வரலாறு – பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும்
சரா
நமக்குத் தெரியாமல் நமது காலடியில் கீழடி நான்காயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடந்தது, புதைந்து கிடந்த நமது தாயகமாம் கீழடியைத் தோண்டத் தோண்ட பெரும் வியப்புகளை உலகிற்கே அளிக்கக் காத்திருக்கிறது.
அதுவும் அண்மையில் அகழாய்வில் கிடைத்த பொருள்களுக்கும் அரேபியப் பாலைவனத்தில் உள்ள அழிந்து போன கல்நகரம் என்று அழைக்கப்படும் பெட்ராவிற்கும் நெருங்கிய தொடர்பு உடையதாகத் தெரியவருகிறது, முதலில் பெட்ராவைப் பற்றியும் அதன் வரலாற்றையும் அறிவோம்.
பெட்ராவும் மதீனாவும்
மத்திய ஆசியப் பாலைவனத்தில் பழங்குடிகள் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாலைவனத்தில் ஒட்டகம், ஆடுகள் மேய்க்கும் வேலையையும் வளமான சில பகுதிகளில் விவசாயமும் செய்து வாழ்ந்தனர்.
நாகரிகம் வளர வளர விவசாயத்தை அடுத்து வணிகம் முக்கிய பங்காற்றத் துவங்கியது.
இந்த வணிகம் பொருள்கள் கிடைக்காத பகுதிகளில் இருந்து, எல்லாம் எளிதில் கிடைக்கும் பகுதிகளை நோக்கிச் செல்லும்படி மக்களைத் தூண்டியது.
சீனா, இந்தியா போன்ற பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருள்களும் இதர கலைப் பொருள்களும் ஆப்பிரிக்காவின் எகிப்து, அய்ரோப்பியக் கண்டத்தின் ரோம் நகரம் ஆகிய மேற்கு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அப்படிக் கொண்டு செல்லும் மக்கள், தங்களது வணிகப் பொருள்களை, பொதுவான இடத்தில் வைத்து, பண்டமாற்று செய்வதற்குப் பாதுகாப்பான இடமாக இஸ்லாமியர்களின் புனித நகரமாகக் கருதப்படும் மெக்கா விளங்கியது. விவசாயம் மிகவும் குறைவான அரேபிய மக்களுக்கு இந்த வணிகம் மிகவும் பிடித்தமான தொழிலாகிவிட்டது.
மெக்கா நகரம் செங்கடலுக்கு அருகில் உள்ளது, பெட்ரா நகரம் மத்திய தரைக் கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளதால் இந்த இரண்டு நகரங்களும் ஆசிய அய்ரோப்பிய வணிகப் பாதைகளில் மிகவும் முக்கிய நகரங்களாகத் திகழ்கின்றன.
அரேபிய தீபகற்பப் பகுதியில் வாழ்ந்த மக்கள் நெபாடியகர் என்று அழைக்கப்பட்டனர். பிற்காலத்தில் இவர்களில் ஒரு பிரிவினர் அராபியர்கள் என்று அழைக்கப்பட்டனர். கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் வேத நூலான விவிலியம் மற்றும் குரான் நூல்களில் இந்தியா, சீனா வரை சென்று வணிகம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அய்ரோப்பாவிலிருந்து தொடங்கி இந்தியா, சீனா வரையில் சென்ற வணிகப் பாதையில் மிக முக்கியமான இடத்தில் இருந்ததால், பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். அகழ்வாராய்ச்சி செய்தபோது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பானைகளின் துண்டுகள் கிடைத்திருக்கின்றன பெட்ராவில்.
இவர்கள் பாலைவனத்தின் நடுவில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கட்டிய கனவு நகரம்தான் பெட்ரா. 40 மீட்டர்கள் உயரமுள்ள இந்தக் கட்டடம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மலையைக் குடைந்து, ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. கிழக்கில் சீனாவையும், மேற்கில் ரோமையும் இணைக்கும் வியாபார மய்யமாக இருந்த பெட்ராவைக் கடந்து தினமும் ஏராளமான வணிகர்கள் வண்டிகளில் பொருள்களைக் கொண்டு சென்றார்கள். வந்தவர்கள் ஓய்வெடுக்கவும், தங்களின் கால்நடைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காகவும், பெட்ராவில்தான் ஒன்று கூடுவார்கள். தண்ணீர் கிடைப்பது அரிதான இடமாக பெட்ரா இருந்தது. மழையும் அரிது,அருகில் நீர்நிலைகளும்இல்லை. எனவே நீர் விநியோகம், பாசன முறைகள், அணைகள் என எல்லாமும் திட்டமிட்டுக் கட்டப்பட்டு மக்களின் உபயோகத்தில் இருந்தன.
இந்த பெட்ரா பைபிளில் சேலா என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது சொடோம்க்கு அருகில் உள்ள நகரம் என பைபிளில் குறிச்சொற்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இப்பகுதியில் இயற்கையிலேயே கிடைக்கும் தார், எகிப்தில் இறந்து போன ராஜாக்களின் உடலைப் பதப்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்க வைத்திருக்கிறது. இந்தத் தாரோடு தென் இந்தியாவிலிருந்து (தமிழ்நாடு) கொண்டு செல்லும் வாசனைப் பொருள்கள், முத்து, பவளம், பருத்தி ஆடை போன்றவை பெட்ராவிலிருந்து எகிப்து, ரோம் நகரங்களுக்குச் சென்றுள்ளன.
பெட்ராவில் நிலநடுக்கம் ஏற்படும் போது மண்ணில் இருந்து தீப்பிழம்புகள் மேலெழும். இந்தத் தீப்பிழம்புகள் ஜோர்டானின் பெட்ரா பகுதியைச் சுற்றி உள்ள மலைகளில் படிந்துள்ள கந்தகம் மற்றும் இதர எளிதில் எரியும் உப்புகளோடு கலந்துவிடுவதால் எளிதில் தீப்பிடித்து எரியும். இவை காற்றின் வேகத்தில் சோடோம், பெட்ரோ நகரங்கள் மீது தீப்பிழம்புக் கங்குகளாக விழும். இதை வைத்துதான் பைபிளிலும் குரானிலும் இறைவனால் சபிக்கப்பட்ட 7 நகரங்கள் மண்மேடாகின என்று கூறி கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன.
பெட்ரா உள்ளிட்ட நகரங்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகை(பூம்புகார்) மற்றும் மேற்குக் கடற்கரை (கேரள) நகரங்கள் செழித்து நாகரிகத்தோடு வளர்ந்திருந்தன. அண்மைக் காலத்தில் கிடைக்கும் கீழடி அகழாய்வுச் சான்றுகள் இதை உறுதி செய்கின்றன. கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருள்களை உலக அரங்கில் கொண்டு சென்று அதனை ஆய்வு செய்யும் போது கீழடி உலக நாகரிகத்திற்கே தாய்மடியாக இருக்கும்.
அரப்பா _ மொகஞ்சதாரோ தொடங்கி கீழடி வரை திராவிட இனம் பரந்துபட்ட இந்திய தீபகற்பத்திற்குச் சொந்தமான நாகரிக இனம் என்று உலகம் உணரத் துவங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!<