சாதனை : இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்துப் பெற்ற பல்துறைச் சாதனைச் சிறுமி
‘சாதனை’ என்னும் சொல் சிறியதாக இருப்பினும், அந்தச் சாதனைகளைச் செய்வதற்கு ஒவ்வொருவரும் கடினமான உழைப்பும், முயற்சியும் நாள்தோறும் செய்ய வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட சாதனைகள் பலவற்றைத் தனது 8 வயது முதலே செய்யத் துவங்கி இன்றுவரை பல்வேறு வெற்றிகளையும், பதக்கங்களையும் பெற்று தமிழ்நாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கோவையைச் சேர்ந்த தர்ஷினி. இவரது சாதனைப் பயணம் முதலில் ஸ்கேட்டிங் (Skating) விளையாட்டில் தொடங்கியது. 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தொடர்ந்து தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அது மட்டுமின்றி தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டத்திலும் தமிழ்நாட்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் 2017, 2018, 2019, 2020 என தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். தடகளத்தில் 2020ஆம் ஆண்டு மாவட்ட அளவில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனைகளைப் பாராட்டும் வகையில் ‘பிரைட் ஆஃப் தமிழ்நாடு விருதினைப்’ பெற்றார். ஸ்கேட்டிங்கில் 41 நிமிடங்களில் 10.5 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங் செய்து ‘ஆசியா சாதனையாளர்கள் புத்தகத்தில்’ (Asia book of records) இடம் பிடித்துள்ளார்.
தர்ஷினியின் சாதனைகளை ‘சிம்ப்ளிசிட்டி’ செய்தி நிறுவனம் ஒரு தொகுப்பாக கடிதத்துடன் இங்கிலாந்து மகாராணிக்கு அனுப்பி வைத்தனர். இதைப் பார்த்த ராணி, தர்ஷினியின் சாதனைகளைப் பாராட்டியும், வாழ்த்தியும் கடிதம் ஒன்றை அனுப்பி ஊக்கப்படுத்தியுள்ளார். தனது இரண்டு ஒளிப்படங்களை தர்ஷினிக்குப் பரிசாகவும் கொடுத்துள்ளார்.
சாதனையாளர்கள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். விடா முயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமுமே ஒருவரைச் சாதனையாளராக மாற்றும் என்பதை தர்ஷினியைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம் பிஞ்சுகளே!