நினைவில் நிறுத்துவோம் : தனித் திறமைகள் தன் விருப்பப்படி வளர்க்கப்பட வேண்டும்!
[பிஞ்சுகளுக்கான கட்டுரை இதுவென்றாலும் பெற்றோரும் கட்டாயம் படித்துப் பின்பற்ற வேண்டும்.]
மனிதர்கள் பிறப்பால் உயர்வு தாழ்வு பெறுவதில்லை. பிறப்பால், ஜாதியால் அறிவும் திறமையும் வரும் என்பது அறிவியலுக்கும், உடற் கூறுக்கும் ஒவ்வாத கருத்துகள். உண்மைக்கு மாறானவை.
மனிதன் சூழலால், வாய்ப்பால், வளர்ப்பால், பயிற்சியால் அறிவு, ஆற்றல், திறமை ஆகியவற்றைப் பெறுகிறான்.
நூறு ஆண்டுகளுக்கு முன் படிப்பே வராது என்று ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள்தாம் இன்று படிப்பில் சாதிக்கின்றனர். அறிவில் உயர்ந்து நிற்கின்றனர். எனவே, பிறப்பால் உயர்வும், சிறப்பும், திறமையும் வருவதில்லை; தாழ்வும், தரக்குறைவும் அமைவதில்லை.
ஆனால், மனிதர் எல்லோரும் ஒத்த இயல்புகளை, விருப்பங்களை, திறமைகளை, உள நிலையைப் பெற்றிருப்பதில்லை. இவை மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.
ஒருவருக்கு, இனிப்பு பிடிக்கும்; இன்னொருவருக்கு, காரம் பிடிக்கும்; சிலருக்கு புளிப்பு பிடிக்கும். ஒருவருக்கு பிடிக்கும் நிறம் இன்னொருவருக்குப் பிடிக்காது. ஒருவருக்கு, ஓவியம் நன்றாக வரும்; இன்னொருவருக்கு நாட்டியம் நன்றாக வரும்; மற்றொருவருக்கு, இசை நன்றாக வரும். சிலர் நன்றாகப் பேசுவர்; சிலர் நன்றாக விளையாடுவர்; இன்னும் சிலர் புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பர். ஆனால், இந்த வேறுபாடுகள் ஜாதியால் வருவதில்லை. ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த பிள்ளைகளுக்குள்ளேயே இந்த வேறுபாடுகள் இருப்பதுண்டு. இவை தனி மனித வேறுபாடுகள்.
ஆக, இயற்கையாய் இந்த வேறுபாடு இருப்பதால், படிப்பு பொதுவாகக் கற்பிக்கப்படும்போது, தனித் திறமைகளைப் பொதுவாக அல்லது, பெற்றோர் விருப்பப்படி கற்பிக்க, வளர்க்க முடியாது. பெற்றோர் பிள்ளையை சிறந்த பாடகராக்க விரும்பும்போது, பிள்ளைக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கும். இங்கு பெற்றோர் பிள்ளையைப் பாடகராக ஆக்க முயற்சிப்பது தப்பு. பிள்ளையின் ஆர்வம் அறிந்து அதில் சிறப்புப் பயிற்சி அளித்து அவர்களை அதில் ஆற்றல் மிக்கவர்களாய், சாதனை படைப்பவர்களாய் ஆக்க வேண்டும். மாறாக, பக்கத்து வீட்டுப் பையன் நன்றாகப் பாடுகிறான், என் பிள்ளையும் நன்றாகப் பாட வேண்டும் என்று அப்பிள்ளையை விருப்பமில்லாத ஒன்றில் ஈடுபடுத்துவது கூடாது.
அதேபோல் எந்தப் பிள்ளையையும் எதற்கும் தகுதியற்ற பிள்ளை என்று ஒதுக்குவதும் தப்பு. ஒன்றுக்குத் தகுதியில்லையென்றால் அப்பிள்ளை மற்றொன்றில் தகுதி பெற்றிருக்கும்.
இராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் இளம் வயதில் செய்த குறும்புகளைப் பொறுக்க முடியாத பெற்றோர், அவரை இராணுவத்தில் சேர்த்தனர். அந்த இராபர்ட் கிளைவ்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு அமைவதற்கு அடித்தளம் இட்டுச் சாதனை படைத்தார்.
பொதுவான கல்வியைப் பிள்ளைகள் படிக்கும்போதே, அவர்களுக்கு மற்ற திறன் எதில் உள்ளது என்று உற்றுநோக்கி, கண்டறிந்து, அதில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அதில் சாதனை படைக்கும் அளவுக்கு உருவாக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமில்லாத எந்த ஒன்றையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. வாழ்க்கையில் நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு செய்திகளைப் பற்றிய அறிமுகம் தந்து நம் பார்வையை விசாலமாக்கத் தான் பள்ளிக்கல்வி. எனவே, பிள்ளைகளும் வெறும் படிப்புதான் வாழ்க்கை என்று தங்களைச் சுருக்கிக் கொள்ளாமல் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் வாழ்வு சிறப்பாய் அமையும்.