பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! நன்றி சொல்வோம் முதல்வருக்கு!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
நலமா? நமது தோழர்களின் எல்லைமீறிய அன்பு _ பாசம் காரணமாக, என்னுடன் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்பி, முகக் கவசத்தை _ படத்திற்காக _ அகற்றும்படி சொன்னபோது, என்னால் தட்ட முடியவில்லை; என்செய்வது?
அதனால் சிற்சில நேரங்களில் அதனைச் செய்ததாலோ, அல்லது தொடர்வண்டிப் பயணத்தினாலோ, அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ நானும் மோகனா பாட்டியும் கொரோனா கொடுந்தொற்றுக்கு ஆளாக நேரிட்டது. உங்களுக்கும் உங்களது பெற்றோர்களுக்கும் மிகவும் கவலையாக இருந்திருக்கும்; காரணம் பெரியாரின் பெருங்குடும்பத்தைச் சேர்ந்த நாம் அனைவரும் கொள்கைப் பாசத்தால் கட்டுண்டு கிடப்பவர்கள்தாமே!
நல்ல செய்தி; இருவருமே குணமடைந்து ஒரு பத்து நாள்களுக்குமேல் தனிமைப்படுத்திக் கொண்தாலும், சிகிச்சை சிறந்த முறையில் பலனளித்ததாலும் விரைந்து குணமானோம்.
ஏற்கெனவே தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்டதும் அதற்குப் பெரிதும் துணை நின்றிருக்கக் கூடும்.
நல்லவிதமாக தொடர் பணி செய்வதில் இனி தொய்விருக்காது.
உங்களுக்கு இம்மாத இதழில் எழுதும்போது ஒரு மகிழ்ச்சி பொங்கும் செய்தியாக நமது தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் _ (அவர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அல்லவா?) குழந்தைகளுக்கான _ உங்களைப் போன்ற பெரியார் பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல; எல்லா குழந்தைகளின் நலனையும் பாதுகாக்க அருமையான திட்டத்தை 2021ஆம் ஆண்டு கொள்கையாக அறிவித்திருக்கிறார்.
நம்ம திராவிட மாடல் அரசு எப்படி ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதற்கேற்ப எதிர்கால விஞ்ஞானிகளாகவும் மருத்துவர்-களாகவும், ஆளுமை படைத்த அறிவுசார் மேதைகளாகவும் வரக்கூடிய துளிர்களான உங்களையெல்லாம் பாதுகாக்க அருமையான கொள்கைத் திட்டத்தை அறிவித்திருப்பது தேனாய் இனிக்கிறது; தென்றலாய் வீசுகிறது!
தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021அய் வெளியிட்டு, நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனஆணைகளையும் வழங்கினார்கள்.
“தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெறவும், மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கை வடிவமைத்தல் இன்றியமையாதது ஆகும்.
இதனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சிப் படிநிலைகளுக்கான இலக்கினை அடைந்திடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு இவை அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மேல் மாறாத அன்பும் அவர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கோவிட்_19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்களையும் நிவாரண நிதி உதவிகளையும் வழங்குவதற்கு 29.05.2021 அன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
6,749 குழந்தைகளுக்கு ரூ. 207.59 கோடி வழங்கல்!
அவ்வறிவிப்பினைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் இதுநாள்வரையில் கோவிட்-_19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 256 குழந்தைகளுக்கு ரூ.12.80 கோடி மற்றும் ஒரு பெற்றோரை இழந்த 6,493 குழந்தைகளுக்கு ரூ.194.79 கோடி, என மொத்தம் 6,749 குழந்தைகளுக்கு ரூ.207.59 கோடி தமிழ்நாடு அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 2021_-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், பெற்றோர் இருந்தும் வறுமை நிலை காரணமாக, பராமரிக்க இயலாது, குழந்தைகளை நிறுவனங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு மாற்றாக குடும்பங்களில் வைத்துப் பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவுத் திட்டத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 1,148 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழுப் பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
காசோலைகள் – பணி நியமன ஆணைகள் முதல்வர் வழங்கினார்!
அதன்படி, இத்திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,37,76,000/- நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூகநல இயக்குநரகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 7 வாரிசுதாரர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலத்துறை இயக்குநர் த.இரத்னா, சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் ச.வளர்மதி UNICEF – தமிழ்நாடு மற்றும் கேரளா தலைவர் கே.எல்.ராவ், UNICEF – தமிழ்நாடு, குழந்தை பாதுகாப்பு நிபுணர் ஜி.குமரேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அது மட்டுமா? எந்தக் குழந்தை குறளைப் படித்தாலும் புரட்சிக்கவிஞரின் கவிதையைச் சொன்னாலும் பாராட்டி, ஊக்கப்படுத்தி, சாக்லெட் உள்பட முதல்வர் தருகிறாரே! இனிப்பான முதல்வர் இவரல்லவா!
புரட்சிக்கவிஞர் பாடினார்:
“இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்’’ என்று.
உங்களை நம்ம அரசும், நம் முதல் அமைச்சரும் பாதுகாத்து, வளர்ப்பதில் எப்படி கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள், பார்த்தீர்களா?
நன்றிக் கடிதங்களை அவருக்கு ‘பெரியார் பிஞ்சு வாசகர்’ என்று பெயரிட்டு அனுப்பிடத் தவறலாமா? உடனே செய்யுங்கள்!
இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி