அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும்
அகிலத்தையே ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்து தானே ஆள வேண்டுமென்று பேராசை கொண்டவர்தான் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன். தனது கடைசிக் காலத்தில் போர்க் களத்தில் பிரிட்டனிடம் தோல்வி கண்டார். தோல்வி அடைந்த நெப்போலியனைப் பிரிட்டிஷ் இராணுவம் சிறைப் பிடித்தது. தனிமைக் கொட்டடி வாழ்க்கை!
ஆப்பிரிக்காவின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கண்ணாடிக் குடுவை கைதவறி தரையில் விழுந்து நொறுங்கி சிதறுண்ட நிலையில் நெப்போலியன் சிறைக் கதவினை பார்த்தபடியே காணப்பட்டார். மன உளைச்சலின் உச்சத்திலிருந்தார். இதுதான் அவரின் இறுதிக் காலத்தின் நகர்வு.
தனிமையிலிருந்த நெப்போலியனைப் பார்க்க அவரது உற்ற நண்பர் ஒருவர் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, “இது உங்களின் தடைப்பட்டுள்ளச் சிந்தனையை செயல்பட வைக்கும், தனிமையைப் போக்கும்’’ என்று கூறி அவரிடம் கொடுத்தார். பலத்த காவலர்களின் கண்காணிப்போடு. வேறு ஒன்றும் பேசாமல் வெளியேற்றப்பட்டார் நண்பர்.
சிறைப்படுத்திவிட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படவில்லை சதுரங்க அட்டையைப் புரட்டிப் பார்க்கின்ற மனநிலைகூட வரவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு மரணத்தைத் தழுவுகின்றார். பிற்காலத்தில் நெப்போலியனிடம் அவரது நண்பர் வழங்கிய சதுரங்க அட்டை பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்தபோது, அந்த அட்டையின் நடுப் பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை வரைபடத்துடன் சொல்லப்பட்டிருந்தது.
நெப்போலியனின் மன உளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து, தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
எலிப்பொறி: அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் வலிமைமிகுந்த கூர்மையான பற்களாலும் நகத்தாலும் மெல்லக் குடைந்து ஒட்டை போடும் எலி, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப் பொறியில் சிக்கிக் கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலால் தப்பிக்கும் வழியை விட்டுவிட்டு, அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டுவிடும்.
மன உளைச்சல்: மாவீரனுக்கும் சரி… சாதாரண எலிக்கும் சரி பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனைப் போக்கைச் செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்துவிடுகின்றன. தடயங்கள் இருந்தும் தப்பிக்க முடியவில்லை. மனிதர்களின் பல பிரச்சினைகளுக்குக் காரணம் மன உளைச்சல்தான். தமிழகத்தின் விடிவெள்ளி பேரறிஞர் அண்ணா சொல்கிறார், “கத்தியைத் தீட்டினாயே தவிர உன் புத்தியைத் தீட்டவில்லை. காரியத்தைச் சாதிக்கக் கத்தியைத் தீட்டிப் பயனில்லை. உன் புத்தியைத் தீட்டு,” “நாம் விடுபட வேண்டும் என்ற எண்ணம், நம் இதயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று!
வெற்றியின் இரகசியம்: நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது. வாழ்ந்து முடிந்த பின்பு நம்மை யாரும் மறக்கக் கூடாது. அதுதாம் நம் வாழ்வின் வெற்றி! இது ஆட்சியாளருக்கும் பொருந்தும்; மக்களுக்கும் பொருந்தும்!