ஆணிகளால் ஓவியம்
பென்சில், வண்ணங்கள், மெழுகு என பல வகையில் ஓவியங்களைப் பார்த்திருக்கிறோம். ஆணிகளிலேயே ஓவியம் உருவாக்கப்பட்டுள் ளதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆண்ட்ரூ மியர்ஸ் என்னும் ஓவியர் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இவர் ஜெர்மனியில் பிறந்தவர். தனது சிறு வயதில் ஓவியத்தில் ஆற்றல் பெற்றிருந்தாலும் 20 ஆவது வயதில் இருந்து முறைப்படி ஓவியம் கற்றுக் கொண்டார். எல்லோரும் செய்வதையே ஏன் செய்யவேண்டும்; புதிதாகச் செய்வோமே என்று முடிவெடுத்து ஆணிகளில் ஓவியம் வரைய ஆரம்பித்தார். நீங்கள் பார்க்கும் இந்த மனித முக ஓவியங்களை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆணிகளைக் கொண்டு உருவாக்கியுள்ளார். கணினி மற்றும் வேறு எந்தவிதத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தாமல், ஒரு சிற்பம் வடிப்பதைப்போல முற்றிலும் மரபுசார்ந்த முறையில் இந்த ஆணி ஓவியங்களை உருவாக்கியுள்ளார். இவை முப்பரிமாண (3D) சிற்பங்கள் என்பது இதன் இன்னொரு சிறப்பு அம்சம் ஆகும்.