பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! புதுப்பானை, புத்தரிசி, புத்துருக்கு நெய்… புத்தாண்டு!
அன்பிற்கினிய பேத்தி, பேரன்களே!
உங்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்துகள்! ஆங்கிலப் புத்தாண்டும் சரி, தமிழ் புத்தாண்டும் சரி இப்போது வரவிருக்கின்றன அல்லவா? அதனால் தான் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
ஜனவரி முதல் நாளில் ஆங்கிலப் புத்தாண்டு; தை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு!
ஆனால், பின்னாளில் தமிழ்ப் புத்தாண்டைக் கூட சித்திரை மாதத் தொடக்கம் என்று, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பினால் இங்கே மாற்றிவிட்டார்கள்.
நம் தமிழறிஞர்கள் கூடி, ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்’ என்று மீட்டுருவாக்கம் செய்து அறிவித்தனர். ஆனால் அதைச் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனர், பின் வந்த ஆட்சியாளர்கள்.
கலைஞர் தாத்தாதான் ‘தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்’ என்று ஆணை போட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டிலும், உலகெங்கும் உள்ள தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, செல்வி.ஜெயலலிதா முதலமைச்சர் ஆன பிறகு, காழ்ப்புணர்ச்சியினால் அதை மாற்றி பழையபடி ‘சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு’ என்று அறிவுக்கு பொருந்தாததையே புதுப்பித்தார்; வீம்புக்காக!
புத்துருக்கு நெய்யும், புதுப்பானையும், புதுப்பொங்கலும் நமக்கெல்லாம் புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தரக்கூடியவை.
புத்தாடை உடுத்துவார்கள்; இனிக்கும் செங்கரும்பைச் சுவைப்பார்கள்; “பொங்கலோ பொங்கல்” என்று முழங்கி, மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
ஆனால் இவ்வாண்டும் கொரோனா கொடுந்தொற்று (கோவிட்-19) புது உருக் கொண்டு (ஓமைக்ரான் என்ற பெயரில்) அச்சுறுத்துகிறது.
எனவே நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் கொண்டாடும் அதே நேரத்தில், அலட்சியமாக இருக்காமல், கைகளை நன்றாகச் சோப்புப் போட்டு அடிக்கடி கழுவுதல் அவசியம் – அவசரம்!
ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறந்திருந்தால், வகுப்பிற்குப் பாதுகாப்பான முகக்கவசத்துடன் செல்லுங்கள்.
தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டில் இருக்க நேரும்போது படியுங்கள், மூளைக்கு வேலை கொடுக்கத் தவறாதீர்!
இந்த ஆண்டு என்னென்ன செய்து, முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிடக் கூடுதலாக நம்மை வளர்த்து எப்படி முன்னேறுவது என்று திட்டமிட வேண்டும். உங்கள் வீட்டில் பெற்றோர்கள், வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரின் உதவி, தேவைகளைக் கேட்டுப் பெறுவீர்!
‘அதிருஷ்டம் இல்லை எனக்கு’ என்று சிலர் முணுகுவது காதில் விழுகிறது. அது ஆதாரமற்ற பொய்யான வாதம்!
’அதிருஷ்டம்’ என்ற வடமொழிச் (சமஸ்கிருதச்) சொல்லுக்குப் பொருள் என்ன என்று புரியாமல் பலரும் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
’திருஷ்டம்’ என்றால் பார்வை; ‘அதிருஷ்டம்’ என்றால் பார்வையின்மை -_ குருட்டுத்தனம்! வழி தெரியாமல் வருவதற்குப் பெயர் தான் அதிருஷ்டம் என்கிறார்கள். அதாவது உழைப்பினால் கிடைத்தது அல்ல. எனவே, அதிருஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளலாமா? வருத்தப்படலாமா?
‘அதிருஷ்டத்தை நம்பாமல், வாழ்க்கையில் முன்னேறலாம்! முன்னேறியே தீருவோம்!’ என்ற தன்னம்பிக்கையால் சிகரத்தை எட்டிப்பிடிக்க புத்தாண்டில் உறுதி ஏற்று, பெரியார் தாத்தா வழியில் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்!
இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி