ஆர்ரோ ரூட்
ஆர்ரோ ரூட் என்பது பூண்டு இன கிழங்கு வகையைச் சேர்ந்த தாவரம். அமெரிக்காவில்தான் இது முதலில் பயிரிடப்பட்டது. அங்கிருந்து மேற்கு இந்தியத்தீவிற்குச் சென்று அங்கு பரவலாகப் பயிரிடப்படுகிறது. அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியது.
இந்தக் கிழங்கு இஞ்சி இனத்தில் இருப்பதைப் போல காரம் வாசனை இல்லாமல் நல்ல மாவுக் கிழங்காக உள்ளது. இதன் மாவு அரிசி, கோதுமை மாவைப் போல் பல வகைகளிலும் பயன்படுகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையது. இந்த மாவிலிருந்து கஞ்சி, உயர் ரக ரொட்டிகள் முதலியன செய்யலாம்.
இந்தச் செடி 2 அடி முதல் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் பூக்கள் மிகச் சிறியவை. வெள்ளை நிறத்தில் இருக்கும்.
தென் அமெரிக்காவில் கரிபியன் கடற்கரையோரப் பகுதியில் வாழ்ந்த பண்டைய அரவாக் இந்தியர்கள் அம்பினால் ஏற்பட்ட காயத்தில் உள்ள விஷத்தை அகற்ற இந்தக் கிழங்கின் மாவைப் பயன்படுத்தினர். அதனால் இதற்கு ஆர்ரோ ரூட் என்ற பெயர் வந்தது. இந்தப் பெயர் முதன் முதலில் ஆங்கில மொழியில் 1696-ஆம் ஆண்டு இடம் பெற்றது. அரவாக் இந்தியர்கள் இந்தச் செடியை அரு அரு என்று குறிப்பிட்டனர். அவர்களது மொழிச் சொல்லான இதன் பொருள் உணவின் உணவு என்பதாகும்.
தாவரவியலில் மரண்டேஷியா குடும்பத்தைச் சேர்ந்த இது எந்தப் பருவத்திலும் வளரக் கூடியது.
– எஸ். தணிகைவேல்,
பெரிய காஞ்சிபுரம்