கோமாளி மாமா-21 : பொறுப்பு
ஓவியம், கதை: மு.கலைவாணன்
தோட்டத்தில் விடுமுறை நாளில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
கோமாளி மாமா வரும் வரை தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு காரசாரமான விவாதம் போல் ஆகிவிட்டது.
தூரத்திலிருந்தே இதைப் பார்த்தபடி வந்த கோமாளி, “என்ன ஏதோ முக்கியமான சேதி பேசிக் கிட்டிருக்கீங்களா…? இதுலே நானும் கலந்துக்கலாமா?’’ என்றார்.
சட்டென்று மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு கோமாளி மாமாவைப் பார்த்தனர்.
“ஏன்? நான் வந்ததும் பேச்சை நிறுத்திட்டிங்க?’’ என்றார் கோமாளி.
“அது ஒண்ணுமில்லே! எங்க ஊர் சிறுவர் மன்றத்திலே மல்லிகா பொருளாளர், மாணிக்கம் செயலாளர்ன்னு பொறுப்புக்கு வந்துட்டாங்க. அதனாலே… இனி சிறுவர் மன்ற வேலையை எல்லாம் இவங்கதான் கவனிச்சுக்கணும்னு சொன்னா… மல்லிகா ஒத்துக்க முடியாதுங்கிறா?” என்று வருத்தத்தோடு சொன்னான் செல்வம்.
“மாமா! பொறுப்புல உள்ளவங்க மட்டும்தான் எல்லா வேலையும் செய்யணுமாம் மன்ற உறுப்பினர் எல்லாரும் சும்மாதான் இருப்பாங்களாம்… அது எப்படின்னுதான் நாங்க கேக்குறோம்…” என்றான் மாணிக்கம்.
“அய்யோ! ஏன்தான் இந்த பொறுப்புக்கு வந்தமோன்னு கவலையா இருக்கு!’’ என்று சலித்துக் கொண்டாள் மல்லிகா.
“அட… இருபத்தஞ்சு முப்பது பேர் இருக்கிற ஒரு சிறுவர் மன்றம். அதில சுழற்சி முறையிலே பொறுப்பு மாறி மாறி எல்லாருக்கும் வரும். அப்படித்தானே?’’ என்று கேட்டார் கோமாளி.
“ஆமா மாமா!’’ என்றனர் மூவரும்.
“இந்தச் சின்னப் பொறுப்புக்கே இப்படிச் சலிச்சுக்கிட்டா… நீங்க பெரியவங்களா ஆக ஆக குடும்பப் பொறுப்பு, வேலை செய்யிற இடத்திலே தரக்கூடிய பொறுப்பு, இதைவிட முக்கியமான சமூகப் பொறுப்பு இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பீங்க?-…’’ என்றார் கோமாளி.
மூவரும் கோமாளி மாமாவையே பார்த்தனர். “கவலைய விடுங்க! நகைச்சுவையான கதை ஒண்ணு சொல்றேன். அதுக்குப் பிறகு இதைப் பத்திப் பேசுவோம்…’’ என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினார் கோமாளி.
“சரி… சரி… கதையைச் சொல்லுங்க’’ என ஆர்வமானான் செல்வம்.
“ரொம்ப நாளைக்கு முன்னே… தன் வீட்டுத் திருமணத்திலே எல்லாருக்கும் கொடுக்கிறதுக்காக தேங்காய் வாங்க பக்கத்து ஊருக்குப் புறப்பட்டுப் போனாரு பக்கிரிசாமி. அவர்கூட மாடசாமி, குப்புசாமி, மன்னார்சாமின்னு உறவுக்காரங்க மூணு பேரு போனாங்க.
இப்ப இருக்கிற மாதிரி _ வண்டி வசதியெல்லாம் இல்லாத அந்தக் காலம். அதனாலே நடந்தே போயி நடந்தே வரணும். பக்கத்து ஊருக்குப் போயி தென்னந்தோப்புல தேங்காய் வியாபாரிகிட்டே விலைபேசி பெரிய பெரிய தேங்காயா 40 தேங்காய் வாங்கிட்டாங்க. அதை ஒரு கோணிப்பையில போட்டு மூட்டையாக் கட்டிட்டாங்க.
அந்தப் பெரிய மூட்டைய யாரு தூக்குறதுன்னு பிரச்சினை வந்துடுச்சு.
மாப்பிள்ளை வீட்டுக்காரரு மாடசாமிதான் தூக்கிட்டு வரணும்னு மன்னார்சாமி சொல்றாரு.
பொண்ணு வீட்டுக்காரரு குப்புசாமிதான் தூக்கிட்டு வரணும்னு மாடசாமி சொல்றாரு.
தேங்காய் வாங்க கூப்பிட்ட பக்கிரிசாமிதான் தூக்கிட்டு வரணும்னு குப்புசாமி சொல்றாரு.
ஆனா… அந்தப் பெரிய மூட்டையைத் தூக்க யாரும் தயாரா இல்லே.
பக்கிரிசாமி எப்படி தன் ஊருக்கு எடுத்துக்கிட்டுப் போறதுன்னு யோசிச்சு “எல்லார் பேரையும் சீட்டுல எழுதிப் போட்டு குலுக்கி ஒரு சீட்டு எடுப்போம். அதுல யார் பேரு வருதோ அவங்க முதல்ல மூட்டையைத் தூக்கிட்டு வரட்டும்னு” யோசனை சொன்னாரு.
சரின்னு எல்லாரும் ஒத்துக்கிட்டு சீட்டு எழுதிப் போட்டு எடுத்தாங்க. குப்புசாமி பேரு வந்தது. அவரு மூட்டையைத் தூக்க முடியாமத் தூக்கித் தலையிலே வச்சுக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்தாரு. தலை வலிக்க ஆரம்பிச்சுது. முடியல. மூட்டையை இறக்கி வச்சிட்டாரு. “இதுக்கு மேலே என்னால முடியாதுப்பா’’ என்று புலம்பினாரு.
மறுபடி மீதியுள்ள மூணு பேரை சீட்டு எழுதிப் போட்டு எடுத்தாங்க. இப்ப மாடசாமி பேரு வந்தது. அவரு தூக்கிக்கிட்டு நடந்தாரு. அவராலேயும் முடியல. மூட்டையை இறக்கி வச்சுட்டாரு.
மத்த ரெண்டு பேரு பேரை எழுதி குலுக்கிப் போடும்போது மன்னார்சாமி, “என்னால இந்தப் பெரிய மூட்டையைத் தூக்க முடியாதுப்பா’’ன்னு பிரச்சினை பண்ணாரு.
அப்ப… அந்த வழியா உங்களை மாதிரி ஒரு சின்னப் பையன் வந்தான். இவங்க நாலு பேரும் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டுட்டு சத்தமாச் சிரிச்சான்.
அதைப் பார்த்த பக்கிரிசாமி, “எதுக்குடா தம்பி சிரிக்கிற… நாங்க மூட்டையைத் தூக்க முடியாம தவிக்கிறது உனக்குச் சிரிப்பா இருக்கான்னு’’ கேட்டாரு.
அதுக்கு அந்தச் சின்னப் பையன், “ஆளுக்கு பத்துப் பத்துத் தேங்காயைத் தூக்கிக்கிட்டு மகிழ்ச்சியா நடந்து போறதை விட்டுட்டு மொத்தமா கட்டி வச்சுக்கிட்டு யாரு தூக்குறதுன்னு போட்டி போட்டா… உங்களைப் பாத்துச் சிரிக்காம என்ன செய்யறதுன்னு” போற போக்குல சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருந்தான்.
எளிமையான வழியைச் சின்னப் பையன் சொன்ன பிறகுதான் நாலு பேருக்கும் விளங்குச்சு.
மூட்டையைப் பிரிச்சு ஆளுக்குக் கொஞ்சம் தேங்காய்களைத் தங்களோட துண்டுல கட்டித் தூக்கிக்கிட்டு நாலு பேரும் மகிழ்ச்சியா நடந்து ஊருக்குப் போனாங்க.
“அடடே… பெரியவங்களுக்குத் தெரியாத எளிமையான வழியை ஒரு சின்னப் பையன் சொல்லிட்டானே’’ என மல்லிகா வியப்பாகச் சொன்னாள்.
“அது கதையிலே நடந்தது. உண்மையிலேயே பொறுப்புகளைக்கூட எல்லாரும் பகிர்ந்து சிறப்பா பொறுப்பா செய்தா… எல்லாமே வெற்றியாக முடியும்.
உனக்குத்தானே பொறுப்பு கொடுத்தாங்க… நீங்கதான் செய்யணும்… எனக்கும் அதுக்கும் தொடர்பு இல்லேன்னு ஒதுங்கக் கூடாது.
சில பொறுப்புகள் நம்மைத் தேடி வரும். சில பொறுப்புகளை நாமே தேடிப் போய் ஏத்துக்கிட்டு சிறப்பாச் செய்யணும்’’ என்று கோமாளி மாமா சொன்னதும்.
“இனிமே நாங்க பொறுப்பை உணர்ந்து பொறுப்பா இருப்போம்’’ என மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
-மீண்டும் வருவார் கோமாளி