புரியாத புதிர் அல்ல! : கடவுளின் கண்களா?
சரவணா ராஜேந்திரன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நன்னீர் ஏரிதான் பெரியாசா ஏரியாகும் (Lake Berryessa). இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைப் பகுதியில் இருந்து நீர் அதிகம் வந்து ஏரி அடிக்கடி நிறைந்து தண்ணீர் வீணாவதால் இங்கு மண்டீஸ்லோ அணை கட்டப்பட்டது.
இந்த அணைக்கு அருகில் மின்சாரம் தயாரிக்க பல பெருந்துளைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீரை வெளியேற்றி அதில் உள்ள சுழற்கருவிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதில் ஒரு பெரும்துளை ஏரிக்கும் சாலைக்கும் அருகில் உள்ள ஒன்று ஆகும். இது கிணறு போன்ற அமைப்பைக் கொண்டது. 2017ஆம் ஆண்டு இந்த ஏரி முழுக்கொள்ளளவை எட்டியபோது அந்தப் பெரிய கிணறு போன்ற அமைப்பு நிறைந்து அதன் உள்ளே தண்ணீர் சென்றது.
இது பார்ப்பதற்கு வியப்பான ஒன்றாக அமைந்தது. உடனே இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டு ‘கடவுளின் கண்கள்’ என்று கூறி பரப்ப ஆரம்பித்தனர். சில மத அமைப்பினர் உலகின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்றும், கடவுள் உலகை விழுங்கத் துவங்கிவிட்டார் என்றும் கூறி கதைவிட்டனர். ஆனால், சில நாள்களிலேயே ஏரித் தண்ணீர் வடியத் துவங்கிய பிறகு இந்தக் கட்டுக் கதைகள் அனைத்தும் புஸ்வாணமாகிப் போயின.
வேற்று கிரக வாசிகளின் மூச்சு?
கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் உள்ளது ஆபிரகாம் ஏரி. இந்த ஏரியும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய செயற்கை ஏரி ஆகும். ராக்கீஸ் மலைத்தொடரில் உள்ள நீர் பாய்ந்தோடி ஆண்டுதோறும் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, அந்த நீரை நீர் மின்சாரம் தயாரிக்கவும், குடிநீராகவும் பயன்படுத்த இந்த ஏரி உருவாக்கப்பட்டது.
1972ஆம் ஆண்டு இந்த ஏரி அமைக்கப்படுவதற்கு முன்பு இந்த ஏரி இருந்த பகுதி மீத்தேன் வாயு அதிக அளவு வெளியேறும் பகுதியாக இருந்தது.
ஏரி அமைக்கப்பட்ட பிறகு குளிர்காலத்தில் பனியால் இந்த ஏரி முழுமையாக உறைந்த பிறகு மீத்தேன் வெளியேற முடியாமல் பனியால் உறைந்த ஏரிகளில் அழகிய அடுக்கடுக்கான தட்டுகள் போல் வரிசையாக நின்று விடுகின்றன.
இவை மீத்தேன் காற்றுக் குமிழ்கள் ஆகும். இந்தக் காற்றுக் குமிழை உடைத்து தீக்குச்சியைப் பற்றவைத்தால் அந்தக் குமிழில் உள்ள மீத்தேன் தீப்பற்றும்.
ஆனால் இதனை, அங்கு சுற்றுலா வருபவர்களிடம் இது வேற்று கோள்களில் இருந்து வந்தவர்களால் கட்டப்பட்டது; அவர்கள் இந்த ஏரி கட்டப்பட்ட பிறகு இங்கிருந்து வெளியேற முடியாமல் ஏரியின் உள்ளேயே தங்கிவிட்டனர்; அவர்கள் விடும் மூச்சுக் காற்றுதான் இந்த காற்றுக்குமிழ் தட்டுகள் என்று கதைவிடத் துவங்கி விட்டனர்.
அதேபோல் சில வேற்றுக் கோள் வாழ் உயிரினம் குறித்த திரைப்படங்களிலும் இந்த ஏரியைக் காண்பித்ததால் பலரும் இதனை உண்மை என்றே நம்பிவிட்டனர்.