கசியும் மணல்
விழியன்
தன்னுடைய நெருங்கிய தோழி வெளியூருக்கு சென்றிருக்கின்றாள். லட்சுமிக்கு கடைவீதியில் இருக்க பிடிக்கவேயில்லை. எவ்வளவு நேரம் தான் சுற்றிச்சுற்றி வருவது? கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே கடையை மூடுவதும் திறப்பதுமாகத்தான் இருக்கின்றது. லட்சுமி சுற்றிக்கொண்டு இருப்பது மகாபலிபுரத்து கடற்கரை கோவிலுக்கு அருகே இருக்கும் கடைவீதியில்தான். அங்கே அப்பா ஒரு பொம்மைக்கடை வைத்துள்ளார். அவளுடைய தோழி கமலி ஒரு ஸ்கேட்டர். அவள் போட்டிக்காக வெளியூர் சென்றுவிட்டாள். சனிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். முக்கால்வாசி பேர் முகக்கவசம் போட்டுக்கொண்டுதான் வீதியில் நடக்கின்றார்கள். கடைவீதி என்று சொன்னாலும் அதில் நடக்கமட்டுமே முடியும். கடைவீதி மணலில் எந்த வண்டியும் செல்ல முடியாது. பாதி வீதியில் இருந்து கடலைப் பார்த்துவிடலாம். கடலுக்கு மிக அருகாமை வரை கடைகள் இருக்கின்றன. மீன் வறுவல், சோடாக்கடை, பானிப்பூரி கடை, சோளக்கடை, அய்ஸ்கிரீம், வளையம் போட்டு பொம்மை எடுக்கும் கடை என அங்கே எல்லோரையுமே லட்சுமிக்குத் தெரியும். லட்சுமி கரையிலிருந்து மணல் பரப்பு தொடங்கும் இடத்தில் இரண்டாவது கடையில் லட்சுமியின் அப்பா பொம்மைகளை விற்கின்றார்.
ரகுவின் சக்கர வண்டி சரியாக நின்ற இடம் லட்சுமியின் கடைவாசலில். ஏனெனில், அதற்கு மேல் கடல் மணலில் வண்டியைத் தள்ளுவது சிரமம். ரகுவுக்குப் பதிமூன்று வயதாகின்றது. அவனால் நடக்க முடியாது. எங்கே செல்வதென்றாலும் இதோ இந்த சக்கர நாற்காலிதான் ஒரே வழி. அவன் கூடவே இருந்து பார்த்துக்கொள்ள சுதந்திரம் அக்கா இருக்கின்றார். அவர் இவனைவிட இரண்டு மடங்கு பெரியவர். கடந்த எட்டு ஆண்டுகளாக இவன் சித்தி இறந்த பின்னர் இவனைப் பார்த்துக்கொள்கின்றார். மூன்று கார்களில் கூட்டமாக மகாபலிபுரத்திற்கு ரகுவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். சிறுவர்கள், பெரியவர்கள் என நிறைய பேர். எல்லோரும் கடைகளை, பொருள்களைப் பார்த்தபடியும் சிலர் வேகமாகக் கடலை நோக்கியும் நகர்ந்தனர். ஒரு பாட்டியும், சுதந்திரம் அக்காவும் மட்டும் ரகுவுடன் நின்றார்கள். பாட்டிக்கும் சுதந்திரம் அக்காவுக்கும் கடலைப் பார்க்க ஆசை. சுதந்திரம் அக்காவுக்கு கடைவீதியில் இருக்கும் பொருள்களைப் பார்க்க ஆசை. இது ரகுவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், வண்டியை நகர்த்திச் செல்லவோ ரகுவைத் தனியாக விட்டுச் செல்லவோ முடியாது.
லட்சுமி அவர்களிடம் சென்று பேச்சுக் கொடுத்தாள் “இறங்கிப் போண்ணா. அலை கம்மியாத்தான் இருக்கு” என்றாள். அவனால் நடக்க முடியாது என்று சுதந்திரம் விளக்கினாள். “அப்ப நீங்க போக வேண்டியது தானே” என்றாள் உடனே. பாட்டிக்கும் அக்காவிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “பரவாயில்லைம்மா. தம்பி தனியா இருப்பான்” என்றார் பாட்டி. “ஆயா, நீங்க போங்க, அண்ணனை நான் பார்த்துக்கறேன். சும்மா பேசிட்டு இருந்தா அரை மணி நேரத்துல வந்துடப்போறீங்க. இதோ, இது எங்க கடை தான். நான் பத்திரமா அண்ணனோட பேசிட்டு இருக்கேன்” என்றாள் லட்சுமி. எப்படி விட்டுச்செல்வது என்று குழப்பம் இருந்தது. ஆனால், லட்சுமியின் நம்பிக்கையான வார்த்தைகள் அவர்களை அசைத்தது. ரகுவும், “நீங்க போயிட்டு வாங்க நான் இங்க இருக்கேன்” என்றான். இருவரும் கிளம்பினார்கள். திரும்பி, திரும்பித் பார்த்துச் சென்றார்கள். லட்சுமி தூரத்தில் இருந்தே நான் பார்த்துக் கொள்கின்றேன் என ரகுவை அணைத்துக் காட்டினாள்.
அதன் பின்னர் தான் லட்சுமி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். தன் வீடு, அப்பா, தன் தோழி, குதிரைகள், பள்ளிக்கு ஆன்லைன் வசதி இல்லாததால் போக முடியாத சூழல், தினம் இந்தக் கடற்கரை என நிறைய கூறினாள். ரகுவிடம் டக்கென்று நெருக்கமாகிவிட்டாள். “எனக்கு கடல்னா ரொம்பப் ரொம்ப பிடிக்கும். நான் கடலைப் பற்றி நிறைய படிச்சி இருக்கேன். கடற்கரைக் காற்று, அந்த மணல், அலை, சிப்பிகள், ஓடிச்செல்லும் குட்டி நண்டுகள் எல்லாமே பிடிக்கும். ஆனா இதுவரைக்கும் நினைவு தெரிஞ்சு கடற்கரையைப் பார்த்ததே இல்லை. வண்டிய தள்ளிக்கிட்டு போகமுடியாது. ரோட்டு மேலயே நின்னுடுவேன். நிப்பாட்டிடுவாங்க. மேலும் சிரமம் தரவேண்டாம்னு என் ஆசையைச் சொன்னதே இல்லை. இங்க பாரு கடற்கரையில இருக்கேன், இந்த மணலைக்கூட தொட முடியல.” லட்சுமி கீழே இருந்த மணலை எடுத்து ரகுவின் கைகளில் கொடுத்தாள். அவ்வளவு ஆசையாக வாங்கிக்கொண்டான் ரகு. மெல்ல தன் விரல்களின் இடுக்கில் மணலைக் கசியவிட்டு ரசித்தான்.
“நீங்க சாப்பிட ஏதாச்சும் வாங்கி வரவா அண்ணா. என்கிட்ட இருபது ரூபாய் இருக்கு. நான் சேமிச்சது” என்றாள் பெருமையாக.
கொஞ்சம் தயங்கியபடி, “எனக்கு அவசரமா உச்சா வருது லட்சுமி” என்றான் ரகு. இதனை லட்சுமி சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. “ரொம்ப நேரமா அடக்கிகிட்டு இருக்கேன், இப்ப முட்டுது” என்றான். அச்சோ! தன்னுடைய பொறுப்பில் இருக்கும் நபருக்கு உதவ முடியவில்லையே என்ற பதட்டம் லட்சுமியைப் பதற வைத்தது. அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அப்பாவை அழைக்க முடியாது, நீண்ட நாள்கள், மாதங்கள் என்றுகூட சொல்லலாம், கழித்து கடையில் நல்ல வியாபாரம். பத்து நிமிடம் என்றாலும் சில நூறு ரூபாய்களை இழப்பார். கடற்கரையில் என்றால் அவளுக்கு உதவ நிறைய அண்ணன்கள் உண்டு. குதிரை ஓட்டும் முருகன் அண்ணன் நிச்சயம் வந்திடுவார். ஆனால், அவரை அழைத்து வர பத்து நிமிடங்களாவது கடந்திடும். அதுவரையில் ரகு தனியாக இருக்கவேண்டும். சென்றாலும் யாரேனும் சவாரி இருந்தால் சிரமம். கம்மல் கடையில் தன் நண்பன் சுரேஷ் இருப்பான், ஆனால், அவன் லட்சுமியைவிட சிறியவன். அவனால் எதுவும் உதவ முடியாது. ஆனாலும் இப்போதைக்கு அவன் தான் ஒரே தீர்வு.
“ரகு அண்ணா, ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்கோங்க, இதோ வந்துட்றேன்” என சொல்லிவிட்டு லட்சுமி திரும்பி வேகமாக ஓட ஆரம்பித்த மூன்றாவது அடியில் மோதி பொத்தென விழுந்தாள்.
***
ரகுவின் கார் மகாபலிபுரத்தைவிட்டு வெளியே வந்து நெடுஞ்சாலையை அடைந்துவிட்டது. ரகு அவன் அருகே அமர்ந்துவந்த சுதந்திரம் அக்காவின் கைகளை இறுகப்பற்றி லட்சுமியின் கடை வாசலில் நடந்ததை எண்ணிப்பார்த்தான். லட்சுமி மோதியது கீதா என்ற திருநங்கை ஒருவரின் மீது. லட்சுமியை அவரே தூக்கி “என்ன லட்சுமி, ஏன் இவ்வளவு அவசரம். ஏன் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு” என்று விசாரித்தார். ரகு இதுவரையில் திருநங்கைகளைப் பார்த்ததே இல்லை. அவன் அதிகம் வெளியே வந்ததில்லை. லட்சுமி இருந்த பதட்டத்தில் “அக்கா, அதோ அந்த அண்ணாக்கு அவசரமா ஒன்னுக்கு வருதாம். ஆனா அவரால நடக்க முடியாது. அந்த வண்டிய என்னால நகர்த்த முடியல” என லட்சுமி சொல்லி முடிப்பதற்குள்… “இதானே, நான் பார்த்துக்கறேன்” என ரகுவின் அருகே சென்றார். அவராலும் நகர்த்த முடியவில்லை. ரகுவின் முகத்தைப் பார்த்து, “என்னப்பா ரொம்ப அவசரமா வருதா?” எனக் கேட்டார். “ஆமாம்” என ரகு தலையசைக்க. “ஏ ரோசு.. இங்க சீக்கிரம் வா” என குரல் கொடுத்தார். ரோஸும் ஒரு திருநங்கை. சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்ட பெல்ட்டுகளைக் கழற்றிவிட்டு ரோசும் கீதாவும் ரகுவை அலேக்காகத் தூக்கிவிட்டார்கள். நூறு அடியில் பொதுக்கழிப்பிடம் இருந்தது. ஆண்கள் பகுதி நுழைவு வாயிலில் நுழைந்தபோது அங்கே இருந்த மதிவாணன் கத்தினார், “உங்களை இங்கே வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்று சொன்னவரை திரும்பி கீதா ஒரு பார்வை பார்த்தார். “யோவ்” என்று மட்டும் சொல்லிவிட்டு ரகுவை உள்ளே தூக்கிச்சென்றனர். ரகு சிறுநீர் கழித்தான். அவனுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. வெளியே வரும் வழியில் கைகளை கழுவிக்கோ என்றார் ரோஸ். காப்பாளர் மதிவாணனிடம் தன் ஜாக்கெட்டிற்குள் இருந்து “இந்தா காசு” என சிறுநீர் கழித்ததற்குக் கொடுத்துவிட்டு ரகுவைத் தூக்கிக்கொண்டு சென்றனர்.
லட்சுமி அங்கே பதட்டமாகவே நின்றுகொண்டு இருந்தாள். ரகுவின் வீட்டார் வந்தால் என்னவென்று சொல்வது. தன் பொறுப்பில்தானே விட்டுச்சென்றனர். ரகுவை அவனது சக்கர நாற்காலியில் அமர வைத்தனர். பெல்ட்டுகளை போட்டுவிட்டனர்.
“ரொம்ப தேங்க்ஸ்..” என்றான் இருவரையும் பார்த்து. அவன் குரல் நெகிழ்ச்சியில் தடுமாறியே இருந்தது. அவன் உணர்வைப் புரிந்துகொண்ட கீதா கைகளை ரகுவின் முகத்தருகே திருஷ்டி போடுவதைப்போல செய்து,
“மவராசா.. நீ நல்லா இருக்கணும். நடக்கிறது என்ன, நீ பறப்ப ராசா” என வாழ்த்தினார். அவரின் குரல் மறைந்துபோன சித்தியின் குரலை ஒத்து இருந்தது. அதன் பின்னர் பறந்தபடியே கடற்கரை அலையைத் தொட்டுவிட்டுத்தான் வந்தான் ரகு. லட்சுமி சொன்னதும் அவர்கள் இருவரும் அவனைத் தூக்கிக்கொண்டே கடற்கரை வரையில் கொண்டு சென்றனர். அந்தக் கடல் காற்றில் அவன் உயர உயரப் பறந்தான்.