எடையை அதிகம் சுமக்கும் எறும்புகள்
தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். உழைப்புக்கும், சேமிப்புக்கும் உதாரணமாகக் கூறப்படும் உயிரினம் எறும்பு. இது தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிக எடையைச் சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது. இதுகுறித்து, பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதாவது, ஒரு புல் துண்டையும், பேப்பரில் இலைபோன்று செய்து அதை தோடம்பழச்சாறில் ஊறவைத்து எறும்பை எடுத்துச் செல்லச் செய்தனர். பின், அது செல்லும் தூரத்தையும், விதத்தையும் ஆய்வு செய்தனர். முதலில், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செங்குத்தான மற்றும் சரிவான பொருட்களின் மீது ஏறி, இறங்கச் செய்தனர். பின், பக்கவாட்டில் ஊர்ந்து போகச்செய்து ஆய்வு செய்தனர். அதில், எறும்புகள் தன்னைவிட அதிக எடையுள்ள பொருட்களை அசையாமல் கொண்டு செல்வதற்கு, அதன் கழுத்தும், தலையும் உதவுகின்றன என்பது தெரிய வந்தது.
எறும்பின் கழுத்தும் தலையும் இணையும் இடத்தில், ஸ்பிரிங் போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், தன்னைவிட நீண்ட, அதிக எடைகொண்ட பொருட்களை எறும்புகள் சுமக்கும் போது, எந்தக் கோணத்தில் அவை சென்றாலும், அதற்கேற்ற வகையில், தனது தலையின் நிலையை மாற்றி அமைத்துக் கொள்கிறது. இதனால், அது வைத்திருக்கும் பொருட்களின் நிலை மாறாமலும், கீழே விழாமலும் இருக்கிறது. இரையைச் சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையாளுகின்றன. இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்பு களின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதாக தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக் கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
– ஏ.வி.ராஜ்குமார், தரங்கம்பாடி (வலைப்பூவிலிருந்து)