உடலில் நீங்கிய உயிர் உலவுமா?
இறந்த உடலிலிருந்து நீங்கும் உயிர் ஆவியாக உலவும் என்று கூறுவதோடு, பேய், மறுபிறப்பு, ஆவியோடு பேசுதல் என்று அறிவிற்கு ஒவ்வாத உண்மையற்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர். படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி இருவரும் இவற்றை நம்பி அஞ்சுகின்றனர், அறிவையும் பொருளையும் இழக்கின்றனர். உயிர் என்பது என்ன என்ற உண்மையை அறிந்தால் இந்த அவலம் நீங்கும்.
உயிர் என்பது என்ன?
அது ஒரு பொருளா? இல்லை. காரணம், பொருள்கள் (1) திடப் பொருள் (2) திரவப் பொருள், (3) வாயுப் பொருள் என மூன்று வகைப்படும். முதல் இரண்டுவகைப் பொருள்கள் பார்த்து அறியக் -கூடியவை. இம்மூன்றிலும் அடங்கா எவையும் பொருள் அல்ல. அதன்படி இம்மூன்றிலும் சேரா உயிர் பொருள் அல்ல.
அப்படியாயின் உயிர் என்பது என்ன?
உயிர் என்பது ஓர் ஆற்றல்
ஆற்றல் என்பது முன்னமே உள்ள பொருள்களின் சேர்க்கையால் உருவாவது. ஒரு குறிப்பிட்ட சூழல் உள்ள வரை அந்த ஆற்றல் இருக்கும். சூழல் கெட்டால் அது நீங்கும்.
சாதாரண செப்புக் கம்பியில் மின்சக்தி இல்லை. ஆனால், செப்புக்கம்பிச் சுருளுக்கு நடுவில் காந்தக்கட்டையைச் சுழற்றினால், அபார சக்தியுடைய மின்சாரம் செம்புக் கம்பியில் வருகிறது. காந்தக் கம்பியில் வந்த மின்சக்தி நீங்கும். செப்புக்கம்பியை விட்டு வெளியில் காந்தக் கட்டையைச் சுழற்றுவதை நிறுத்தினால் செப்புக்கம்பியில் வந்த மின்சக்தி நீங்கும். செப்புக் கம்பியை விட்டு வெளியில் காந்தக் கட்டையைச் சுழற்றினால் செப்புக் கம்பியில் மின் சக்தி வராது. ஆக, ஒரு குறிப்பிட்ட சேர்க்கையில் குறிப்பிட்ட பொருட்கள் குறிப்பிட்ட விதத்தில் ஒன்று சேரும்போது மட்டுமே மின்சக்தி வரும். ஆக, ஆற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் பொருட்கள் சேர்வதால் உருவாவது ஆகும்.
நெருப்பு என்பது ஓர் ஆற்றல். நெருப்பில்லாத பொருள்கள் மோதுவதால், உரசுவதாலே அந்த நெருப்பு உருவாகிறது. கருங்கல்லிலோ அல்லது மூங்கிலிலோ நெருப்பு இல்லை. ஆனால், அவை ஒன்றோடொன்று உரசும் போது நெருப்பு உருவாகிறது.
அதேபோல், உயிரில்லாப் பொருள்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில், தற்செயலாய் ஒன்றிணையும்போது உயிர் உருவாகிறது.
மூங்கிலும் மூங்கிலும் உரசியதாலோ, கல்லும் கல்லும் உரசியதாலோ உருவான நெருப்பு நிலைத்திருக்க ஆக்ஸிஜனும், எரிபொருளும் வேண்டும், இவற்றுள் எது இல்லை யென்றாலும் நெருப்பு நீங்கிவிடும் – மறையும்.
அதேபோல், உயிரற்ற பொருள்கள் ஒன்றிணைந்ததால் உருவான உயிர் நிலைத்திருக்க ஆக்ஸிஜனும், உணவும் வேண்டும். இவற்றுள் எது இல்லையென்றாலும் உயிர் நீங்கும் – மறையும்.
ஆக்ஸிஜனும், எரிபொருளும் இருந்தாலும், நீரோ, பலத்த காற்றோ வீசினால் நெருப்பு நீங்கும். அதே போல் ஆக்ஸிஜனுடன், உணவும் இருந்தாலும் விபத்தாலும் உயிர் நீங்கும்.
எனவே, நெருப்பு ஓர் ஆற்றல்போல் உயிரும் ஓர் ஆற்றல். விளக்கில் எரிந்த நெருப்பு அணைந்தால் அந்த நெருப்பு வெளியில் உலவுமா? அல்லது அடுத்த விளக்கில் சென்று எரியுமா? இல்லை. அதேபோல், உடலிலிருந்து விலகும் உயிரும் உலவுவதில்லை; வேறு உடலில் சென்று புகுவதும் இல்லை; பேயாக அலைவதும் இல்லை; மறுபிறப்பு எடுப்பதும் இல்லை.
எரிகின்ற கண்ணாடி விளக்கின் (சிமினிவிளக்கு) வாய்ப்பகுதியில் ஓர் அட்டையை வைத்து மூடினால் காற்று கிடைக்காமல் நெருப்பு நீங்கும். அதே போல், வாயையும் மூக்கையும் அழுத்தி மூடினால் காற்று கிடைக்காமல் உடலில் உள்ள உயிர் நீங்கும். எனவே, உயிர் என்பது நெருப்பைப் போன்று ஓர் ஆற்றல். அவ்வளவே! நெருப்பு அணைவதுபோல் உயிர் அணைகிறது மற்றபடி உயிர் உலவாது; மறுபிறப்பு எடுக்காது!
– சிகரம்