தேடல்: ஒமுவாமுவா
அபி
வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்று இணையத்தில் படித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிட அறையை விட்டு வெளியே வந்தாள் கயல்விழி. அப்போது, தொலைக்காட்சியில், நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஒமுவாமுவா “ஒமுவாமுவா.. அட இது மந்திரம் இல்லைங்க! வேறு என்ன? அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம், அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது…’’ என்று பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்த வாரம் வரைக்கும் ஏன் கயல்விழி காத்துக்கிட்டு இருக்கணும்? அதான் அவளுக்கு ஒமுவாமுவா பற்றி ஏற்கனவே தெரியுமே! சென்ற ஆண்டில் ஒரு வானியல் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது, அதைப் பற்றிய ஒரு குறும்படத்தைப் பார்த்தாளே! அந்த நாளை நினைக்கும் போதே அவளுக்குப் புன்னகை வந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அந்த நாளை நினைவு கூர்ந்தாள்.
அன்று, ‘ஹே’ என அவளும், அவளது பள்ளி நண்பர்களுடன் உற்சாகமாய் பேருந்தில் கத்திக்கொண்டு கண்காட்சி நடந்த திடலுக்குச் சென்று இறங்கினர். விரிந்த கண்களுடன் குறிப்பேடும் கையுமாகத் திடலை நோக்கி நடந்த அவர்களை, அவர்களது அறிவியல் ஆசிரியர் பின்தொடர்ந்தார். ஆம், மாணவர்களைத்தான் ஆசிரியர் பின் தொடர்ந்தார். அடுத்த தலைமுறை தைரியமாகவும் தனித் தன்மையோடும் இருக்க வேண்டும் என்று அவர் நம்புவதால், பின்னே நின்று அவர்கள் சரியாக இருக்கும்போது தட்டிக் கொடுத்தும், தவறு செய்யும்போது கண்டித்தும் அவர்களை வளர்த்தார். பயணத்தின் முதல்நாளே, அறிவியல் ஆசிரியர், கண்காட்சியில் அறிவியல் ஆய்வுகளும், ஒரு குறும்படமும் பார்க்கப் போகிறோம் எனக் கூறியிருந்தார். திடலுக்குள் நுழைந்தபோது, அங்கு இருந்த மாணவர்கள் அறிவியல் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டும், அதற்கான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டும் இருந்தனர். நேரம் போனதே தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு, கடிகாரத்தின் சிறிய முள் ஒன்றையும், பெரிய முள் பன்னிரண்டையும் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது பசிக்க ஆரம்பித்தது. பரிசோதனைகளைப் பார்த்து முடித்தவுடன், ஒரு குறும்படம் பார்க்கத் திட்டமிட்டு இருந்தார் ஆசிரியர். ஆனால், குறும்படம் காண்பிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், உணவு சாப்பிட்டு விடலாம் என்று அனைவரும் சென்றனர். ஒரு மரத்தடியில் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு நடந்த ஆய்வுகளில் புரியாதவற்றை, ஆசிரியர் விளக்கினார். பின்னர், ஒரு வழியாக ஒரு மணி நேரத்தை ஓட்டிவிட்டு, குறும்படம் காண்பிக்கப்படும் அரங்கத்தை நோக்கி நடந்தனர்.
குடும்பத்துடன் படம் பார்த்துப் பழகியவர்களுக்கு, நண்பர்களுடன் முதல்முறையாகப் படம் பார்க்கப் போகிறோம் என்கிற நினைப்போடு சேர்ந்து ‘3டி’யில் படத்தைப் பார்க்கப் போகும் நினைப்பும் உற்சாகத்தை வரவைத்தது. அரங்கம் முழுவதும் இருட்டு. குறும்படம் ஆரம்பித்ததும், பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வெளியே வந்து நிலவைத் தாண்டி, வியாழனைத் தாண்டி, கொஞ்சம் கொஞ்சமாக சூரிய மண்டலமே சுருங்கி, இரண்டு உடுக்களுக்கு (star)) நடுவில் இருக்கும் விண்வெளியான உடுக்களிடைக்கு (interstellar space) வந்து சேர்ந்ததுபோல் இருந்தது, கயல்விழிக்கும் அவளது நண்பர்களுக்கும்! இந்த உடுக்களிடையில் எந்த ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையும் இருக்காது. திடீரென்று கருஞ்சிவப்பு நிறத்தில், வால்மீன் போன்ற ஒரு வடிவைக்கொண்ட ஒரு விண்பொருள் அவர்களின் கண்களுக்கு அருகில் ‘சடார்’ என்று ஒரு மூலையில் இருந்து சூரிய மண்டலத்தை நோக்கிச் சென்றதுபோல் இருந்தது. அந்தப் பொருள் என்ன என்று பக்கத்தில் இருந்தவரிடம் கேட்கும்போது ஒமுவாமுவா என்று திரையில் வந்தது. கயல்விழி, அரங்கத்திற்கு வெளியே இருக்கும்போதே பெயர் வித்தியாசமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
உடுக்களிடையில் இருந்து மாறிய காட்சி, வேகமாகப் பூமியில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில் 2017, அக்டோபர் 19ஆம் தேதிக்கு வந்தது, பார்வையாளர்களும் தான்! அன்று ஆய்வகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அன்றுதான் ஒமுவாமுவா எனும் விண்பொருளை முதன்முதலில் கண்டுபிடித்தனர். “ஹே!’’
அதனுடைய வடிவத்தைப் பார்க்கும்போது, வால் நட்சத்திரமாக இருக்குமா? எனக்கு என்னமோ, அதன் நிறமும் நிலையில்லா வெளிச்சமும், சிறு கோளோன்னு தோனுது. ஒருவேளை இது ஏன் வேற்றுக் கிரகவாசிகளின் வேலையாக இருக்கக் கூடாது? என்று அங்கு இருந்த ஆய்வாளர்கள் இரவும் பகலுமாக ஆய்வு நடத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்ததை நேரில் காண்பதுபோல் உணர்ந்தனர், கயல்விழியும் அவளது நண்பர்களும்.
ஆய்வுகளுக்குப் பிறகு, ஒமுவாமுவாவை வால் நட்சத்திரம் என முடிவு செய்து அந்த விண்பொருளுக்கு, C/2017 U1 என்று அறிக்கை விடும்போது நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் ஆய்வாளர்கள். அப்போது, கயல்விழியின் தோழி அவளிடம், “அது எப்படி, எந்த ஒரு திருப்பமும் இல்லாமல், ஓர் ஆய்வு முடிவுக்கு வரும்” எனக் கேட்டுக் கொண்டு இருந்தபோது, படத்தில் கதையை வேகமாய் முன் நகர்த்தியது போல் மறு ஆய்வுக்குப் பிறகு நிச்சயமாக ஒமுவாமுவா என்பது வால் நட்சத்திரம் இல்லை என அங்கு படத்தில் இருந்த அனைத்து ஆய்வாளர்களும் சொல்லிவிட்டு, வேறு என்னவாக இருக்கும் என குழம்பியபோது, கயல்விழிக்கு, அவர்களை நினைத்துப் பாவமாகவும் இருந்தது. அதோடு, “என்னதான்பா இந்த ஒமுவாமுவா?’’ என்கிற கேள்வியும் வந்தது.
அப்படியே படத்தை வேகமாக முன் நகர்த்தியது போல், 2018ஆம் ஆண்டுக்குச் சென்றது காட்சி. அந்த விண்பொருளில் வால் நட்சத்திரத்தின் செயல்பாடுகள் இல்லாததால், அவற்றை ஒரு வழியாக சிறு கோள் என முடிவு செய்து அதன் பெயரை, A/2017 U1 என்று மாற்றினர் ஆய்வாளர்கள். ஆனால், ஒமுவாமுவா பற்றிய ஆய்வில் பல மாற்றங்கள் நடந்துள்ளதை கயலால் உணர முடிந்தது. இப்போ என்ன மாற்றம் வரப் போகுதோ என்பது போல் பார்த்த கயலுக்கு, ஏமாற்றம் மிஞ்சவில்லை. ஆய்வகத்தில் இருந்த கதைக்களம், மீண்டும் விண்வெளிக்குச் சென்றது. பூமியிலிருந்து, புதனைத் தாண்டி, சூரியனுக்கு மிக அருகில் போனதுபோல் இருந்தது அந்தக் காட்சி. ஆம், ஒமுவாமுவா, சூரியனுக்கு மிக அருகில் சென்று பின்னர் அதன் பாதையை மாற்றிக் கொண்டது. இதை விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தபோது, மீண்டும், ஆய்வகத்திற்கு வந்து சேர்ந்தனர், பார்வையாளர்கள். இந்த அளவுக்கு அருகில் சென்று பாதையை மாற்றியது, சிறுகோளால், கண்டிப்பாக முடியாதே என மீண்டும் குழம்பியது அவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு, ‘3டி’ மூலம் அவர்களுடன் ஆய்வகத்தில் இருந்த கயல்விழியும் அவளது நண்பர்களும்தான். திரையில் வந்த வேகத்தின் அளவைப் பார்த்து, ‘ஆஆஆ’ என்று பல குரல்கள் கேட்டன. ஆம், ஒமுவாமுவா, 1 நொடிக்கு 26.4 கி.மீ. வேகத்தில் பயணம் செய்கிறது. இந்த வேகத்தில் சூரிய மண்டலத்தில் எந்த ஒரு விண்பொருளும் இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஆய்வகத்தில் இருந்து, விண்-வெளிக்குப் பயணமானது, காட்சி 26.4கி.மீ/நொடியில் பயணமாகிக் கொண்டிருந்த ஒமுவாமுவா முழுவதும் சிவப்பு நிறத்தில் இருந்தது. அப்படிச் சென்று கொண்டிருந்த விண்பொருளின் மேல் விண்வெளியில் இருக்கும் அலைக்கற்றைகள் பட்டுக் கொண்டு இருந்தன. ஒருவேளை உலோக வளம் நிறைந்த விண்பொருளாக ஒமுவாமுவா இருந்து, அதன் மீது தொடர்ந்து பட்ட விண்வெளி அலைக்கற்றையால் (Cosmic Rays) சிவப்பு நிறம் வந்து இருக்கலாமோ என்று கயல்விழிக்கு ஆர்வம் தாங்கவில்லை!
பலமாத ஆய்வுகளுக்குப் பிறகு, 2018ஆ-ம் ஆண்டு, ஜூன் 27 அன்று சூரியனின் ஈர்ப்பு விசையில் ஒமுவாமுவா இயங்கவில்லை என்பதால், நிச்சயமாக அது வால்நட்சத்திரமும் இல்லை, சிறு கோளும் இல்லை என்றனர் ஆய்வாளர்கள். ஒமுவாமுவா ஓர் உடுக்களிடை விண்பொருள் (Interstellar Object) என அக்டோபர், 2018இல் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். மேலும் எந்த மாற்றமும் வந்து விடக் கூடாது என கயல் மட்டும் நினைக்கவில்லை, அவளது நண்பர்களும் அதையே நினைத்தனர். அவர்கள் நினைத்தது போலவே வேறு எந்த மாற்றமும் வரவில்லை. அந்த உடுக்களிடை விண்பொருளுக்கு 1I.1I/’Oumuamua 1I/2017 U1 எனப் பெயரிட்டபோது, ஆய்வாளர்களின் முகங்களில், முதன்முதலில் உடுக்களிடை விண்பொருள் கண்டுபிடிக்கப் பட்டபோது மகிழ்ச்சியுடன் அளவு கடந்த ஆர்வமும் தெரிந்தது.
ஆய்வுக்கூடம் அதோடு அமைதியாகவில்லை, ஒமுவாமுவா சூரிய மண்டலம் போன்ற வேறு ஒரு மண்டலத்தில் இருந்து வந்து இருக்கலாம் என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களாலும், அதன் கூற்றமைப்பு என்னவாக இருக்கும் என்கிற கேள்விக்கு, பதில் கூற முடியவில்லை. 2019, ஜூலையில், இது ஓர் இயற்கையான விண்பொருள்தான். வேற்றுக் கிரகவாசிகள் எதுவும் இல்லை என ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தபோது, திரையில், கொஞ்சம் கொஞ்சமாக ஆய்வுக் கூடம் மறைந்து, மீண்டும் சூரியமண்டலம் சுருங்கத் தொடங்கியது. ஒமுவாமுவா பெகஸஸ் (Pegasus) எனும் நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஒமுவாமுவாவுடன் நகர்ந்து கொண்டிருந்த கயல்விழிக்கு, இருக்கையை விட்டு நகர மனம் வராமல், அரைமனதுடன், நிறைய சேதிகளைத் தெரிந்துக் கொண்டு இன்னும் வானியல் மீதான அதிகரித்த ஆர்வத்துடனும் அந்த அரங்கத்தை விட்டு வந்ததைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். தொலைக் காட்சியிலிருந்து கிளம்பிய சிந்தனையைக் கலைத்தது அவளது அண்ணனின் குரல்! “இதோ வர்றேன்’’ என்றபடி கிளம்பினாள் கயல்விழி.