கோமாளி மாமா-20 : எச்சரிக்கையாய் இருப்போம்!
ஓவியம், கதை: மு.கலைவாணன்
மல்லிகா கதை கேட்பதற்காக தோட்டத்திற்கு வந்தாள். கோமாளி மாமா, மாணிக்கம், செல்வம் யாரையும் காணவில்லை.
வழக்கமாக நண்பர்களோடு அமர்ந்து கதை கேட்கும் இடத்தில் புதிதாக ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
மல்லிகாவைப் பார்த்ததும் அவர், “வா பாப்பா… நீ மட்டும் தனியாவா வந்திருக்கே… வா.. வந்து இப்படி பக்கத்திலே உக்காரு’’ என தன் கறை படிந்த காவிப் பல் தெரிய சிரித்தபடி கூப்பிட்டார்.
‘தனக்கு அறிமுகமே இல்லாத இவர் ஏன் நம்மை அழைக்கிறார்?’ என்ற சந்தேகம் மல்லிகாவுக்கு ஏற்பட்டது.
“பாப்பா… உன் பேரு என்னம்மா? எங்கிட்ட எதுவும் பேச மாட்டியா?” என்று கொஞ்சலாகக் கேட்டார் அந்த ஆள்.
அவருடைய பார்வையும், பேச்சும் மல்லிகாவுக்கு மேலும் அச்சமூட்டுவதாகவே இருந்தது.
“பாப்பா… வா… வந்து என் பக்கத்திலே உட்காரு… சும்மா பேசிக்கிட்டிருக்கலாம்… வாம்மா… வா. நான் உங்க மாமா மாதிரி… வாம்மா… வா…’’ என்று சிரித்தபடி அழைத்தார்.
‘அடச்சே… இந்த நேரத்திலே மாணிக்கம், செல்வம், கோமாளி மாமா யாரையுமே காணோமே. இந்த ஆளு யாருன்னே… தெரியலே… காவிப் பல்லை வேற காட்டிச் சிரிக்கிறானே…’ என்று சிந்தித்தபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் மல்லிகா.
“பாப்பா தனியா வந்தே… இப்ப என்னை தனியா விட்டுட்டுப் போறே…” என அந்த ஆள் சொன்னதைக் கூடக் கேட்காமல் தோட்டத்தின் வாசலை நோக்கி வேகமாக நடந்தாள் மல்லிகா.
மல்லிகா வாசலுக்கு வந்த அதே நேரத்தில் மாணிக்கம், செல்வம், கோமாளி மாமா மூவரும் சொல்லி வைத்ததுபோல் தோட்டத்திற்குள் நுழைந்தனர்.
யார் என்றே தெரியாத ஒருத்தர் தன்னைப் பார்த்துப் பேசியதில் சற்று அச்சப்பட்ட மல்லிகாவுக்கு மூன்று பேரையும் ஒன்றாகப் பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
“என்ன மல்லிகா எங்களை வரவேற்க… வாசலுக்கே வந்து நிக்கிறியா…?” என கிண்டலாகக் கேட்டான் மாணிக்கம்.
“அதுக்காக வந்திருக்காது. இவ்வளவு நேரமா நம்மளைக் காணமேன்னு கோவிச்சுக்கிட்டு வீட்டுக்குப் புறப்பட்டிருக்கும்…’’ என கேலியாகச் சொன்னான் செல்வம்.
“ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க. நானே பயத்துலேயும் குழப்பத்துலேயும் இருக்கேன்’’ என்றாள் மல்லிகா.
“என்ன ஆச்சு மல்லிகா?’’ என விரைந்து கேட்டார் கோமாளி.
“மாமா நாம வழக்கமா உக்காந்து கதை பேசுற இடத்துலே இன்னைக்கு புதுசா ஒரு ஆளு.’’
“புதுசா தோட்டத்துக்கு வந்தவரா இருப்பாரு… அதனாலே என்ன? அவரும் கோமாளி மாமா சொல்ற கதையைக் கேக்கட்டும். அதுக்கு ஏன் நீ பயப்படணும், குழப்பமடையணும்?’’ என்றான் செல்வம்.
“அதுக்கு பயப்படலே… நீ மட்டும் தனியாவா வந்திருக்கே? உன் பேரு என்ன? வந்து என் பக்கத்திலே உக்காரு… நாம பேசிக்கிட்டிருக்கலாம்னு… ஒரு மாதிரியா பேசுனா…’’ என்று மல்லிகா சொல்லி முடிக்கும் முன்…
“வாங்க! அது யாருன்னு பார்ப்போம்’’ என்றபடி வேகமாகத் தோட்டத்தின் உள்ளே போனார் கோமாளி மாமா. மூவரும் பின் தொடர்ந்தனர்.
வழக்கமாக அமர்ந்து கதை சொல்லும் இடத்தில் யாரையும் காணவில்லை.
“இங்கேதான உக்காந்திருந்தாரு அந்த ஆளு’’ என்றாள் மல்லிகா.
“ஆளு… ஆளுன்னு சொல்றியே அந்த ஆளு எப்படியிருப்பாரு? ஏதாவது அடையாளம் இருக்கா?” என சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டான் மாணிக்கம்.
“அந்த ஆளு பச்சை சட்டை போட்டிருந்தாரு. எப்படியும் அந்த ஆளுக்கு 50 வயசுக்கு மேலே இருக்கும். வெத்திலை பாக்குப் போட்டு பல்லெல்லாம் காவிக் கலரா இருந்தது’’ என்று சொன்னாள் மல்லிகா.
“பல்லைக் காட்டுன அந்த ஆளு, நம்ம எல்லாரும் ஒன்னா வந்ததைப் பார்த்ததும் பயந்து ஓடி இருப்பான்’’ என்றான் செல்வம்.
“இந்த மாதிரி புது ஆளுங்ககிட்ட பொம்பளைப் புள்ளைங்க ரொம்ப கவனமா இருக்கணும்’’ என்றான் மாணிக்கம்.
“புது ஆளு… பழைய ஆளுன்னு இல்லே. நமக்கு அறிமுகமானவரா இருந்தாலும், அறிமுக-மில்லாதவரா இருந்தாலும் குழந்தைகள் எப்பவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கணும்’’ என்றார் கோமாளி.
“மாமா… நாம ஏற்கனவே நேரங்கழிச்சு வந்துட்டோம். அதனாலே நீங்க கதையைச் சொல்லுங்க. மத்ததை அப்பறம் பாத்துக்கலாம்’’ என்றான் செல்வம்.
“ஒரு கிராமத்துலே மாலான்னு ஒரு பொண்ணு. அதுக்கு 14 வயசு. தன் நண்பர்களோட இந்த மாதிரி ஒரு தோட்டத்திலே விளையாடிக்கிட்டிருந்தா. மாலா வீட்டுப் பக்கத்திலே இருக்கிற வேலு அந்தப் பக்கமா தன்னோட மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்து நிறுத்திட்டு, “மாலா… மாலா… உன்னை எங்கெல்லாம் தேடுறது. உடம்பு சரியில்லாத உங்க அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க’’ என்று சத்தமாகக் கத்தினான்.
அலறித் துடித்த மாலா, “அய்யய்யோ எங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு?’’ என பதற்றத்துடன் கேட்டாள்.
“பயப்படாதே! ஆம்புலன்ஸ் வந்து உங்க அம்மாவை பக்கத்து டவுன்ல இருக்கிற ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டுப் போயிருக்காங்க’’ என்றான் வேலு.
“அய்யோ… பக்கத்து டவுனுக்கு நான் இப்ப எப்படி போவேன். என்ன செய்வேன். எனக்கு ஒண்ணுமே புரியலியே’’ என்று பதறினாள் மாலா.
“கவலைப்படாதே! மாமா அதுக்காகத்தானே டூ வீலர் கொண்டு வந்திருக்கேன். வா என் கூட! நான் கூட்டிக்கிட்டுப் போறேன்’’ என சிரித்தபடி சொன்னான்.
பதற்றத்தில் எதையும் கவனிக்காத மாலா, “வாங்க, வாங்க! உடனே ஆஸ்பத்திரிக்குப் போலாம்’’ என மோட்டார் சைக்கிள் அருகில் சென்றாள்.
வேலு வேகமாக வண்டியில் அமர்ந்து புறப்படத் தயாரானான். மாலா பின்னால் ஏறி அமர்ந்ததும் கண்மூடித் திறப்பதற்குள் அந்த இடத்தை விட்டு மறைந்தது மோட்டார் சைக்கிள்.
மாலா போனதும் அவளோட விளையாடிக் கொண்டிருந்த தோழிகளும் அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
மாலா வீட்டின் அருகில் இருக்கும் அன்பரசி தன் வீடு நோக்கிச் செல்லும்போது… மாலாவின் பாட்டி தள்ளாடியபடி எதிரில் வந்தார்கள்.
அன்பரசியைப் பார்த்த பாட்டி, “அன்பு உன்கூட விளையாட வந்த மாலா எங்கே?’’ என்று கேட்டார்.
“மாலா ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா பாட்டி’’ என்றாள் அன்பரசி.
“அவளுக்கு என்ன ஆச்சு? எதுக்கு ஆஸ்பத்திரிக்குப் போனா?” என பதற்றத்துடன் கேட்டார் பாட்டி.
“மாலாவுக்கு ஒண்ணுமில்லே… உடம்பு சரியில்லாம வீட்டுல இருந்த அவ அம்மா மயக்கம் போட்டு விழுந்து டவுன்ல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு ஆம்புலென்சுல கூட்டிகிட்டுப் போயிருக்காங்கன்னு இவ போயிருக்கா…’’ என்றாள் அன்பரசி.
“என்னடியம்மா சொல்றே? குத்துக்கல்லாட்டம் அவ அம்மா வீட்டுல படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கா… எனக்குத் தெரியாம எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவா? ஆமா… இந்தத் தகவலை யார் சொன்னது?” என படபடப்பாய்க் கேட்டார் பாட்டி.
“நம்ம தெருவுல நாலாவது வீட்டுல இருப்பாரே வேலு அவர்தான். நாங்க விளையாட்டிக்-கிட்டிருக்கும்போது மோட்டார் பைக்குல வந்து, விசயத்தைச் சொல்லி மாலாவை வண்டியில வச்சு கூட்டிக்கிட்டு (டவுன்) ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காரு’’ என்று அன்பரசி சொல்லி முடிக்கும் முன்பே பாட்டி,
“யாரு? வேலை வெட்டிக்குப் போகாம ஊரைச் சுத்திக்கிட்டு… போற… வர்ற பொம்பளைப் புள்ளைகளை கேலி பண்ணிக்கிட்டுத் திரிவானே அந்த வேலுப் பயலா… போச்சு… போச்ச… என்ன நடக்கக் கூடாதுன்னு நினைச்சனோ… அது நடந்திடும் போலிருக்கே…’’ என பதறித் துடித்தார்.
அந்த நேரம் அந்த வழியாக வந்தார் மாலாவும், அன்பரசியும் படிக்கும் பள்ளி ஆசிரியர் கவிதா.
“என்ன அன்பரசி… யாரு இவங்க… ஏன் பதற்றமா இருக்காங்க…’’ என்று கேட்டார் கவிதா.
“டீச்சர் இவங்க மாலாவோட பாட்டி’’ என அறிமுகம் செய்து வைத்து, பாட்டி பதற்றப்படுவதற்-கான காரணத்தையும் விவரித்தாள் அன்பரசி.
நடந்ததைப் புரிந்து கொண்ட ஆசிரியர் கவிதா, “உடனே வாங்க பாட்டியம்மா நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி ஒரு கம்ப்ளெயின்ட் கொடுப்போம்’’ என்றார்.
“வாம்மா… வாத்தியாரம்மா… ஊருல கவுரவமா இருக்கிற எங்க குடும்ப மானத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி போட்டு உடைக்கலாம்னு பாக்குறியா?” என பாட்டி சத்தம் போட்டார்.
ஆசிரியர் கவிதா பொறுமையாக, “பாட்டி நமக்கு உதவி செய்யத்தான் காவல்துறை இருக்கு. குழந்தைகள் கிட்ட பாலியல் ரீதியா தப்பா நடக்க முயற்சி செய்தா தண்டிக்க போக்சோ சட்டம் இருக்கு’’ என விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“வாத்தியாரம்மா… போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனா எங்க ஊட்டுப் புள்ளையோட படத்தை பேப்பர்ல பெருசாப் போட்டுடுவாங்க… பேரை பெருசாப் போட்டு செய்தியாக்கிப்புடுவாங்க. வேணாம்மா’’ என்றார் பாட்டி.
“பாட்டியம்மா… குழந்தையோட பேரு… படம் எதுவும் வெளியே வராது. வெளியிடவும் கூடாதுன்னு சட்டமே இருக்கு. இந்த மாதிரி வழக்கை விசாரிக்கக் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு நாம போக வேண்டியதில்லே. நம்ம வீட்டுக்கே வந்துதான் விசாரிப்பாங்க’’ எனச் சொல்லி முடிக்கும் முன்பே…
“அது ஒண்ணு போதுமே… போலீசு வீட்டுக்கிட்ட வந்தாலே ஊரு பூராவும் தண்டோரா போட்டு சொன்ன மாதிரி ஆகிடுமே’’ என கலங்கினார் பாட்டி.
“அப்படி எதுவும் ஆகாது. ஏன்னா குழந்தைகளை விசாரிக்க வீட்டுக்கு வர்ற போலீஸ் சாதாரண உடையிலே நம்மளை மாதிரிதான் வருவாங்க. போலீஸ் உடையிலே வரமாட்டாங்க’’ என தெளிவுபடுத்தினார் ஆசிரியர் கவிதா.
அந்த நேரம் தூரத்தில் மாலா ஓடி வருவதைப் பார்த்த அன்பரசி, “அதோ மாலா வந்துட்டா’’ என சத்தம் போட்டாள்.
அருகில் வந்த மாலா, “பயப்படாதீங்க. எனக்கு ஒண்ணும் ஆகலே. அம்மா ஆஸ்பத்திரியில இருக்காங்கன்னு பொய் சொல்லி கூட்டிக்கிட்டுப் போன வேலு… ஊர் கடைசியிலே இருக்கிற பாழடைஞ்ச கோயிலுக்கிட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி ‘வா மாலா அம்மாவுக்கு சீக்கிரம் குணமாகணும்னு வேண்டிக்கிட்டுப் போலாம்’னு கூப்பிட்டான். அப்பவே அவன் என்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போனது தெரிஞ்சிடுச்சு. அங்கே… பக்கத்துல இருக்கிற கம்பெனி விட்டு நிறைய தொழிலாளிங்க அந்தக் கோயில் பக்கமா வந்தாங்க. அவங்களைப் பாத்ததும் வேலு நைசா ஒளிஞ்சான். அந்த நேரத்துல நான் தப்பிச்சு வந்துட்டேன்” என்ற சொல்லியபடி பாட்டியை கட்டிப் பிடித்துக் கொண்டாள் மாலா.
“சரி… வாங்க… இப்பவாவது போலீஸ்ல அந்த வேலு மேலே ஒரு புகார் கொடுப்போம்…” என்றார் ஆசிரியர் கவிதா.
“வேணாம் டீச்சர் இதை வெளியிலெ யார்கிட்டே சொன்னாலும் என்னைத் தான் கேவலமா பேசுவாங்க” என்றாள் மாலா.
“இங்க பாரு மாலா. உன் தப்பு எதுவுமில்லே. நீ குற்றவாளியுமில்லே. நாமதான் துணிச்சலா இந்த மாதிரியான ஆட்களை அடையாளங்காட்டி தண்டனை வாங்கித் தரணும். இல்லேன்னா… இதே தப்பை வேற யார்கிட்டேயாவது செய்வாங்க. குழந்தைகளுக்கு ஏற்படுற இந்த மாதிரி கொடுமைகளைத் தடுக்க ஒன்றிய அளவிலேயும், மாநில அளவிலேயும் குழந்தைப் பாதுகாப்பு மய்யங்கள் இருக்கு. இதுபோல வேற யாருக்காவது நடந்ததைப் பாத்தா உடனே 1098 என்கிற எண்ணுக்கு தொலைபேசி மூலமா சொல்லலாம். இது இலவசமா பேசுற நெம்பர். உடனே உதவி கிடைக்கும். போன் பண்றவங்க பற்றிய தகவலை ரகசியமா வச்சுக்குவாங்க” என்றார் ஆசிரியர் கவிதா.
“ஊம்… பொண்ணா பிறக்கிறதே பாவம்டியம்மா’’ என ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார் பாட்டி.
“பாவம், புண்ணியமெல்லாம் எதுவுமில்லே… இதுபோல ஆண் குழந்தைகளுக்கும் நடக்குது பாட்டி. மாலா, அன்பரசி குழந்தைகளாகிய உங்களை யாராவது தவறா தொட்டா… NO, GO, TELLங்கிறதை ஞாபகம் வச்சுக்குங்க.
தொடுதல்லே… பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல்னு ரெண்டு இருக்கு.
நம்முடைய தேவை கருதி நன்மைக்காக சில பேரு தொடுவாங்க. நாம சில பேரைத் தொடுவோம். உடம்பு சரியில்லாதபோது தைலம் தடவ அம்மா தொடுறது, உடம்பை சோதிக்க டாக்டர் தொடுற-தெல்லாம் பாதுகாப்பான தொடுதல்.
தேவையில்லாம தவறான எண்ணத்தோட நம்மை தொடுறது எல்லாமே பாதுகாப்பற்ற தொடுதல். இப்படி யாராவது தொடுதலில் ஈடுபட்டா ‘NO’ ‘வேண்டாம்’’ன்னு சத்தமா கத்தணும்.
உடனே அந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடணும். அதான் “GO”.
அங்கே நடந்ததை உடனே பாதுகாப்பான நம்பிக்கைக்குரியவங்ககிட்ட சொல்லணும். அதான் ‘TELL’ என்று தெளிவுபடுத்தினார்” ஆசிரியர் கவிதா.
“இதைத்தான் இப்ப மாலா செய்திருக்கான்னு நினைக்கிறேன். வாங்க… போலீஸ் ஸ்டேஷன் போவோம்” என்றார் பாட்டி.
மனம் மாறிய பாட்டியைக் கைகுலுக்கி அழைத்துப் போனார் ஆசிரியர் கவிதா.
கதையைச் சொல்லி முடித்த கோமாளி மாமாவிடம் கைகுலுக்கி விடைபெற்றனர் மாணிக்கம், மல்லிகா, செல்வம்.
“NO…
GO…
TELL…
1098.
இது மாலாவுக்கும் அன்பரசிக்கும் ஆசிரியர் கவிதா சொன்னதாக நினைக்காதீங்க. குழந்தைகள் எல்லாருக்கும் சொன்னது. யாரும் மறந்துடாதீங்க” என்றபடி புறப்பட்டார் கோமாளி.
– மீண்டும் வருவார் கோமாளி