கோமாளி மாமா-18 : நல்ல ஆசிரியர்
ஓவியம், கதை: மு.கலைவாணன்
கோமாளி மாமா விடுமுறை நாளில் சொல்லும் கதையைக் கேட்க முதல் ஆளாக வந்து உட்கார்ந்திருந்தாள் மல்லிகா.
ஆனால், அவள் முகம் வாட்டமாக இருந்தது. சற்று நேரத்தில் செல்வமும், மாணிக்கமும் கோமாளி மாமாவுடன் தோட்டத்திற்கு வந்தனர்.
மல்லிகா வாட்டத்தோடு அமர்ந்திருப்பதைப் பார்த்த செல்வம், “என்ன மல்லிகா, நாங்க நேரம் கழிச்சு வந்தோம்னு வருத்தப்படுறியா?’’ என்றான்.
“இல்லேடா… கொரானா கொடுமையெல்லாம் முடிஞ்சி சீக்கிரமா பள்ளிக்கூடம் திறந்துடுவாங்களோங்கிற கவலையா இருக்கும்’’ என்று கிண்டலடித்தான் மாணிக்கம்.
கொஞ்சம் அமைதியா இருங்க; மல்லிகாவே சொல்லட்டும். “மல்லிகா… நீ எதுக்கு வாட்டமா இருக்கே?’’ என்றார் கோமாளி.
“மாமா… காலையில செய்தித்தாள்ல ஒரு பள்ளிக் கூட வாத்தியார் பெண் குழந்தைகளுக்குச் செய்த பாலியல் தொல்லைக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறதைப் படிச்சேன். அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. வாத்தியாரே இப்படி நடந்துக்கிட்டா… யாரை நம்பிப் பள்ளிக்கூடம் போறது… சீச்சீசீ.. இந்த வாத்தியாருங்களே மோசம்…’’ என பொரிந்து தள்ளினாள் மல்லிகா.
“ஓ… இதுதான் உன் வருத்தத்துக்கு காரணமா? மல்லிகா, நல்ல பயிருக்கு நடுவுல களை வளர்ற மாதிரி ஒரு சில பேர் தவறு செய்யிறதுனாலெ ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் குறை சொல்லக் கூடாது. தவறு செய்தவங்க தண்டிக்கப்படணும். இது போல வேற எங்கேயும் நடக்காம இனி எச்சரிக்கையா இருக்கணும்.
அதையெல்லாம் விட ரொம்ப முக்கியம். அடுத்த தலைமுறையை நலப்படுத்தவும், வளப்படுத்தவும் கல்வி கற்பிக்கிற ஆசிரியர்கள் தங்களோட சமூகப் பொறுப்பை உணர்ந்து நடந்துக்கவும் செய்யணும்’’ என்றார் கோமாளி.
“ஆமா… மாமா… குழந்தைகளாகிய நாங்களும் படிப்புங்கிறது பணம் சம்பாதிக்கிறதுக்கானதுன்னு நினைக்காம கவனமாப் படிச்சு அறிவை வளத்துக்கணும்’’ என்றான் செல்வம்.
“மாமா… இன்னைக்கு கதை..’’ என இழுத்தான் மாணிக்கம்.
“தப்பு செய்த வாத்தியாரை நினைச்சு வருத்தமா இருக்கிற மல்லிகாவுக்காக… சத்தமே இல்லாம சமூக மாற்றத்துக்காகப் பாடுபட்ட ஒரு ஆசிரியரின் உண்மைக் கதையைச் சொல்லப் போறேன்…’’ என்றார் கோமாளி.
“அப்படியா! அது யாருங்க மாமா?’’ செல்வம் ஆர்வத்துடன் கேட்டான்.
சொல்றேன்…
1984லே இன்றைய செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் கிராமத்திலே உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலே அரையாண்டுத் தேர்வு நடந்துக்கிட்டிருக்கு.
ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேர்வு எழுதும் எட்டாம் வகுப்பு மாணவர்களைக் கவனித்தபடி வகுப்பறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறார்.
பள்ளிக் கூடத்துக்கு வெளியே காட்டுத்தனமான பெருங் கூச்சல்.
அந்தக் கிராமத்து நாட்டாமைதான் அப்படி கத்திக்கிட்டிருந்தாரு.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தச் சத்தம் இடையூறாக இருந்தது.
ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வேகமாக பள்ளிக் கூட வாசலுக்கு வந்து பார்த்தார்.
“ஏய்… சேகரு… அம்பட்டப் பயலே… உங்கப்பனைக் காணோம். மரியாதையா நீ வந்து சவரம் செய்துவுட்டுப் போடா…’’ என உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார் ஜாதித் திமிர் கொண்ட நாட்டாமை.
ஆசிரியருக்கோ… அந்தச் சத்தம் எரிச்சலூட்டியது. ஆனாலும் பொறுமையாக,
“நாட்டாரய்யா… சேகரு பரிட்சை எழுதிக்கிட்டு இருக்கான். இப்ப வந்து கூப்புட்டா எப்படி? பரிட்சை எழுதி முடிச்சிட்டு வருவான் போங்க…’’ என்றார்.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாட்டாமையின் வெறித்தனம் அடங்கவில்லை. “சேகரை வெளியே அனுப்பு’’ என்கிறார். ஆசிரியர் சற்று யோசித்து விட்டு “அய்யா… உங்க பிள்ளையும் உள்ளே உக்காந்து பரிட்சை எழுதிக்கிட்டிருக்கான். அவனையும் பாதியிலேயே எழுப்பி அனுப்புகிறேன். ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டுப் போறிங்களா?’’ என்றார்.
நாட்டாமை கோபத்தோடு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லாம் ஆசிரியர் ராதாகிருஷ்ணனைச் சூழ்ந்து கொண்டு, “அய்யோ… அந்த நாட்டாமை பொல்லாதவர். உங்களைப் பழி வாங்காம விடமாட்டாரு’’ என்று பயமுறுத்தினார்கள்.
ஆனால், ஆசிரியர் ராதாகிருஷ்ணனோ… “அநீதி நடக்கும்போது அமைதியா இருந்தா எப்படி? இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. எதிர்த்தாதான் இனிமே இதுபோல தப்பெல்லாம் நடக்காது’’ என்று உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்தினார்.
அன்று இரவு கிராம வழக்கப்படி ஊருக்குள் சோறு வாங்குவதற்காகச் சென்ற நாவிதர் குடும்பத்து சேகருக்கு நாட்டாமை வீட்டு வாசலில் அடிதான் கிடைத்தது. அழுதபடி தன் வீட்டுக்குத் திரும்பினான் சேகர்.
மறுநாள் காலை சேகரின் அப்பா பள்ளிக்கு வந்து இரவு நடந்ததை ராதாகிருஷ்ணன் ஆசிரியரிடம் சொல்லி, “என் புள்ளை படிச்சு உங்களை மாதிரி வாத்தியாராவா ஆகப் போறான்? ஏதோ நாலு எழுத்து தெரிஞ்சுகிட்டா நல்லதாச்சேன்னு பள்ளிக்கூடம் அனுப்புனேன். இப்படி ஆகிப் போச்சேன்னு’’ வருந்தினார்.
சேகரின் அப்பா கையைப் பிடித்த ராதாகிருஷ்ணன், “இனி இவன் உங்க மகன் இல்லே. என் மகன். இனிமே இந்த ஊர்ல இருக்க வேண்டாம். என்னோட அனுப்புங்க. செங்கல்பட்டில் இருந்து படிக்கட்டும். அவனை ஒரு பட்டதாரி ஆக்கி என்னைப் போல ஒரு நல்ல ஆசிரியரா உருவாக்குறேன்’’னு சொன்னாரு.
அப்பா ஆனந்தக் கண்ணீர் விட்டபடி தன் மகனை ஆசிரியர் ராதாகிருஷ்ணனோடு அனுப்பி வைத்தார்.
தான் சொன்னது போலவே ஜாதியால் புறக்கணிக்கப்பட்ட சேகரை தன் பிள்ளையைப் போல் படிக்க வைத்த பி.எஸ்சி., பி.எட்., பட்டதாரி ஆசிரியராக்கி ஆசிரியப் பணியிலும் அமர்த்தினார் ஆசிரியர் ராதாகிருஷ்ணன்.
அந்த ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வேறு யாருமல்ல. ‘பாரதி வாத்தியார்’ என பள்ளிப் பிள்ளைகளால் பாசத்தோடு அழைக்கப்பட்ட கவிஞாயிறு தாராபாரதிதான்.
“வெறுங்கை என்பது மூடத்தனம் _ உன்
விரல்கள் பத்தும் மூலதனம்’’
என்ற வைர வரிகளை வாழ்க்கை நெறியாக்கித் தந்த, நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான தாராபாரதியின் இயற்பெயர்தான் ராதாகிருஷ்ணன்.
“ஆசிரியப் பணியே அறப்பணி…
அதற்கே உன்னை அற்பணி’’
என்று தன் வெற்றியின் மூலதனம் என்னும் நூலில் தான் எழுதிய பொன்னெழுத்துகளுக்குத் தன்னையே உவமையாகக் காட்டிய தன்னலமற்ற ஆசிரியர்.
கடமை… கடமை என்று கால நேரம் பார்க்காமல் உழைத்த அவர் 13.5.2000இல் காலமாகிவிட்டார்.
அவரால் உருவாக்கப்பட்ட மாணவன்… ஆசிரியர் சேகராகி அதே பரனூர் பள்ளிக்கு ஆசிரியர் பயிற்றுநராகப் பணிக்குப் போனார். எம்.எஸ்சி., எம்.எட்., முடித்து இப்போது திருக்கழுக்குன்றத்தில் வட்டார வள மய்ய ஆசிரியப் பயிற்றுநராக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரால் பலபேர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி… நல்ல ஆசிரியர்கள் பல பேர் நம்ம நாட்டிலே நம்ம கண்ணுக்குத் தெரியாம நல்லது செய்துக்கிட்டே இருக்காங்க’’ என்று கதையை முடித்தார்.
விழி விழி உன் விழி
நெருப்பு விழி – உன்
விழி முன் சூரியன்
சின்னப் பொறி!
எழு எழு தோழா –
உன் எழுச்சி – இனி
இயற்கையின் மடியில்
பெரும் புரட்சி!
எனும் கவிஞாயிறு தாராபாரதியின் பாடல் வரிகளைப் பாடியபடி மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் புறப்பட்டனர்.
– மீண்டும் வருவார் கோமாளி