சாதனை : நினைவாற்றல் கலையில் அசத்தும் சிறு குழந்தை!
மகிழ்
ஒரு பெண் குழந்தை தனது வியத்தகு நினைவாற்றலால் சமன்பாட்டுக் குறியீடுகள், பிரபல நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், நாடுகள், மாநிலங்களின் தலைநகரங்கள் போன்றவற்றைச் சொல்லி அசத்தி வருகின்றார். கோவையைச் சேர்ந்த கோபிநாத் _- நிஷாந்தினி இணையரின் ஒன்றரை வயது மகளான பிரியஹாசினி.
அண்ணா, பெரியார் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் முதல் பேட்மேன் போன்ற கதாபாத்திரங்களையும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வரை அனைத்து தலைவர்களின் படங்களைக் காட்டினாலே பெயர்களைச் சொல்லியும், நாட்டின் தலைநகர், கொடி போன்றவற்றை அடையாளப்படுத்திக் கூறியும் நம்மை வியக்க வைக்கிறார்.
குழந்தைக்கு எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதை முதலிலேயே முடிவு செய்தோம் எனத் தெரிவிக்கும் பிரியஹாசினியின் தந்தை கோபிநாத், பெற்றோரைப் பார்த்துத்தான் குழந்தைகள் அனைத்தையும் செய்வார்கள் என்பதால் தங்கள் செயல்களின் மூலம் குழந்தைக்கு பலவற்றை உணர்த்தியதாகவும் தனது மகள் தொலைக்காட்சி, கைபேசி பார்ப்பதில்லை. நாங்கள் புத்தகம் வாசிக்கும்போதும், கதைகூறும்போதும் கவனமாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்வாள் என்கிறார்.
குழந்தை முன்பு புத்தகங்களைப் படிக்கும் போது, அவர்களுக்கும் கொடுத்தால் வாசிக்கும் ஆர்வம் உண்டாகும். அதில் இருந்து குழந்தைக்கு எதுவெல்லாம் சொல்லிக் கொடுக்க முடியுமோ அதைச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கத் துவங்க வேண்டும். இது அவர்களுக்கு எளிதில் தகவல்களை உள்வாங்கிக் கொள்ளும் திறனை வளர்க்கும் என்கிறார் தந்தை கோபிநாத் கணேசன்.
“குழந்தைக்கு ஒரு வயது வரை எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்ப்பதில் இருந்து அவரின் மனதில் பதிந்து விடுகிறது” என்று தெரிவிக்கும் தாய் நிஷாந்தினி, குழந்தையிடம் பெற்றோர்கள் நிறைய பேசுவதும் அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றார். குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் புத்தகத்தை, அதனையொட்டிய பொருள்களையும் வாங்கித் தரலாம். அது அவர்களுக்கு எளிதில் புரிந்து பதிவு செய்து கொள்ளும் திறனை மேன்மேலும் வளர்க்க உதவுகிறது.
ஒன்றரை வயதுக் குழந்தை பிரியஹாசினி தனது திறன்மிகு நினைவாற்றல் காரணமாக ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனைகளைப் பதிவு செய்யும் நிறுவனங்களிடம் இருந்து இரு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரை வாழ்த்தி, நாமும் இதுபோல் முயற்சிப்போம் பிஞ்சுகளே!