சூப்பர் கரடி சிங்மங்டுங்
விழியன்
இன்னும் ஒரே வாரத்தில் ‘சூப்பர்’ கரடியாக மாறிவிடுவோம் என்று நம்பியது சிங்மங்டுங். ஒரு கதைப் புத்தகத்தில் சூப்பர் கரடி சிம்காவைப் பற்றிப் படித்தது. அன்றிலிருந்து சிம்கா என்னென்ன சாப்பிடுமோ அதெல்லாம் சாப்பிட ஆரம்பித்தது சிங்மங்டுங். சிம்காவைப் போல தினமும் உடற்பயிற்சி செய்யத் துவங்கியது. சிங்மங்டுங்கின் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள் _ தம்பி அது கதை என்று. கேட்கவே இல்லை. “விரைவில் நான் காற்றில் பறப்பேன் அப்போது நம்புவீர்கள்” என்றது.
காட்டின் மிக நீண்ட மரத்தின் கீழே டெயிலர் ஒட்டகச்சிவிங்கியின் கடையில் சூப்பர் கரடியாக மாறிய பின்னர் தோளில் இருந்து தொங்கவிட ஓர் அங்கியை தைக்கக் கொடுத்தது. “அண்ணே, இது பறக்கும்போது தொந்தரவா இருக்காதே” என்று கேட்டபோது டெயிலர் ஒட்டகச்சிவிங்கி குழம்பித்தான் போனது. கரடி எப்படி பறக்கும்? சிங்மங்டுங்கிற்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்துக்கொண்டது.
முள்ளங்கிகளை முழுதாக லபக் லபக் என்று விழுங்க ஆரம்பித்தது சிங்மங். தன்னுடைய புஜத்தை அடிக்கடி அழுத்திப் பார்த்தது. விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து திபுதிபுதிபுவென ஓட ஆரம்பித்தது. ஆனால் கால்மணி நேரத்தில் மூச்சு வாங்கும். சிங்மங் குட்டிக் கரடிதான். பழுப்பு நிறத்தில் உடலெங்கும் புசுபுசு ரோமங்கள். நாளுக்கு நாள் சிங்மங்கின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தான் சூப்பர் கரடியாக மாறி காட்டில் இருப்பவர்களை எல்லாம் பறந்து பறந்து காப்பாற்றுவேன், மழையில் இருந்து காப்பேன், வானத்தில் இருந்து வரும் பூதங்களிடம் சண்டைபோடுவேன் எனச் சொல்வதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு வாரத்தில் டெயிலர் ஒட்டகச்சிவிங்கி அந்த ஆடையினை சிங்மங்டுங்கிடம் ஒப்படைத்தது. பார்க்கவே பளபளவென மின்னியது. தோளில் வைத்து அளவினைச் சரி பார்த்தது. கச்சிதமாக இருந்தது. இனி பறக்க வேண்டியது மட்டும் தான். மரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதிக்கலாமா என்று நினைத்தது சிங்மங். ச்ச… அது சாதாரணக் கரடி செய்யும் வேலை. நாம் சூப்பர் கரடி. காட்டிலேயே உயரமாக இருக்கும் குன்றில் இருந்து குதிப்போம் என முடிவு எடுத்தது. மறுநாள் விடியற்காலை பத்துக் கிழங்குகளை விழுங்கிவிட்டு அந்தப் பளபள துணியை எடுத்துக்கொண்டு கிளம்பியது. காடே அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தது. காட்டின் எல்லை வரை அடிமேல் அடி எடுத்து வைத்துச் சென்றது. யாரேனும் எழுந்துவிட்டு தன்னைப் பின் தொடர்ந்தால் என்ன செய்வது என்று இந்தக் கவனம். பின்னர் மலையைப் பார்த்ததும் குடுகுடுவென ஓடியது.
“ஆ குடுகுடுகுடுவென ஓடுவேன்
குன்றில் மேலே இருந்து குதிப்பேன்
கடகடகடவென வருவேன்
எதிரியை வானத்தில் பந்தாடுவேன்
காட்டிற்கு நான் ஒரு சூப்பர் கரடி
குடுகுடுவென ஓடுவேன்..”
என்று பாடிக்கொண்டே மலை மேலே ஏறியது. அந்த மலை மீதிருந்து பார்க்க காடு அவ்வளவு அழகாக இருந்தது. அதுவும் விடியற்காலை வேளை. சூரியன் இன்னும் உதிக்க ஆரம்பிக்கவில்லை. “எவ்ளோ பெரிய காடு!” என வியந்தது. அட, இத்தனை ஆண்டுகளாக இந்த ரம்மியமான இடத்துக்கு நாம வரவே இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டது. சூப்பர் கரடிக்கான அங்கியை மாட்ட முயற்சி செய்தது. ஒன்றில் இருந்து பத்துவரை எண்ணிவிட்டு குதிக்க வேண்டும். ஒன்று.. ரெண்டு.. மூன்று…
அப்போது ஒரு குரல்
“முட்டாள் முட்டாள்…” என்று
தன்னைத்தான் யாரோ சொல்கின்றார்கள் என்று திரும்பினால் அங்கே இரண்டு மனிதர்கள். கரடியைக் கவனிக்கவில்லை. அவர்கள் பேச்சின் நடுவே இந்த வார்த்தைகள் வந்திருக்கு. முட்டாள் என்றதும் தான் சிங்மங்டுங்கிற்கு நறுக்கென்று உறைத்தது. ஆமாம், எப்படிப் பறக்க முடியும்? தொபக்கடீர்னு விழுந்து அல்லவா இருப்போம். அடி பலமாக விழுந்து இருக்கும் அல்லவா? ச்ச, இப்படி நினைக்கும்போதே அவர்கள் பேச்சைக் கவனித்தது.
“இதோ இந்தப் பகுதி காடு முழுக்க தண்ணியால நிறைஞ்சிடும். இங்க அணை கட்டினால் தான் சரியா இருக்கும். இவ்வளவு வசதியான இடத்தைச் சொல்லவே இல்லையே, முட்டாள் முட்டாள்”.
“ஆனா இங்கே நிறைய விலங்குகள் இருக்கே!”
“அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகின்றாய்?”
புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு! இவங்க காட்டை அழிக்கத் திட்டம்போட்டு இருக்காங்க. சிங்மங்டுங்கிற்கு பயம் பற்றிக்கொண்டது. கோவம், அழுகை எல்லாம் ஒரு சேர.
போய் அந்த மனிதர்களைத் தள்ளி விட்டுவிடலாமா என்று யோசித்தது. இல்லை, இல்லை ….. அது தீர்வு இல்லை. அவர்கள் அங்கிருந்து போகும்வரையில் பதுங்கியே இருந்தது. ஏற்கனவே தினமும் ஓடி ஓடிக் கால்கள் வலுவாக இருந்தன. அய்ந்தாவது நிமிடத்தில் கடகடவென மலையில் இருந்து இறங்கி காட்டுக்குள் ஓடியது.
சிங்கக்கூட்டம், கரடிக்கூட்டம், யானைக்கூட்டம், நரிக்கூட்டம், புலிக்கூட்டம், மான்கூட்டம், சிறுத்தைக் கூட்டம் என எல்லாரிடமும் பேசியது. “வாங்க வாங்க என் பின்னாடி வாங்க” என அழைத்துச் சென்றது. இரண்டு மணி நேரத்தில் காட்டை விட்டு வெளியே வந்தனர். எல்லோருமே, “அய்யோ, விட்டது விட்டபடி போட்டுவிட்டு வந்துட்டோமே வேற காட்டை எங்கே தேடுவது?” என பேசிக்-கொண்டே வந்தன. சிங்மங்டுங் புதிய காட்டைக் கண்டுபிடித்து இருக்க வேண்டும் அங்கு தான் கூட்டிச்செல்கின்றது என நினைத்தன.
மனிதர்கள் நடமாடும் ஒரு பிரதான சாலையை வந்தடைந்தன. மனிதர்கள் என்றால் விலங்கு-களுக்குப் பயம்தான். ஆனால், ஒட்டுமொத்தக் காடும் தங்களுடன் இருக்கும்போது தைரியமாக இருந்தன. “இது நம்ம காடு; இதை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. நாம் இங்க தான் இருக்கப்போறோம். நம்ம எதிர்ப்பினை இந்த மனிதர்களுக்குக் காட்ட-வேண்டும். ஒரு மணி நேரம் நாம் கத்தி கூச்சல் போடுவோம்” என்றது சிங்மங்டுங்.
“ஆஹா, இதுதான் திட்டமா? பலே!” என்று நினைத்து எல்லோரும் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். அந்தக் கூச்சலுக்கு அந்த சுற்று-வட்டாரமே அதிர்ந்தது. நாட்டில் இருந்த தொலைக்காட்சி சேனல்கள் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். மக்கள் பீதியில் உறைந்தனர். ஏன் இப்படி விலங்குகள் கூக்குரல் இடுகின்றன என ஊரெங்கும் நாடெங்கும் உலகெங்கும் பேச்சு. ரகசியமாக வைக்கப்பட்ட உண்மை வெளிவந்தது. எல்லோரும் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த ரகசிய அணைத் திட்டம் ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மக்கள் எல்லோரும் தூரத்தில் நின்று கைத்தட்டவும், விலங்குகளுக்குத் தங்கள் போராட்டத்தின் வெற்றி புரிந்துவிட்டது. மெல்லத் திரும்பி தங்கள் காட்டுக்கு நடையைக் கட்டினார்கள்.
சொல்லவா வேண்டும்! அன்றில் இருந்து சிங்மங்டுங்கினை சூப்பர் கரடி என்றே அழைத்தனர். ஆனாலும் திபுதிபுவென தினமும் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது சிங்மங்டுங்.