சிறுவர் கதை : காட்டிக்குள்ளே ஒரு நாள்
உமா குமார்
பூபூவும் தீபுவும் உற்ற நண்பர்கள். அவங்களுக்கு காட்டுக்குள்ள போகணும்னு ரொம்ப நாளா ஆசை. காட்டுக்குள்ளதான் நிறைய நிறைய விலங்குகள்லாம் இருக்குன்னு மோக்லி கதைப்புத்தகம் படிச்சதுல இருந்து காட்டுக்குப் போகணும்ன்னு நெனச்சுக்கிட்டே இருந்தாங்க. இப்போ ஒரு வாய்ப்புக் கெடச்சதும் செஞ்சு பார்க்கணும்னு முடிவுபண்ணிட்டாங்க. அது என்ன வாய்ப்புன்னா, அவங்க குடும்பம் ரெண்டும் ஒரு வாரயிறுதில காட்டுக்குள்ள ரெண்டு நாள் முகாம் போலாம்ன்னு திட்டம் போட்டாங்க. உடனே இவங்க ரெண்டு பேரும் யாருக்கும் சொல்லாம தனியா காட்ட சுத்திப் பார்க்கணும் எல்லா விலங்குகளையும் நேர்ல பார்க்கணும்னு நெனச்சாங்க.
முதல் நாள் இரவு போய் அங்க தூங்கிட்டு, அடுத்த நாள் எல்லாரும் மலைமேல நடைபயணம் போலாம்னு பெரியவங்க திட்டம் போட்டுருந்தாங்க. அதுக்கு நடுவுல இந்தக் குட்டிகள் ரெண்டும் பாதியில கழண்டுகொண்டு காட்டுக்குள்ள போகலாம்ன்னு உள்சதித் திட்டம் போட்டுட்டாங்க. நெனச்ச மாதிரியே ரொம்ப மெதுவா நடந்தவங்க ஒரு திருப்பத்தில அப்டியே நின்னுட்டாங்க. கொஞ்ச நேரம் நின்னு யாராவது தேடி வர்றாங்களானு பார்த்த ரெண்டு பேரும், பேச்சு சுவாரசியத்துல யாரும் தங்களைத் தேட மாட்டாங்கன்ற தைரியத்துல பாதை விட்டு விலகி மரங்களுக்கு நடுவுல நடக்க ஆரம்பிச்சாங்க.
கொஞ்ச தூரம் தான் நடந்திருப்பாங்க, தூரத்துல ஏதோ சத்தம் கேட்டுச்சு. வேகவேகமா ஓடிப்போய்ப் பாத்தா… அங்க ஏதோ திருவிழா நடக்குறது போல ரொம்ப அலங்காரமாய் அமர்க்களமாய் இருந்தது. மேடையும் மைக் செட்டும் தோரணமும் ஏதோ முக்கியமான நிகழ்வு எனப் பறைசாற்றின. இவர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சர்யம். சிறிது நேரத்தில் மேடைக்கு வந்த குரங்கார், “வணக்கம், வனவாழ் சொந்தங்களே! இன்று நமது குடியிருப்பின் அறுநூற்றி எண்பத்தி மூன்றாம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றியோ நன்றி!!! எல்லா ஆண்டையும் போல இவ்வாண்டும் ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் அரங்கேறி அதன்பின் உங்கள் குறை நிறைகளைப் பகிரும் வாய்ப்பும் அனைவருக்கும் வழங்கப்படும்’’ என்றார்.
முதலாவதாக எப்போதும் போல் முதல் இயற்கை வாழ்த்து நடனத்தை மயில் ஆடி அரங்கேற்றுகிறார்.
மயில் அழகாக ஆடி முடித்ததும் பலத்த கைதட்டல் எழுந்தது.
மீண்டும் குரங்கார் வந்து, அந்த அற்புத நடனத்தைத் தொடர்ந்து “நமது கிராமிய நடனமான கரகாட்டத்தை நம் மான் கூட்டம் அரங்கேற்ற உள்ளன’’ என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இன்னும் பல விதமான பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்தச் சிறுவர் இருவருக்கும் காட்டுக்குள் இத்தனை பெரிய கலை ரசிகர்களும் கலைஞர்களும் உள்ளனரா என்று ஒரே ஆச்சரியம்!
இறுதியாக குறை நிறைகளைக் கூறும் பொருட்டு அனைவரும் வரிசையில் வந்து நின்றனர். அனைத்துக் குறைகளையும் கேட்டறியும் வண்ணம் சிங்கம் மேடையில் அமர்ந்திருந்தது. முதலில் ஆந்தை வந்து, “அரசே! நாளுக்கு நாள் நம்முடைய குடியிருப்பின் அளவு சுருங்கிய வண்ணம் உள்ளதே! இதற்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று வருத்தத்துடன் கேட்டது. அதற்கு சிங்கம், “அதை நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆந்தையாரே. நான் சிறுவயதில் பார்த்ததைக் காட்டிலும் இன்று பாதியாக நம் காட்டின் அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. இதற்கு, பெருகி வரும் மக்கள் தொகையும் மனிதர்களின் பேராசையுமே காரணமாக உள்ளது’’ என்று பதில் அளித்தது.
உடனே ஒட்டகச்சிவிங்கி வந்து, “அது மட்டுமில்லை மன்னா! நமக்கு இருக்கும் இந்தப் பாதி காட்டிலும் கூட மனிதர்கள் அவ்வப்போது வந்து அவர்களுடைய வாகன ஒலியெழுப்பி பயமுறுத்துகின்றனர். நெகிழிக் கழிவையும் மிச்சத்தையும் விட்டுச் சென்று, நம்மை பீதிக்கு உள்ளாக்குகின்றனர். நம்மை ஒரு நாள் கூட நிம்மதியாக வாழ விடுவதில்லை. அவர்களுக்கு அவர்கள் ஊர்தி செல்லவேண்டும் என்று மிகுந்த பெரிய அளவிலான சாலைகள் போட்டுக்கொண்டு இரவும் பகலும் பெரும் ஓசையுடன் வளம் வருகின்றனர். அதன் காரணமாக மரத்திற்கு மரம் தாவி சாலையைக் கடக்கும் குரங்குகளுக்கு இரு மரத்திற்கு இடையே பெரிய இடைவெளி அவர்கள் தாண்ட முடியாத படி இருப்பதால் நடந்து கடக்க உட்படுத்தப்படுகின்றனர். நடந்து பழகாத குரங்குகள் மெதுவாகக் கடக்கும்முன் ஏதோ ஒரு வாகனத்திற்குப் பலியாகின்றனர்’’ என்று கூறி அழுதது.
“மன்னா! இத்தனை கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாம் ஏன் அவர்களைக் காட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்? யாரும் வரும் முன்னமே அவர்களைப் பயமுறுத்தி, கரடியையும் புலியையும் ஏவிவிட்டால் இனி அவர்கள் வரவே மாட்டார்கள் அல்லவா? எதிர்காலத்தில் இந்தத் தொல்லைகளை அனுபவிக்க வேண்டாமல்லவா?’’ என்று நரி கேட்டது. அதற்கு சிங்கம், “அப்படி அல்ல நரியாரே! நாம் மனிதர்களை அனுமதிப்பதன் காரணம், அவர்களுடன் வரும் குழந்தைகள் நம்மைப் போன்ற விலங்குகளைப் பார்த்து நம் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான். மிருகக் காட்சி சாலையில் மட்டுமே நம்மைப் பார்க்கும் குழந்தைகள் எப்படி நம் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும்? அடுத்த தலைமுறையாவது காடு நம் வீடு; அனுமதியின்றி அடுத்தவர் வீட்டுக்குள் வரக்கூடாது என்று உணர வேண்டுமென்பதுதான்.
இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளும் அவரவர் தோழர்களிடம் இதைக்கூறி அனைவரும் முடிவெடுத்தால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்குச் செவிமடுப்பார்கள் தானே’’ என்று கூறி, பூபூவையும் தீபுவையும் பார்த்தது.