சிறார் கதை: காட்டில் ஊரடங்கு
உமையவன்
செண்பகமலை அன்றைய தினம் பெரும் பரபரப்போடு காணப்பட்டது. விலங்குகளெல்லாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. பறவைகள் தங்களின் இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டன. அனைவரின் மனதிலும் ஒரு பயம் கலந்த உணர்வு பீடித்திருந்தது. இதுவரை அவர்கள் யாரும் கேள்விப்பட்டிராத அறிவிப்பு அது! எல்லோருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்ப தென்னவென்றால், காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் மர்மமான நோய் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் காட்டில் ஊரடங்கு (காடடங்கு) அமல்படுத்தப்-படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை யாரும் தங்களின் குகை மற்றும் கூடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது, இது குரங்கு ராஜாவின் உத்தரவு” என்று சொல்லிச் சென்றது கிளி.
கிளியின் இந்த அறிவிப்புதான் விலங்குகள் மற்றும் பறவைகளின் பரபரப்புக்குக் காரணம். இதுவரை இப்படியொரு அறிவிப்போ, மர்மமான நோயோ அந்தக் காட்டில் வந்ததில்லை.
அறிவிப்பின் பின்னணியை முழுமையாக உணர்ந்திராத கரடிக் குட்டிகள், முயல் குட்டிகள், மான் குட்டிகள், சின்னச் சின்னப் பறவைகள் எல்லாம் கிளியைப் பின்தொடர்ந்து ஓடி ஆடி மகிழ்ந்தன.
காடு முழுக்க இதே பேச்சுதான், மர்ம நோய் குறித்து பல வதந்திகளும் பரவத் தொடங்கின. இந்நோய் குறித்து யாருக்கும் முழுமையாக தெரியாத காரணத்தினால் ஒவ்வொருவரும் நிறைய கட்டுக் கதைகளைச் சொல்லத் தொடங்கினர். காடு முழுக்க மர்ம நோயை விட வதந்தி வேகமாகப் பரவியது.
திடீரென்று வந்த இந்த அறிவிப்பால் உணவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிர் வாழ உணவு வேண்டும், உணவுக்கு வெளியே செல்ல வேண்டும். இப்போது என்ன செய்வதென்று விலங்குகள் எல்லாம் யோசித்தன.
செண்பக மலையின் சிறப்பே விலங்குகளும் பறவைகளும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்வதுதான். அவைகளுக்குள் எந்த வேறுபாடும், பாகுபாடும் இதுவரை வந்ததில்லை. இதைப் பார்த்து மற்ற மலைகளில் உள்ள விலங்குகள் எல்லாம் ஆச்சர்யப்படும்.
யானை, புலி, கரடி, மான், நரி, குரங்கு, சிறுத்தை போன்ற பல விலங்குகளும் மயில், பருந்து, கிளி, சிட்டுக்குருவி, இருவாட்சி, கொக்கு போன்ற பறவைகளும் செண்பக மலையில் வசித்து வந்தன.
ஊரடங்கால் காட்டுப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் குட்டி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. “ஹைய்யா…! பள்ளிக் கூடம் லீவு’’ என்று சொல்லியபடி அனைத்தும் துள்ளிக் குதித்தன. பள்ளி விடுமுறை விட்டதோடு, தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் குரங்குராஜா.
பக்கத்து மலைகளிலிருந்து இங்கு வரவும், இங்கிருந்து மற்ற மலைகளுக்குச் செல்லவும் யாருக்கும் அனுமதியில்லை என்று சொல்லியதோடு மலையின் எல்லையும் மூடப்பட்டது.
இந்த எதிர்பாராத அறிவிப்பால் பக்கத்துக்கு மலைகளுக்கு உணவு தேடச் சென்ற விலங்குகளின் நிலைமையை எண்ணி எல்லா விலங்குகளும் வருத்தப்பட்டன. மர்மநோயைவிட இது விலங்குகளுக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது.
நாளுக்கு நாள் மர்மநோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பல விலங்குகளும், பறவைகளும் ஆங்காங்கே மர்ம நோயினால் இறக்கத் தொடங்கின. ஒருபுறம் நோய்க்கு இறக்க, மறுபுறம் போதிய உணவில்லாமல் இறப்பதும் அதிகமாக இருந்தது. எவ்வளவு நாள்தான் போதிய உணவில்லாமல் வீட்டுக்குள் அடைபட்டு வாழ முடியும்.
நிலைமை மோசமடைவதைக் கவனித்த அமைச்சர்கள் இதுகுறித்து உடனே குரங்கு ராஜாவிடம் விளக்கினர். அமைச்சர்களிடம் ஆலோசித்து விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான உணவுகளைத் தினமும் வழங்கிட உத்தரவிட்டார் குரங்கு ராஜா.
விலங்கு மருத்துவக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தினார் குரங்கு ராஜா. கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் “இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் என்றும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதும், கூட்டம் கூடாமல் தனித்து இருப்பதும்தான் ஒரே வழி” என்றனர். இந்தச் செய்தி உடனே காடுகளில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார் கிளியார்.
காட்டுக்குள் முகக்கவசத்திற்கு எங்கு செல்வதென்று யோசித்தவர்களுக்கு யானையார் ஒரு யோசனை சொன்னார். அதன்படி அங்கிருந்த பெரிய பெரிய இலைகளை எடுத்து, ஊணாங்கொடி உள்ளிட்ட கொடி வகைகளை எடுத்துக்கட்டி முகக் கவசம் போல் செய்து அனைத்தும் அணிந்து கொண்டன.
“நமக்கெல்லாம் முகக்கவசம் செய்ய சிறிய இலையே போதும் யானையெல்லாம் எங்கு போகும், பத்து இலைகளை இணைத்துத்தான் முகக் கவசம் செய்ய வேண்டும்” என்று சொல்லி பலமாக சிரித்தது குட்டி முயல்.
நாட்கள், மாதங்கள் கடந்தன; இன்னும் மர்ம நோய்க்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. நிறைய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகள் போதிய பலனைத் தரவில்லை. நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றது.
குரங்கு ராஜா மீண்டும் மருத்துவக் குழுவை கூட்டி ஆலோசித்து, தடுப்பு மருந்துகளை உடனடியாகக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். மர்ம நோய் மற்றும் மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் வேகமாக நடந்தன.
காடு முழுவதும் பறந்து திரிந்த சிட்டுக் குருவிக்கு இப்போது அந்த சின்னக் கூட்டில் அடைந்து கிடப்பது சலிப்பாக இருந்தது. இதே நிலைமைதான் அங்கிருந்த எல்லோருக்கும்.
பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் வெளியில் நடமாடுவதைத் தடுக்க விலங்குகளையும், மேலே பறந்து சென்று கண்காணிக்கக் கழுகையும் பணியில் அமர்த்தியிருந்தார் குரங்கு ராஜா.
வெளிக்காட்டையும், நண்பர்களையும், உறவினர்களையும் எப்போது காண்போம் என அனைவரும் காத்திருந்தனர்,
மறுபுறம் கரடியார் தலைமையில் மூலிகைச் செடிகளைக் கொண்டு மருந்து கண்டறியும் பணியும் நடைபெற்று வந்தது. காட்டிலுள்ள எல்லா மூலிகைகளையும் கொண்டு வந்து ஆய்வு செய்து வந்தது கரடியார் தலைமையிலான குழு.
இரவு பகலாக நடைபெற்று வந்த ஆய்வில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. பல மூலிகைகள் மர்ம நோயினைக் குணப்படுத்தும் ஆற்றலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு மூலிகை மருந்தினைக் கொடுத்து சோதித்துப் பார்த்தபோது மருந்து நல்ல பலனைக் கொடுத்தது. இந்தத் தகவல் குரங்கு ராஜாவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இந்த மூலிகை மருந்தினை அதிகமாக உற்பத்தி செய்ய துவங்க உத்தரவிட்டார் குரங்கு ராஜா.
மருந்து கண்டறியப்பட்டதை அறிந்து காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்தன. குரங்கு ராஜாவின் உத்தரவின்படி முதலில் மர்மநோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கும், வயதில் மூத்த விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுக்கப்பட்டது. பின் காட்டிலுள்ள எல்லோருக்கும் இந்த மூலிகை மருந்து கொடுக்கப்பட்டது.
இப்போது விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் காட்டில் உலாவத் தொடங்கின, நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டன. முகக் கவசத்தை கழற்றி சுதந்திரக் காற்றைச் சுவாசித்தன.