்ந்து செய்யப்படுகிறது. மனிதன் அடையமுடியாத (செல்ல முடியாத) இடத்தில் கடவுள் இருப்பதாக நம்புகின்றனர். சிவன் இமயமலை உச்சியில் இருப்பதாய் நம்பினர். காரணம், அங்கு மனிதன் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், இக்காலத்தில் மனிதன் அங்கு சென்றுவிட்டான். அங்கு சிவனைக் காணோம்; பக்கத்தில் பார்வதியையும் காணோம். எதிரில் காளை மாட்டையும் காணோம்.
வானத்தில் கடவுள் இருக்கிறார் என்றனர். இன்றைக்கு வானத்தில் மனிதன் பல இடங்களுக்கும் சென்று வருகிறான். தங்கியும் இருக்கிறான். ஆனால், கடவுள் அங்கு எங்கும் இல்லை. ஆக, கடவுள் என்பதும் இல்லை. கடவுள் அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கிறார் என்பதும் இல்லை.
பூமியில் பிறக்கிற எல்லோருமே மனிதர்கள்தான். மனிதனாகப் பிறப்பவர் எவரும் இறக்காமல் இருப்பதில்லை. எல்லோரும் இறக்கின்றனர். இறப்பவர் கடவுள் ஆகார். கடவுளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க பிறப்பவர், இறப்பவர் எப்படி கடவுளாக, கடவுள் அவதாரமாக இருக்க முடியும்?
புத்தர் யார்?
வட இந்தியாவில் கபிலவஸ்து என்ற நகரில் 2,500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் புத்தர். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சித்தார்த்தர். அவரது தந்தை பெயர் சுத்தோதனர். அவர் சாக்கியகுலத்தை ஆட்சி செய்த தலைவர். என்கிறது வரலாறு. செல்வக் குடும்பத்தில் பிறந்து வசதியாய் வாழ்ந்தவர் என்பது உண்மை.
புத்தருக்கு யசோதரை என்ற பெண்ணை மணம் முடித்தனர். அவர்களுக்கு இராகுலன் என்று ஒரு மகன் பிறந்தான். இயல்பிலேயே தத்துவம், மனதை ஆளுதல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார் ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் சாக்கியர்களுக்கும் கோலியர்ககளுக்கும் வழக்கம்போல் பிரச்சினை எழுந்தது. பேசிப்பார்க்கலாம் என்றார் ஆனால் சித்தார்த்தர். சண்டையிட வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. சண்டை செய்ய மறுத்து துறவறம் ஏற்றார் சித்தார்த்தர்.
தமது 29ஆம் வயதில் மனைவி, மகன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து தனிமையில் சென்றார். ஆறு ஆண்டுகள் உலக துன்பத்திற்கான காரணங்களை ஆராய்ந்தார். அவரின் 35ஆம் வயதில் அறிவுத்தெளிவு (சம்ம்போதி) பெற்றதாக உணர்ந்தார்.
உயிர்களுக்கு ‘ஆன்மா’ இல்லை என்று உறுதியாய்க் கூறினார். இது பகுத்தறிவின் உயர்நிலையில் அவர் அறிந்த உண்மையாகும்.
புத்தர், தான் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
புத்தர், ஜாதி வேற்றுமைகள் இல்லை. மனிதர் எல்லோரும் சமம் என்றார். அன்பும், ஒழுக்கமும் அனைவருக்கும் வேண்டும் என்றார். அறியாமையை விலக்க அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.
தன்னைப் போலவே பிற உயிர்களையும் கருத வேண்டும். பிற உயிர்களைக் கொல்லக் கூடாது; கோபம் கூடாது; உண்மையைப் பேச வேண்டும்; ஆணவத்தை அகற்று; பொறாமையை விட்டொழி; அடக்கம், கட்டுப்பாடு, நற்செய்கை, மனஉறுதி, நாவடக்கம், அஞ்சாமை, அஞ்சுவதற்கு அஞ்சுதல், தன்நம்பிக்கை, குற்றம் செய்யாமை போன்ற நற்கருத்துகளை மக்களுக்குப் போதித்தார்.
புத்தர் கூறிய அறவுரைகள், அவர் அமைத்த சங்கம், அவரது வாழ்க்கை இவை தொகுக்கப்பட்டு ‘திரிபிடகம்’ எனப்பட்டது. உலகில் முதன்முதலில் தன் கொள்கைகளைப் பரப்ப சங்கம் அமைத்தவர் புத்தரே ஆவார்.
புத்தம் என்பது மதம் என்பது தப்பு. கடவுள் நம்பிக்கை அடிப்படையில், ஆன்மா நம்பிக்கையில் கருத்துக் கூறுவதுதான் மதம். ஆனால், புத்தருக்கு கடவுளும் இல்லை, ஆன்மாவும் இல்லை. எனவே, புத்தம் என்பது மதம் அல்ல. அது சங்கம்.
புத்த தர்மத்தைப் பின்பற்றுகின்றவர்கள் மூன்று சரணங்களை ஏற்பர்.
“புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி’’
புத்தர் என்றால் அறிவு தம்மம் என்றால் கொள்கை சங்கம் என்றால் அமைப்பு.
ஆக புத்தம் என்பது மதம் அல்ல. புத்தர் கடவுள் அல்ல, கடவுளின் அவதாரமும் அல்ல.
ஆரியப் பார்ப்பனர்களின் மனித எதிர்ச் செயல்களைக் கண்டித்து மனித சமத்துவத்தை, உயிர்நேயத்தைப் போதித்த ஒரு புரட்சியாளர் தான் புத்தர் என்பதை பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டும். புத்தர் காட்டிய அறிவு நெறியில், நேர்மையாய் நடக்க வேண்டும்.